வீரவேங்கை சிங்கோ மாஸ்ரர்
கந்தையா பகத்சிங்
வந்தாறுமூலை, மட்டக்களப்பு.
வீரப்பிறப்பு:-29.03.1945
வீரச்சாவு:-15.05.1986
நிகழ்வு:-மட்டக்களப்பு மட்டக்களப்பில் சிறிலங்கா அதிரடிப்படையால் கைதாகி முறக்கொட்டாஞ்சேனை முகாமில் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதையின் போது வீரச்சாவு
சிறந்த ஓவியக் கலைஞன் - இந்தியாவில் திரைப் படங்கள் தயாரிக்கும் ஏ.வி.எம் ஸ்ரூடியோ , யாழ்ப் பாணத்தில் செல்லம்ஸ் ஸ்ரூடியோ ஆகியவற்றில் பணிபுரிந்தவர்; மட்டக்களப்பு பிரதேசத்தில் உள்ள பல ஆலயங்களில் ஓவியங்கள் வரைந்தவர். மின் இணைப்பு வேலைகள் செய்பவர். இசைத்துறையில் நாட்டமுள்ளவர். யாழ்நகர் கண்ணன் இசைக்குழுவில் அங்கம் வகித்தவர். இவ்வாறெல்லாம் பல்வேறு துறைகள் மூலமாக மக்களுக்கு அறிமுகமான பகத்சிங் மட்டக்களப்பு பிராந்திய போராளிகளுக்கு விடுதலை விரும்பியாகவே அறிமுகமானார்.
விசேட அதிரடிப்படையினர் அடிக்கடி வந்து போகும் வந்தாறுமூலை அம்பலத்தடியில் ஆபத்தைப் பொருட்படுத்தாது இயக்கப் பணிகளுக்காக நிற்பவர் இவர்தான். சுமார் 20மைல் தூரத்திலுள்ள பயிற்சி முகாமுக்கு தேவையான பொருட்கள் கொண்டு செல்லவேண்டும். வடதமிழீழத்துக்கும் தென் தமிழீழத்துக்குமான போக்குவரத்துப் பணிகளுக்கான முன்னேற்பாடுகள் செய்யவேண்டும். இப்பணிகளில் ஈடுபடுவோருக்கான உணவு வசதிகள் செய்யவேண்டும். அவர்கள் பிரதான வீதியைக் கடப்பதற்கு 'சென்றி' நிற்கவேண்டும். அதிரடிப் படையினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை அனுப்ப வேண்டும் போன்ற இன்னோரன்ன பணிகளுக்காக அவர் அங்கே நிற்பார்.
சிலவேளை நித்திரை செய்வதற்கே நேரம் கிடைக்காது. வந்தாறு மூலைப்பகுதியில் போராளிகள் தங்கவேண்டி ஏற்பட்டால் மணித்தியாலத்திற்கு ஒருவர் என்ற ஒழுங்கில் 'சென்றியில்' நிற்பர். ஆனால் இவருக்கோ நேரக்கணக்குக் கிடையாது, எல்லோர் சென்றியிலும் துணைநிற்பார். போராளிகளை அடிக்கடி கேட்பார்; "எனக்கு றெயினிங் தாங்கோ " –
ஆனால் அவரது வாழ்நாளில் இதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை . இவர் பயிற்சி எடுக்கும் காலத்தில் இவரைப் போல ஈடுசெய்து பணியாற்றக் கூடியவர்கள் வேறு எவரும் இல்லை என்பதால் இவரைப் பயிற்சிக்கு அனுப்ப முடியவில்லை .
யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், மட்டக்களப்பு பகுதி ஆலயங்களில் ஓவியம் வரையும் வேலைக்காகச் சென்றார். அங்கேயே திருமணம் செய்து கொண்டார். இல்லற வாழ்வில் இரு குழந்தைகளுக்கு தந்தையுமானார். மட்டக்களப்பு மாவட்டத்தில் குடும்பஸ்தராக இருந்து கொண்டே முழுநேர உறுப்பினராக வர விருப்பம் தெரிவித்த முதல் ஆள் இவர் தான்.
போராளிகளுக்கு ஆபத்தென்றால் அவர்களுக்கு ஏதாவது தேவை என்றால் இவர் மனம் அமைதியாக இருக்காது. ஒரு முறை ஈரலிக்குளம் பகுதி சிறிலங்காப்படையினரால் முற்றுகையிடப்பட்டது. அப்பகுதியெங்கும் குண்டுச்சத்தங்கள் -வேட்டோசைகள் கேட்டன. அங்கு தான் போராளிகளின் பிரதான முகாம் இருநதது. முற்றுகைக்குள்ளான போராளிகள் காட்டில் வழி தெரியாது அலைந்து திரிகின்றார்களோ எனஇவர் தவிப்புடன் அலைந்து திரிந்துார், முற்றுகை ஆரம்பித்த நேரம் தொடங்கி சிறிலங்காப்படையினர் விலகிச் சென்றதுவரை இவர் போராளிகளைத் தேடிக் கொண்டிருந்தார். எல்லோரும் பத்திரமாகத் தப்பிவிட்டனர். ஒருவருக்குக் கூட ஆபத்தில்லை என்று அறிந்தபின்னரே இவருக்கு நிம்மதி ஏற்பட்டது.
இதற்கிடையில் போராளிகளுக்கான உணவுக்கும் ஏற்பாடு செய்துவிட்டார். ஒவ்வொரு போராளிகளையும் தான் நேரே கண்டு அவர்களுக்குச் சாப்பாடு கொடுத்த பின்னரே, தான் இவ்வளவு நேரமும் சாப்பிடவில்லை என்பதை ஒப்புக்கொண்டார்.
இயக்க கட்டுப்பாடுகளில் மிகுந்த நம்பிக்கை உடையவர் இவர். உத்தரவு பெறாமல் இயக்கத்தின் எந்தப் பொருளையும் தொடக்கூடாது என்ற கருத்துடையவர், 1985ஆம் ஆண்டுக்காலத்தில் இயக்கத்தின் வள்ளங்கள் இவரது பாதுகாப்பிலேயே இருந்தன. அவ்வருடத்தின் மழைக்காலத்தில் போராளிகள் தங்கியிருந்த பகுதியைச் சுற்றியெங்கும் வெள்ளம் காணப்பட்டது. தரை வழித்தொடர்பு துண்டிக்கப்பட்டது. அவர்களுக்கு உணவுப்பொருள்கள்தேவை. எனவே மழையில் நனைந்தபடியே ஒரு தனியார் வள்ளத்தை ஒழுங்குபடுத்தி அதில் பொருள்களை ஏற்றிக்கொண்டு போராளிகள் இருக்குமிடத்தை நோக்கிச் சென்றார்.
அங்கிருந்த போராளிகள் 'ஏன் அண்ணை நம்மட வள்ளத்திலேயே வந் திருக்கலாமே' என்று கேட்டதற்கு 'இயக்கத்தின்ரை வள்ளம் -நீங்கள் இருக்கறபோது நான் எதுவும் செய்யலாம் இல்லாத இடத்தில நான் அதுக்கு ஏற்றமாதிரி நடக்கவேணும். அது தான் வேறை வள்ளம் ஒழுங் குபடுத்தினனான்' என்றார். அவ்வளவு கட்டுப்பாடானவர் இவர்.
கலைஞனுக்கும் போராளிக்குமுரிய அடிப்படைத் தகுதியான மென்மையான மனம் இவரிடமும் காணப்பட்டது. போராளிகளுக்கு ஆபத்து - அவர்களது மரணம் - இப்படியான செய்திகளை தாங்கக்கூடியவரல்ல. ஒருமுறை மட்டக்களப்பு இருதயபுரம் பகுதி முற்றுகையிடப்பட்டது. முற்றுகையிடப்பட்ட பகுதிக்குள் எமது போராளிகள் இருந்தனர். அப்பகுதி முற்றுகையிடப்பட்ட செய்தி கிடைத்தபோது ஒரு போராளி சொன்னான் 'நம்மட ஆக்களும் உள்ள இருக்கிறானுகள். ஆர் ஆர் மண்டையைப் போடுறானுகளோ' - இவர் பதறினார்.
'தம்பி விளையாட்டுக்குக்கூட அப்பிடிச் சொல்லாதேங்கோ. அப்படி ஏதும் நடக்கக்கூடாது தம்பி' என்று சொல்லிவிட்டு போராளிகளின் நலனுக்காக வேண்டி கிருஸ்ணர் ஆலயத்தை நோக்கிச் சென்றார்.
காட்டிக் கொடுக்கும் முகமூடிக் கூட்டங்கள் இழைத்த துரோகங்களுக் தான் நாம் இவரை இழந்த வரலாறும் சேர்ந்திருக்கிறது. இவருக்கெனவே அந்த முற்றுகை நடத்தப்பட்டது.
'சிங்கோ மாஸ்டர் - சிங்கோ மாஸ்டர்' என்று கேட்டபடியே வந்த அதிரடிப்படையினர் இவர் தன்பெயர்பகத்சிங் என்று சொன்னதும் விட்டு விட்டனர். ஆனால் அந்தத் துரோகி இவரது மரணத் திகதியை நிர்ணயித்து விட்டான். இன்பதுன்பங்களில் பங்கெடுத்த மனைவி -முத்தமழையால் இவரை நனைக்கும் குழந்தைகள் முன்னிலையில் இவர் மோசமாகத் தாக்கப்பட்டார். அந்தக்காட்சி தான் சிங்கோ மாஸ்டர் குடும்பத்தில் நினைவில் உள்ளது. அதன் பின் அவரை அவர்கள் காணவில்லை .
சிங்கோ மாஸ்டர்
1985ஆம் ஆண்டுக் காலத்தில் வந்தாறுமூலை அம்பலத்தடியில் இவரைப் போலவே இன்னொருவரும் காணப்படுவார். அவர் பெயர் கயிலாயத்தார். அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர். அடுக்கு மொழியில் பேசுவார். ஒரு நாள் சில இளைஞர்கள் திடீரென ஓடினர், கயிலாயத்தார் என்ன என்று கேட்டார். "எஸ்.ரி.எவ். வாறான்" என்று சொன்னார்கள். அவர்கள் ஓடி மறைந்ததும் ஓடியவர்கள் யார் என்று கேட்டார் கயிலாயத்தார் 'ரெலோ' என்றனர் அங்கிருந்தவர்கள். உடனே அவர் "நாட்டில் பயங்கரவாதிகள் சரிபாதி, பயந்தோடுபவர் அதில்பாதி" என்றார். அதைக்கேட்டு சிங்கோ மாஸ்டர் சிரித்தார்.
அன்று மக்கள் மத்தியில் நின்று கொண்டு சிறிலங்கா படையினரைக்கண்டு ஓடியவர்கள் இன்று அதே படையினருடன் மக்களை வேட்டையாட அந்த இடத்திற்கு வருகின்றார்கள். எனினும் புலிகளின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாது ஓடுகின்றார்கள். இன்று கயிலாயத்தார் அங்கு காணப்படுவதும் இல்லை அவரது அடுக்கு மொழியைக் கேட்டு ரசிக்க சிங்கோ மாஸ்டரும் இல்லை.
-களத்தில்
நன்றி வேர்கள்