கொடி, இலச்சினை, சீருடைக்கு தடை பாடல்களிற்கும் நினைவு கூரலுக்கும் அனுமதி: சாட்டி துயிலுமில்லம்

breaking
  சாட்டி துயிலுமில்லத்தில் விடுதலைப்புலிகளின் கொடி, இலட்சினை, சீருடைகளை பயன்படுத்தி மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்த ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றினால் தடைவிதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட அமைப்பான விடுதலை புலிகளின் கொடி, இலட்சினை,மற்றும் புலிகளின் சீருடையுடனான உருவப்படங்களை பயன்படுத்துவதை தடை செய்வதாகவும் பாடல்கள் ஒலிபரப்பவும் இறந்தவர்களை நினைவுகூர அனுமதி வழங்குவதாகவும் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. தீவகம் சாட்டி மாவீரர் துயிலுமில்லத்தில் தடைசெய்யப்பட்ட புலிகள் அமைப்பினை நினைவு கூர முற்பட்டுள்ளனர், இந்த நிகழ்வினை தடைசெய்ய வேண்டுமென கோரி ஊர்காவற்துறை நீதிவான் மன்றில் ஊர்காவாற்துறை தலைமைப் காவல்துறையினர் பொறுப்பதிகாரி விகும் வீரசேகர மனுத்தாக்கல் செய்திருந்தார் இம்மனு நேற்று காலை ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற தலைமை நீதிவான் அ. யூட்சன் தலைமையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. புலிகளின் பாடல்கள் ஒலிபரப்புவதனை தடைசெய்ய முடியாதென்றும் புலிகளின் கொடி, இலச்சினை, புலிகளின் சீருடைகளோடு கூடிய உருவப்படங்களை மேற்படி நிகழ்வில் பயன்படுத்துவதற்கு தடைவிதிப்பதாகவும் இறந்தவர்களின் சாதாரண உருவப்படங்களை பயன்படுத்தி அஞ்சலி நிகழ்த்தலாமென்றும் தீர்ப்பு அளித்துள்ளார். கடந்த உள்ளூராட்சி தேர்தலில் சிறிலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் நடத்திய தேர்தல் பிரச்சார கூட்டத்தில் புலிகளின் பாடல்கள் ஒலிபரப்பு செய்யப்பட்டபோது, அதுகுறித்து காவல்துறையினர் எந்தவிதமான நடவாடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இருந்து விட்டு, இறந்தவர்களோடு தொடர்புடையவர்கள் மேற்படி துயிலுமில்லத்தில் பாடல்களை ஒலிபரப்பி உணர்பூர்வமாக அனுஸ்டிப்பதை மாத்திரம் காவல்துறையினர் தடைவிதிக்க கோருவது ஏனென்றும் நீதிவான் கேள்வி எழுப்பினார்.