Take a fresh look at your lifestyle.

தோற்றச் சுடரொளிகள் ! – மாவீரர்நாள் 2018 சிறப்புக்கட்டுரை

 

தாம் வாழ்ந்த காலத்தில் மனிதப்பிறவிகளுக்கு, மற்றெல்லாவற்றையும்விட மானம்தான் பெரிதென்று உணர்த்திச் சென்றவர்கள்தான் மாவீரர்கள். காலத்தால் கருத்தரிக்கப்பட்டவர்கள் இந்த மாவீரர்கள். உலகின் மூத்தகுடிகளில் ஒன்றாகிய ஈழத்தமிழினம் அமைதிவழியில் தனக்கான உரிமைகளுக்கு குரல்எழுப்பி , சொல்லவொண்ணாத் துயர்களில் ஆழ்ந்து, மீளவழியின்றித் தத்தளித்தபோது உருவானதே தமிழர்களின் ஆயுதவழித் தாயக விடுதலைப்போராட்டம். எல்லாவழிகளிலும் போராடிக்களைத்த இனத்தின் ஒளிஞாயிறாக உருவாகிய தேசியத்தலைவர் அவர்களின் தலைமையில் உருவான மண்மீட்புப்போரில் தங்களை ஆகுதியாக்கிக் கொண்டவர்கள்தான் இவர்கள்.

இவர்களில் கரந்தடிப் போராளியாக வாழ்ந்து பகைவர்களின் திடீர்சுற்றிவளைப்பொன்றில் விழுப்புண்ணடைந்து , பின்னர் வீரச்சாவை அணைத்துக்கொண்ட லெப்.சங்கர் தான் முதல்மவீரனாகிறான். இவனின் அடியொற்றித்தான் பின்னர் உன்னதமான உயிர்க்கொடைகள் உன்னதமடைந்தன.
இவர்கள் வெறுமனே செத்துமடிந்தவர்கள் அல்ல. இவர்கள் தம் இனத்தின் விடுதலைக்காக தங்கள் வாழ்வைமட்டுமன்றி, உயிரையும் ஒறுத்து இனத்தின் வரலாற்றில் நிலைத்தவர்கள். ‘ என்பும் உரியர் பிறர்க்கு’ என்ற வள்ளுவனின் வாக்கிற்கு இணங்க வாழ்ந்த பெருந்தகையாளர்கள் இவர்கள்.

 

லெப்டினன்ட் சங்கர்

அநீதிக்கும் அடக்குமுறைக்கும் எதிராகப்போராடி, தங்களை ஒப்புவித்துச் சென்றுள்ளார்கள் இந்த மானமாமறவர்கள். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு பேச்சுவார்த்தைகளை பல்வேறு தரப்பினர்களுடன் நடாத்தி, அவை பலனளிக்காத நிலையிலேயே ஆயுதம் தாங்கிய போராட்டம் உருவானது. இதில் கருத்தொருமித்து இணைந்து, போராடி உயிர்விதையானவர்களே மாவீரர்கள். தங்களுடைய இனம் தலைநிமிர்ந்து சுதந்திரப்பிறவிகளாக வாழவேண்டும் என்பதற்காக தம்மை ஒப்புவித்துப்போராடி, மரணித்தவர்களே இவர்கள்.

தமிழர்தாயக நிலமீட்புப் போராட்ட வரலாறு பல்வேறு நெருக்கடிகளையும் அழுத்தங்களையும் ஊடறுத்து, நிமிர்ந்து நேரிய வழியிற் பயணிப்பதற்கு காரணமானவர்களாக இந்த மாவீரர்களே திகழ்கின்றார்கள்.

தொடக்க காலத்தில் போராட்டத்துக்கான ஆயுதம்வாங்க தன்னிடமிருந்த பசுமாடுகளை விற்றுப் பணம் கொண்டுவந்த லெப். செல்லக்கிளி. 1987 இலே வடமராட்சியில் கோரத்தாண்டவமாடி, வெற்றி மமதையில் கொக்கரித்து நின்ற nஐயவர்த்தன அரசை கலங்கடித்த நெருப்பு மனிதன் கப்டன் மில்லர், பின்னர் இந்திய அமைதிகாக்கும் படை என வந்து தமிழ்மக்களின் பேரெழுச்சியை நசுக்க முனைந்தவர்களை முகத்தோலுரித்த லெப்.கேணல் திலீபன், பெண்விடுதலைக்கனவோடு களமாடி உயிரீந்த 2ம் லெப். மாலதி, இந்திய அமைதிப்படை அமைதிகாக்க வரவில்லை என்பதை உலகிற்கு உணர்த்திய நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதி என வரலாற்றின் நீட்சியில் எண்ணற்ற மாவீரர்கள் தாயகவிடுதலைக்கு அவ்வப்போது ஏற்பட்ட நெருக்கடிகளையும், தடைகளையும் உடைத்தெறிந்திருக்கிறார்கள். நிலப்பறிப்புக்கு முனைந்த படையினரின் நடவடிக்கைகளை உடைத்தெறிந்திருக்கிறார்கள். பல படைத்தளங்களுக்குள் புகுந்து அவற்றை வீழ்ச்சியுறவைத்து வெற்றிகளை பெற்றுத்தந்துவிட்டு விழிகளை மூடிக்கொண்டவர்கள் இவர்கள்.

தமிழர்களின் கடற்பரப்பில் தம்முடைய ஆதிக்கத்தை நிலைநாட்டி, கரையோரப்பகுதிகளில் வாழ்ந்த தமிழ்மக்களை அச்சுறுத்தி வந்த கடற்படையினரின் கொட்டத்தை அடக்கி, ஆழக்கடல்முழுவதும் ஈழக்கொடி பறக்கவைத்த கடற்புலிகள். சாகரவர்த்தனா என்ற பெருங்கடற்படைக் கப்பலை மூழ்கடித்து, அதன் கப்டனை கைதுசெய்வதற்கு தன்னுயிரை வெடியாக்கிய லெப்.கேணல் நளாயினி, நீருக்குள் மூழ்கிச் சென்று காங்கேசன்துறைக்கடற்பரப்பில் சாதனை படைத்த கப்டன் அங்கையற்கண்ணி என வரலாறு தன் பக்கங்களை விரித்துச்சென்றுள்ளது.  
தமிழர்களின் தாயகவிடுதலைப்போராட்டம் உலகமுன்றலில் புதுவடிவம்பெறுவதற்கு இந்த மானமாவீரர்களின் ஒப்பற்ற ஈகங்களே காரணமாகின்றன. தமிழர்களின் ஆயுதப் போராட்டம் இன்று அமைதியுற்றுப்போனாலும், தனியரசொன்றை நிர்வகிக்கும் திறன் தமிழர்களிடம் உண்டென்பதை உலகிற்கு உணர்த்தியவர்கள் இவர்கள். இன்றும் புதியதோர் அமைதி வடிவில் தமிழர்கள் தம் விடுதலை உணர்வை, எழுச்சியை முன்னெடுத்துச் செல்லவும் இவர்களே வழிசமைத்து நிற்கின்றார்கள். இவர்களைப் பெற்றெடுத்த பெற்றோர்கள் மிக உயர்ந்தவர்கள்.

 
எம்மின விடுதலைக்கு ஆயிரமாயிரமாக உயிரீந்து, வலுச்சேர்த்த மாவீரர்களின் ஈடிணையற்ற ஈகங்கள் ஏராளம். இவற்றை எமது அடுத்தடுத்த தலைமுறையினரின் மனங்களிலே விதைத்து, அவர்களை எம்தேசத்தின் பற்றாளர்களாக ஆக்கவேண்டியபணி எம்முன் எழுந்துநிற்கின்றது. பத்து, நூறு, ஆயிரம் பல்லாயிரமாக பெருகிவிட்டது மாவீரர்களின் எண்ணிக்கை. இந்நிலையில் இவர்கள் அனைவருக்கும் பொதுவான நாளாக, மாவீரர்நாள் நொவம்பர் 27 அன்று தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் 1989 இல் பிரகடனப்படுத்தப்பட்டதை எல்லோரும் அறிவோம்.


இந்தநாள் தமிழர்களின் வாழ்வின் மிக உன்னதநாளாக உள்ளது. எத்தனை அச்சுறுத்தல்கள், தடைகள், நெருக்கீடுகள் ஏற்பட்ட போதிலும் தமிழ்மக்கள் மாவீரர்நாளை கடைப்பிடிக்க தவறியதில்லை. மாவீரர்கள் தான் விடுதலைப் பேரொளியாக தமிழ்மக்களின் மனங்களுக்குள் புகுந்து, பேரெழுச்சியின் வடிவமாகினார்கள். தமிழர்கள் வாழ்கின்ற ஒவ்வொருநாட்டிலும் இனஉணர்வையும், மொழிப்பற்றையும், விடுதலையின் தேவையையும் உணர்த்தியிருக்கின்றார்கள் மாவீரர்கள். இவர்கள் மூட்டிச்சென்றிருக்கும் விடுதலையின் சோதியை அணைந்துவிடாது பாதுகாத்து, எம் அடுத்தடுத்த தலைமுறையினருக்கு பயனுள்ளதாக்கும் பெருங்கடமை எம்முன்னாலுள்ளது.

இதனாலேயே சினங்கொண்ட பகைவர்கள் மாவீரர்களின் துயிலுமிடங்களை இடித்துநொறுக்கியும், உழுதுகிளறியும் தம் கோரமுகத்தை வெளிப்படுத்தினார்கள். மாவீர்களின் துயிலுமிடங்களைப் பிய்த்தெறிந்துவிட்டால் தமிழர்களின் மனங்களை வென்றுவிடலாம் என்கின்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டது.

பிறப்பும் இறப்பும் எல்லா உயிர்களுக்கும் பொதுவானது எனினும், தம்வாழ்வின் காலத்தை வரலாறாக்கிய பெருமை மாவீரர்களுக்கே உரியது. இந்தப் புனிதமான நாள் பேருண்மைகளை எமக்கு உணர்த்திநிற்கின்றது. தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் ஒருமுறை குறிப்பிட்டதுபோல, நீண்ட விடுதலைப்பயணத்தில் சோர்வுகள் எம்மை ஆட்கொள்ளலாம், போராட்டவாழ்வில் பெரும் சுமைகள் எம்மை அழுத்திப் பிடிக்கலாம். ஆனால் நாம் ஒரு சுதந்திர இலட்சியப் பற்றுக்கொண்டு, உறுதிகொண்ட மக்களாக ஒன்றுதிரண்டு நின்றால் எந்தவொரு சக்தியாலும் எம்மை அசைக்கவோ அழிக்கவோ முடியாது. வீரசுதந்திரம் வேண்டிநிற்கும் மக்களுக்கு உறுதிதான் வலிமையான ஆயுதம்.
தேசியத் தலைவர் அவர்களின் கூற்றை இன்றைய மாவீரர்நாளில் மனங்கொள்ள வேண்டியவர்களாக நாங்கள் அனைவரும் இருக்கின்றோம். இனிமேலும் தமிழ்இனத்தவர்கள் ஒன்றுபட்ட சக்தியாக உருவெடுத்துவிடக்கூடாது என்பதில் பேரினவாதம் பெருங்கவனம் செலுத்திவருகிறது. இதனை தமிழர்களாகிய நாம் எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம். வரலாற்றில் சாதனையாளர்கள் என்றால் அவர்கள் மாவீராகள் தான். அவர்கள்தான் தம்முடைய இலட்சியத்தில் வென்றவர்கள். அவர்களின் உயிர்க்கொடைக்கு முன்னால் நாம் சாதாரண மனிதப்பிறவிகளாகவே உள்ளோம்.

அனைத்து உணர்வுகளுக்கும் அப்பால் நாம் எல்லோருமே தமிழினத்தவர்கள் என்கின்ற பொதுவான உணர்வு எல்லோருக்குள்ளும் உருவாகவேண்டிய சூழல் இன்றுள்ளது. ‘எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார். இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே’ என்கின்ற புரட்சிக்கவிஞன் பாரதிதாசனின் கவிவரிகள் மெய்ப்படவேண்டும் என மாவீரர்களிடம் மனமுருகி வேண்டிக்கொள்வோம்.

தமிழனாகப்பிறந்த ஒவ்வொரு மனிதரும் மாவீரர்களை நெஞ்சிலிருத்தி, நாடுபெரிதென்ற எண்ணத்தை உறுதியாக்கிக் கொள்வதே சிறப்பானதாகும். இதுவே எமது இனத்தின் மீள்விற்காக எம்மை நம்பி தம் உயிர்களை ஒப்புவித்த மாவீரர்களுக்கும் நாம் செய்யும் உண்மையான நினைவுவணக்கமாகவும் அமையும்.

‘சத்திய இலட்சியத் தீயில் தம்மையே அழித்துச் சரித்திரமாகிவிட்ட எம் மாவீரர்கள் வழியில் சென்று, நாம் எமது இலட்சியத்தை அடைவோமென உறுதியெடுத்துக்கொள்வோமாக’ எனும் தேசியத்தலைவரின் எண்ணம் எல்லோர் மனதிலும் நிலைபெறட்டும்.

தாரகம் இணையத்திற்க்காக

– சிவசக்தி –

%d bloggers like this: