பால் சபை கட்டிடத்தை நூலகமாக மாற்றுமாறு மக்கள் கோரிக்கை

breaking
கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட KN 57. கிராம சேவையாளர் பிரிவின் புன்னைநீராவி கிராமத்தில்  கடந்த நான்கு வருட காலமாக பால் வினியோகத்துக்கு என்று புனரமைப்பு செய்யப்பட்டுள்ள  முப்பது அடி நீளமான கட்டிடம் எவ்வித பாவனை  இன்றி காணப்படுகின்றது. இவ் பால் சபைக்கான கட்டிடம் கதவு போடப்பட்டு மின் விசிறிகள் பொருத்தப்பட்டு பல வருட காலமாக பாவனையற்று காணப்படுவதால் கதவினை பூட்டி விட்டு பலர் மது அருந்துவதுடன் இரவு வேளைகளில் பல சமூக விரோத செயற்பாடுகளும் அதிகமாக இடம் பெறுவதாக பலரும் ஆதங்கம் தெரிவிக்கின்றனர். எனவே இக் கட்டிடம் அமையப் பெற்றுள்ள இடத்திலிருந்து நூறு மீற்றர் தூரத்தில் புன்னைநீராவி அ.த.க.பாடசாலை அமைந்துள்ளதோடு ஐம்பது மீற்றர் தூரத்தில் புன்னைநீராவி கலைமகள்  சிறுவர் முன்பள்ளி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம்  மற்றும் பொது நோக்கு மண்டபமும் அமைந்துள்ளது. எனவே பலநூறு  மாணவர்களின் நலன் கருதியும் கிராம இருநூறுக்கு மேற்பட்ட முதியோர்கள் , மக்களின் கோரிக்கைக்கு அமையவும் இக் கட்டிடத்தை தங்களுக்கு நூல் நிலையமாக ஏற் படுத்தி தருமாறு பல நீண்ட காலமாக கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த  கட்டிடம் நூலகமாக காட்சியளிக்கும் பட்சத்தில் பலரும் பலவகை நன்மை பெறக்கூடியதாக நிச்சயம் அமையும் என்று நம்பிக்கை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.