இந்திய மீனவர் ஒருவருடைய சடலம் ஒப்படைப்பு, கொலையா?

breaking

தமிழக மீனவர் ஒருவரின் சடலம் யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. குறித்த மீனவரின் சாவில் மர்மம் உள்ளதாக பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளன.

நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை எட்டு மீனவர்கள் கஞ்சா போதை பொருளுடன் கைது செய்யப்பட்டதாக முன்னர் தகவல்கள் வெளியாகின.

பின்னர் கஞ்சா போதை பொருளுடன் மீனவர்கள் கைது என வெளியான தகவல்களை சிறிலங்கா கடற்படையினர் மறுத்தனர். அத்துமீறி நெடுந்தீவு கடற்பரப்பினுள் மீன் பிடியில் ஈடுபட்டமையால் தான் எட்டு மீனவர்களையும் கைது செய்ததாக கடற்படையினர் தெரிவித்தனர்.

குறித்த எட்டு மீனவர்களையும் கடற்படையினர் யாழ்.மாவட்ட நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க கடற்படையினர் முயன்ற போது , மீனவர்களை நீரியல் வளத்துறை அதிகாரிகள் பொறுப்பெடுக்கவில்லை.

மீனவர்கள் காயமடைந்த நிலையில் காணப்பட்டமையாலும் , அவர்களிடமிருந்து படகுகளை மீட்காதமையாலும் மீனவர்களை பொறுப்பெடுக்கவில்லை என நீரியல் வளத்துறை தகவல்கள் தெரிவித்தன.

அந்நிலையில் ராமேஸ்வரம் பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற கலையரசன் என்பவரது படகினை சிறிலங்கா கடற்படையினர் மூழ்கடித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன.

அதேவேளை காயமடைந்த நிலையில் காணப்பட்ட எட்டு மீனவர்களையும் நீரியல் வளத்துறை அதிகாரிகள் பொறுபேற்க மறுத்ததால் , அவர்களை காங்கேசன்துறை சிறிலங்கா காவல்துறையினரிடம் ஒப்படைக்க சிறிலங்கா கடற்படையினர் நடவடிக்கைகளை எடுத்துள்ளார்கள்.

மீனவர்கள் கைது செய்யப்பட்ட கடற்பரப்பு நெடுந்தீவு சிறிலங்கா காவல்துறையினரின் கீழ் வருவதனால் அவர்களை நெடுந்தீவு சிறிலங்கா காவல்துறையினரே பொறுப்பேற்று ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கைகளை எடுக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் தமிழகம் இராமேஸ்வரத்தை சேர்ந்த மாரிசாமி எனும் மீனவரின் சடலத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு யாழ்.போதனா வைத்திய சாலையில் சிறிலங்கா ரிகடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த மீனவர் கடலில் மூழ்கி உயிரிழந்து இருக்கலாம் அல்லது காயமடைந்த நிலையில் கடற்படை முகாம் ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இதேவேளை காயமடைந்துள்ள எட்டு மீனவர்களில் எவரும் பொது வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது சிறிலங்கா கடற்படையினரே சிகிச்சை அளித்து வருகின்றார்கள்.

அத்துடன் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை முன்னதாக நெடுந்தீவு கடற்பரப்பினுள் வைத்து கைது செய்யப்பட்ட 09 மீனவர்களை கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் கடற்படையினர் ஒப்படைத்தனர்.

அதில் இரு மீனவர்கள் தலையில் காயமடைந்த நிலையில் காணப்பட்டனர். என்பது குறிப்பிடத்தக்கது. குறித்த காயத்திற்கான காரணத்தினை அறிய முடியவில்லை.