முல்லைத்தீவில் பௌத்த துறவிகளுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் முறுகல்!

breaking

வட தமிழீழம், முல்லைத்தீவு மாவட்டம் பழைய செம்மலை நாயாற்றுப் பகுதியியில் உள்ள நீராவியடி பிள்ளையார் ஆலத்தில் (14.01.19) இன்று செம்மலை கிராம மக்களாலால் ஏற்பாடு செய்த ஆண்டு பொங்கல் நிகழ்வும் அன்னதான நிகழ்வும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று காலை பிரதேச தமிழ் மக்கள் பிள்ளையார் ஆலயத்திற்கு சென்று பொங்கல் வழிபாடுகளில் ஈடுபட்ட வேளை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தினை ஆக்கிரமித்து பௌத்த விகாரையினை அமைத்துள்ள பௌத்த மதகுரு ஒருவர் தலையில் தென்பகுதியிலிருந்து வருகை தந்த 40ற்கு மேற்பட்ட சிங்களவர்களும் பௌத்த மதகுரு மாரும் தமிழ்மக்கள் மீது பிரச்சனையினை ஏற்படுத்தும் வகையில் பொங்கல் பூசை வழிபாடுகளில் ஈடுபட்ட மக்கள் மீது தர்க்கம் எற்படுத்தியுள்ளார்கள்.

மக்களை பொங்கல் வைக்கவிடாமல் குறித்த பகுதியில் விகாரை அமைத்துள்ள விகாராதிபதி தடுக்க முற்பட்டுள்ள நிலையில் இரு தரப்பிற்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து விகாரைக்கு அருகில் உள்ள படையினர் மற்றும் படை அதிகாரிகள் குறித்த இடத்திற்க வந்து பௌத்த மதகுருமாரையும் சிங்கள மக்களையும் சமாதானப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டவேளையில் முல்லைத்தீவு பொலீசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விகாராதிபதியுடன் கலந்துரையாடலை மேற்கொண்டுவிட்டு ஒலிபெருக்கி மூலம் தமிழ் மக்கள் வழிபாடுகளை செய்தவேளைஒலிபெருக்கி பாவிக்க தடை நீங்கள் ஆலயத்தில் ஒலிபெருக்கி பயன்படுத்தவேண்டாம் எனவும் கூறியதோடு பொங்கல் வழிபாடுகளை மேற்கொண்ட பெண்கள் சிறுவர்கள் அனைவரையும் புகைப்படங்களை எடுத்து தமிழ் மக்களின் வழிபாடுகளை மேற்கொள்ளவிடாது இடையூறுகள் ஏற்படுத்தியிருந்தனர்.

இன்று காலை இடம்பெற்ற இந்த முறுகல் நிலையின் போது செய்திசேகரிக்கும் பணியில் இருந்த ஊடகவியலாளர்களின் பணிக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக புகைப்படங்களை எடுத்து பொலிஸார் செயற்பட்டிருந்ததுடன் ஊடகவியலாளர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டிருந்தனர் .

ஆலயம் பௌத்த ஆலயம் என்றும் அது பௌத்த மதத்திற்குரிய இடம் என்றும் அதில் தமிழ் மக்கள் பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்ளமுடியாது என்றும் தெற்கில் இருந்து வருகைதந்த பௌத்த துறவிகளும் பெரும் பான்மை சமூகம் சார்ந்தவர்களும் கருத்து முரண்பாடுகளை மேற்கொண்டு பிரச்சனையினை தேற்றிவிக்க முற்பட்ட வேளை பொலீசாரின் தலையீட்டினை தொடர்ந்து பிரச்சனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு செம்மலை கிராம மக்கள் பிள்ளையார் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டனர் .

இன்னிலையில் குறித்த பிள்ளையார் ஆலயத்தில் நடைபெறும் பொங்கல் நிகழ்விற்காக தமிழ்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாந்தி சிறீஸ்கந்தராசா,சிவமோகன்,சாள்ஸ்நிர்மலநாதன் மற்றும் முன்னாள் வடமாகாணசபை விவசாய அமைச்சர் க.சிவனேசன் ,கரைதுறைப்பற்று பிரதேசசபை தவிசாளர் ,பிரதேசசபை உறுப்பினர்கள் ஆகியோர் ஆலய பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்டனர் .

பொங்கல் நிகழ்வும் அன்னதான நிகழ்வும் நடைபெற்று தொடர்ந்து குறித்த பிள்ளையார் ஆலயத்தினை புனரமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் நடைபெற்றது .இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வினை குறித்த விகாரையின் விகாராதிபதி தடுத்து நிறுத்த முற்பட்டிருந்த நிலையில் மக்கள் தொடர்ந்தும் அடிக்கல் நாட்டும் நிகழ்வை தடையின்றி செய்தனர் .

தெற்கில் இருந்து வந்த ''இலங்கையினை பாதுகாப்போம்'' என்ற ஜனாதிபதி செயலகத்துடன் இணைந்து செயற்படும் ஒரு பௌத்த அமைப்பினை சேர்ந்த 40ற்கும் மேற்பட்டவர்களே குறித்த நீராவியடிப்பிள்ளையார் ஆலயப்பகுதிக்கு சென்று குழப்பநிலையினை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.