சிங்களவர்களிற்கு வடக்கில் நியமனம் வழங்கிய மகிந்த கும்பல்

breaking
  ஶ்ரீலங்காவில் ஏற்பட்ட அரசியல் குழப்பநிலையையடுத்து, உருவாக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அமைச்சரவைக் காலத்தில் வடக்கில் சிங்களவர்கள் 46 பேருக்கு அவசரகதியில் வழங்கப்பட்ட வேலைவாய்ப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், இந்த விடயத்தை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக தெரிவித்துள்ளார். ஒக்ரோபர் 26 குழப்பத்தின் பின்னர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் அமைச்சரவையொன்றை உருவாக்கினார் ஜனாதிபதி. அதில் மின்சக்தி அமைச்சராக ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய நியமிக்கப்பட்டார். அரசியல் குழப்பநிலை நிலவுதால், புதிதாக யாருக்கும் நியமனம் வழங்க வேண்டாம் என ஜனாதிபதி விசேட சுற்றுநிருபம் ஒன்றையும் வழங்கியிருந்தார். ஆனால், அதையும் மீறி கேகாலை மாவட்டத்தை சேர்ந்த 46 பேருக்கு வடக்கு மின்சாரசபையில் புதிதாக நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நியமனங்களிற்காக விண்ணப்பங்களும் கோரப்பட்டிருக்கவில்லையென எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். மின்சாரசபையின் வடபிராந்திய அலுவலகங்களில் புதிதாக நியமிக்கப்பட்ட 46 பேரையும் நீக்கிவிட்டு, வடக்கை சேர்ந்தவர்கள் அந்த இடத்தில் நியமிக்கப்பட வேண்டுமென்றும் சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.