Take a fresh look at your lifestyle.

மாவீரர்கள்

தமிழர் தாயகத்திலும், தமிழர்கள் புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் நாடுகளிலும், தமிழகத்திலும் மாவீரர் தினம் இன்று உணர்வெழுச்சியுடன் அனுஷடிக்கப்படுகின்றது. ஒரு வாரகாலமாக இடம்பெற்ற மாவீரர் வாரத்தின் இறுதியில் இன்றைய மாவீரர் தினத்தில் எமக்காக தமது இன்னுயிர்களை ஈந்த போராளிகளை ஈழத் தமிழினம் நினவுகூர்கின்றது.

வடக்கு – கிழக்கில் பல்வேறு இடங்களிலும் கடந்த புதன்கிழமை மாவீரர் வாரம் ஆரம்பமாகியது. விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து போராடி வீரகாவியமான மாவீரர்களை நினைவு கூர்ந்து தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் நவம்பர் 21 முதல் 27 வரை மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

களத்தில் போராடி முதலாவதாக வீரகாவியமான செ.சத்தியநாதன் (சங்கர்) மரணமடைந்த தினமே மாவீரர் தினமாக தேசியத் தலைவரால் பிரகடனப்படுத்தப்பட்டது. சங்கர் வீரகாவியமானது 27-11-1982 அன்று மாலை 6.05 மணிக்கு ஆகும். அந்த 6.05 மணிக்கு சுடரேற்றி மாவீரர்களை நினைவு கூர்வதை தலைவர் வழமையாக்கியிருந்தார்.

மாவீர் வாரத்தை முன்னிட்டு பல நிகழ்வுகள் கடந்த ஒரு வாரமாக பல இடங்களிலும் நடந்தன. அத்துடன் மாவீரர் பெற்றோர் கெளரவிப்பு நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன. யாழ்ப்பாணத்தில் மாவீரர் தின நிகழ்வுகளைத் தடை செய்ய வேண்டும் எனக் கோரி சிறிலங்கா படையினர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கின்ற போதிலும், இத்தினத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்பதில் பொது மக்கள் அக்கறையாகவுள்ளார்கள்.

வடக்கிலும் கிழக்கு மாகாணத்திலும் படையினரின் தடைகள், அச்சுறுத்தல்களைத் தாண்டி மாவீர்களை நினைவு கூர்வதில் மக்கள் காட்டிவரும் அக்கறை தெளிவான செய்திகளைச் சொல்கின்றன. மாவீர்கள் கொண்டிருந்த இலட்சியத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதில் மக்களுக்குள்ள அக்கறை, அவை நிறைவேற்றப்படாததால் மக்களுக்குள்ள ஆதங்கம், ஆக்கிரமித்துள்ள படையினர் மீதான சீற்றம், அரசின் மீதான கோபம் என அத்தனையையும் மக்கள் பிரதிபலிக்கின்றார்கள்.

புலிக்கொடிகளையும், சின்னங்களையும் பயன்படுத்தக் கூடாது என்ற ஆக்கிரமிப்பாளர்களின் தடைகளுக்கு மத்தியிலும் புலிக்கொடிகளைக் காண முடிகின்றது. அதனைவிட அத்தனை மக்களின் மனங்களிலும் பதிந்துள்ள சின்னமும் அதுதான். அதனை ஆக்கிரமிப்பாளர்களால் எதுவும் செய்துவிட முடியாது என்பதை மக்களின் உணர்வுகளில் காண முடிகின்றது.

சிறிலங்காவின் சிங்கள பேரினவாத அடக்குமுறையிலிருந்து விடுபடுவதற்காக 30 வருடங்களாக நடைபெற்ற அரசியல் மற்றும் சாத்வீகப் போராட்டங்கள் தோல்வியில் முடிவடைந்ததையடுத்தே ஆயுதப் போராட்டம் ஒன்றை நோக்கி தமிழ் இளைஞர்கள் தள்ளப்பட்டார்கள். அது அவர்கள் விரும்பி ஏற்றுக்கொண்டதல்ல. கௌதம புத்தரை முன்னிலைப்படுத்தும் சிங்கள – பௌத்த இனவாதிகள் புத்தரின் கொள்கைகளைக் கடைப்பிடிக்கவில்லை. அதனால்தான் ஆயுதம் தூக்க வேண்டிய நிர்ப்பந்தம் தமிழர்களுக்கு ஏற்பட்டது.

தமிழ்த் தலைவர்கள் முன்னெடுத்த சாத்தவீகப் போராட்டங்கள் சிங்கள இனவாத ஆட்சியாளர்களால் கொடூரமாக ஒடுக்கப்பட்டன. சாத்வீகப் போராட்டங்கள் இரத்தக்களரியில் முடிந்தன. பிரச்சினைகளுக்கு அரசியல் ரீதியான தீர்வைக் காண்பதில் ஆளும் தரப்பினர் அக்கறை காட்டவில்லை. போராட்டங்களைக் கொடூரமாக ஒடுக்குவதும் தாம் நினைக்கும் தீர்வைத் திணிப்பதும்தான் அவர்களுடைய இலக்காக இருந்தது. அதற்காக இராணுவத்தை அவர்கள் பயன்படுத்தினார்கள். கொடூர சட்டங்களை நடைமுறைப்படுத்தினார்கள்.

பிரஜாவுரிமைச் சட்டம், சிங்கம் மட்டும் சட்டம், பல்கலைக்கழக அனுமதிக்கான தரப்படுத்தல் என்பன தமிழ் மக்களை இலக்கு வைத்தன. அவை தமிழர்களின் வாழ்வாதாரத்துக்கான தொழில் வாய்ப்பு, கல்வி என்பவற்றுடன் அவர்களுடைய இருப்பையும் கேள்விக்குள்ளாக்கியது. திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் பாரம்பரிய பிரதேசங்களிலேயே தமிழர்களை சிறுபான்மையாக்குவதை இலக்காகக் கொண்டிருந்தது. இந்த நிலையில், இவர்களுடன் இனிமேலும் இணைந்து வாழ முடியாது என்ற நிலையிலேயே தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினார்கள்.

உலக ஆயுதப் பேபாராட்ட வரலாற்றில் விடுதலைப் புலிகளின் போராட்டத்துக்குத் தனியான ஒரு இடம் உள்ளது. வீரமும், அர்ப்பணிப்பும், மதிநுட்பமும் நிறைந்த அவர்களுடைய கெரில்லா தாக்குதல் யுக்திகள் சர்வதேச ரீதியாக ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டவை. ஆனையிறவு தாக்குதல், கட்டுநாயக்க விமான நிலையத் தாக்குதல், குடாரப்பு தரையிறக்கம் என்பன சர்வதேச கொரில்லா யுத்த ஆய்வாளர்களையே வியக்கவைப்பன. வீரமும், மதிநுட்பமும் அதற்குள் உள்ளடங்கியுள்ளன. புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் மிகவும் நுட்பமாக நடத்தப்பட்ட தாக்குதல்கள் அவை.

இந்த மூன்று தாக்குதல்களும்தான் 2002 இல் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைக்கு வருவதற்குக் காரணமாகியது. முதல் முதலாகாக சர்வதேச அநுசரணையுடன் அந்தப் பேச்சுக்கள் ஆரம்பமாகின.

இவ்வளவுக்கும் காரணமானவர்கள் வீரத்துடனும், அர்ப்பணிப்புடனும் வளர்தெடுத்தவர் தலைவர் பிரபாகரன். உலக நாடுகளை திரும்பிப்பார்க்க வைத்தவர் அவர். ஈழத் தமிழர்களுக்கு ஒரு முகவரியை அடையாளத்தைப் பெற்றுக்கொடுத்தவர் அவர். உலகப் போராட்ட வரலாறுகளில் தலைசிறந்த ஒரு தலைவனாக – தளபதியாக தனது பெயரைப் பதித்துக்கொண்டவர் அவர். எதற்கும் அஞ்சாமல், விலைபோகாமல் முடியாது என்ற சொல் என் அகராதியில் இல்லை எனக் கூறி போராட்டத்தை வழிநடத்தியவர் அவர்.

அவரது தலைமையில் உருவான போராளிகளும் அதே தியாகம், வீரம் இரண்டையும் ஒன்றாகக் கொண்டவர்கள். எமது மக்களுக்காக, எமது நிலத்தை நாமே ஆளவேண்டும், எமது தனித்துவம் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்காக இறுதி மூச்சுவரை போராடிய மாவீரர்களை நினைவு கூர்வதும், அவர்களுடைய இலட்சியத்தை முன்னெடுக்க வேண்டியதும் எமது கடமை. தாயகத்தில் மட்டுமன்றி புலம்பெயர்ந்த எம்மவர்களும் இதில் இணைந்துகொண்டிருப்பது நம்பிக்கையைக் கொடுக்கின்றது.

மக்களுக்காக தமது பிள்ளைகளைக் கொடுத்துவிட்டு தவித்துக்கொண்டிருக்கும் மாவீரர்களின் பெற்றோரின் தியாகமும் போற்றப்பட வேண்டிய ஒன்று. அதனைவிட, போராட்டத்தில் தமது உடல் உறுப்புக்களை இழந்து வாழ்வுக்காகப் போராடிக்கொண்டிருக்கும் முன்னாள் போராளிகளின் நிலை என்ன என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. அவர்களுக்காக நாம் என்ன செய்தோம். அவர்களுடைய வாழ்வாதாரத்துக்காக, அவர்களுடைய பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக நாம் என்ன செய்தோம் என்பதும் நாம் அனைவரும் எம்மிடமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகள்.

இன்றைய மாவீரர் தினத்தில் எமக்காக தமது உயிர்களைத் தியாகம் செய்த மாவீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தும் அதேவேளையில், இவை குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும்.