தடை ஏற்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை!

breaking
முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசத்தில், சுகாதாரமான சமுகத்தை உருவாக்க தடையாக இருப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென, கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் க.விஜிந்தன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில், அவர் அன்று ​(17) ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், கரைதுறைப்பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட சந்தை வியாபாரிகள், பலசரக்கு வர்த்தகர்கள், உணவகங்களில் பணிபுரிவோர் தமது கடமை நேரத்தில் வெற்றிலை சப்புதல், புகைப்பிடித்தல் என்பன முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விதி முறைகளை மீறி செயற்படும் வியாபாரிகள், உரிமையாளர்கள் ஆகியோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அத்துடன், வியாபார உரிமம் இரத்து செய்ய வேண்டிய நிலையும் ஏற்படலாமெனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், வியாபார நேரங்களில் அசௌகரியங்களை எதிர்நோக்கி ஆங்காங்கே வெத்திலை துப்புவதாலும் புகைப்பதாலும் தாம் சுகாதார ரீதியாக பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக, பொதுமக்களால் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இதனைக் கருத்தில் கொண்டு சுகாதார மிக்க சமுகத்தை கட்டியெழுப்ப உரிய தரப்பினர் ஒத்துழைக்க வேண்டுமெனவும், அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.