நீராவியடிப் பிள்ளையாருக்கு மக்கள் பொங்கல் வழிபாடு!

breaking
முல்லைத்தீவு - செம்மலை நீராவிடி ஏற்றப் பகுதியில் அமைந்துள்ள பிள்ளையார் கோவிலில், பல்வேறு கருத்து வேறுபாடுகளைடுத்து பொங்கல் வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன. 14.01.19அப்பகுதி தமிழ் மக்கள் வருடந்தோறும் நீராவியடிப் பிள்ளையாருக்கு தைத்திருநாளை முன்னிட்டதான பொங்கல் வழிபாடுகள் செய்வது வழமை.
இந் நிலையில்  அவர்கள் பொங்கல் வழிபாடுகளைச் செய்வதற்கு கோவிலுக்கு சென்றவேளை, அம்மக்களுக்கும் அந்த கோவில் வளாகத்திலிருக்கும் பௌத்த துறவிக்குமிடையில் கடும் வாக்குவாதங்கள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் அந்த கோவில் வளாகத்தில் இருக்கும் குறித்த பௌத்த துறவி அங்கு வழிபாடுகளுக்காகச் சென்ற மக்களிடம், இந்த வழிபாடுகளுக்கு யார் உங்களுக்கு அனுமதி வழங்கியது என கேட்டதுடன், வேறு இடங்களிலிருந்து சிங்கள மக்களை வரவளைத்து தமிழ் மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்த காவற்றுறையினர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் தலையீட்டுடன் குறித்த பொங்கல் வழிபாடுகளை மக்கள் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் கோவிலில் ஒலிபெருக்கி சாதனங்களைப் பயன்படுத்தி பக்தி பாடல்கள் ஒலிப்பதற்கும் பௌத்த துறவி எதிர்ப்புத் தெரிவித்தார். இருந்தும் தமிழ் மக்கள் தாம் தமது வழிபாடுகளை செய்வதற்கு பக்திபாடல்கள் ஒலிக்கச்செய்யவிடவேண்டுமென காவற்றுறையினரை கேட்டதுடன் அதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. எது எவ்வாறாயினும் தாம் வழமையாக செய்துவரும் வழிபாடுகளுக்கே இவ்வாறான இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதையிட்டு மிகுந்த கவலையளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும் இந்த வழிபாடுகளில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சாந்தி - ஸ்ரீஸ்கந்தராசா, சாள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா - ரவிகரன் மற்றும், கந்தையா சிவநேசன், கரைதுறைப்பற்று பிரதேசசபை தவிசாளர், உறுப்பினர்கள் ஆகியோர் கலந்திருந்தனர்.