புதிய அரசியலமைப்பை நிறைவேற்ற இடமளிக்கப்போவதில்லை என்கிறார் இனப்படுகொலையாளி மஹிந்த

breaking
தற்போதைய சூழலில் புதிய அரசியலமைப்பு தேவையில்லை என்றும், அதனை நிறைவேற்ற தாம் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்றும், சிறிலங்கா எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். எனினும், மூவின மக்களுக்கும் அதிகாரங்கள் வழங்கப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவித்த போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த வெளிநாட்டு ஊடகத்திற்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, வடக்கு கிழக்கு இணைக்கப்படாது, நாடு பிளவுபடாது என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறும் நிலையில், எதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு புதிய அரசியலமைப்பை ஆதரிக்கிறது என கேள்வி எழுப்பியுள்ளார். வடக்கு, கிழக்கு இணைப்பு, சமஷ்டி போன்ற சொற்பதங்கள் வேண்டுமானால் புதிய அரசியலமைப்பில் இல்லாமல் இருக்கலாம். ஆனால், அதிகாரங்கள் நாட்டைப் பிளவுபடுத்தும் வகையிலேயே இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனாலேயே, முன்னெச்சரிக்கையாக புதிய அரசியலமைப்பை வேண்டாம் என்று அதனைத் தடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பில் எதுவும் இல்லை என்றால், அதனை நிறைவேற்றுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும், புதிய அரசியலமைப்பை ஆதரிக்குமாறு ஏன் எதிர்க்கட்சியான தங்களைக் கோரவேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். நாங்கள் நாட்டை வெளிநாடுகளுக்குத் தாரைவார்ப்பதாக குற்றம் சுமத்திய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தற்போது, வடக்கு மற்றும் கிழக்கை தாரைவார்த்து கொடுக்கம் செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் குற்றஞ்சுமத்தியுள்ளார். புலம்பெயர் தமிழர்களின் நிகழ்ச்சி நிரலிலேயே, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் செயற்படுவதாகவும், சர்வதேச சமூகத்தின் பலம் பொருந்திய அந்த நாடுகள் எவை என்று சாதாரண மக்களுக்கும் தெரியும் என்றும் குறிப்பிட்டுள்ளார். எனவே, நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டு புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டு, அதனூடாக  புதிய அரசமைப்பை முன்வைக்கவேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.