காவல்துறையினர் கொலை அரசியலுக்காகவே: மாநகர சபையில் கண்டனதீர்மானம்

breaking
  அரசியல் குழப்பத்திற்காகவே மட்டக்களப்பு, வவுணதீவுப் பகுதியில் இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபையில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த செயற்பாட்டை கண்டித்து கண்டன தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகர சபையின் 12 ஆவது அமர்வு மட்டக்களப்பு மாநகர சபை மேயர் தி.சரவணபவன் தலைமையில் இன்று நடைபெற்றபோது மாநகரசபை மேயரினால் குறித்த கண்டனத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரேரணை முன்வைத்து உரையாற்றிய மட்டக்களப்பு மாநகரசபை மேயர் தி.சரவணபவன் தற்போதுள்ள அமைதியை சீர்குலைக்கும் வகையிலேயே இந்த படுகொலை சம்பவம் நடத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார். இதன்போது மாநகரசபை உறுப்பினர்கள் குறித்த படுகொலையினை வன்மையாக கண்டித்ததுடன் இனிவரும் காலங்களில் இதுபோன்ற செயற்பாடுகள் நடைபெறாத வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் என அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அரசியல் குழப்பத்திற்காகவே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களே இதில் தொடர்பு பட்டிருக்கலாம் என தமிழ் மக்கள் மத்தியில் சந்தேகம் காணப்படுவதாகவும் இது தொடர்பில் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.