தொடரும் மழையால் அம்பாறையில் மக்கள் பாதிப்பு

breaking
  அம்பாறை மாவட்டத்தில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடந்த ஒருசில தினங்களாக பாதிப்படைந்துள்ளது. அம்பாறை மாவட்டத்தில் அவ்வப்போது பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக சில தாழ்நிலப் பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன. தாழ்நிலப் பிரதேசங்களில் செய்கை பண்ணப்பட்டுள்ள விவசாயச் செய்கைகளுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளன. சீரற்ற காலநிலை காரணமாக அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் கடற்றொழில் வெகுவாகப் பாதிப்படைந்துள்ளதாகவும் மீனவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஒலுவில் மற்றும் பாலமுனை ஆகிய பிரதேச கடற்கரைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பலத்த காற்று வீசி வருவதால் மீனவர்களுக்கு கடற்றொழிலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடற்கரைப் பிரதேசங்களில் வீசிவரும் பலத்த காற்றின் காரணமாக மீனவ வாடிகள், சிறு குடிசைகள் மற்றும் வள்ளங்கள் என்பவற்றுக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. ஒலுவில் சுளியோடை ஆற்றுப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள வான்கதவுகள் அனைத்தும் திறக்கப்பட்டு இவ் ஆற்றின் மூலம் மழை நீர் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த காலங்களில் பெய்து வந்த பலத்த மழையின் காரணமாக தேசடைந்திருந்த சுளியோடை ஆற்றுப்பகுதியினை அண்டிய பகுதியில் உள்ள அணைக்கட்டுகள் நீர்ப்பாசனத் துறையினரால் புனரமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.