ஜமால் கசோக்கி கொல்லப்பட்ட விவகாரம்;அமெரிக்காவுக்கு சவுதி அரேபியா கண்டனம்.!

breaking
துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்தில், பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி படுகொலை செய்யப்பட்டதற்கு சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சால்மான் தான் பொறுப்பு என அமெரிக்க செனட் சபையில் கடந்த வியாழக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.   இந்த நிலையில், பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கொலை தொடர்பாக பட்டத்து இளவரசருக்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றிய அமெரிக்காவுக்கு சவுதி அரேபியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுபற்றி சவுதி அரேபிய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வளைகுடா பிராந்தியம் மற்றும் சர்வதேச அளவில் சவுதி அரேபியாவின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடும் வகையில், போதிய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அடிப்படையாக கொண்டு அமெரிக்க செனட் சபை நிறைவேற்றிய தீர்மானத்தை சவுதி அரேபியா நிராகரிக்கிறது” என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், “சவுதி அரேபியாவின் இறையாண்மை மற்றும் நாட்டின் மதிப்பு மிக்க தலைவரை அவமதிக்கும் வகையிலும், உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் விதமாகவும் சுமத்தப்படும் அனைத்து விதமான குற்றச்சாட்டுகளையும் எங்கள் அரசு புறக்கணிக்கிறது” என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. அதே சமயம் அமெரிக்க உடனான உறவு தொடரும் எனவும், உறவை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் சவுதி அரேபியா உறுதி அளித்துள்ளது.