வவுனியாவில் 2017 ஆம் ஆண்டு மாத்திரம் 393 பேர் தற்கொலை!

breaking

கடந்த 2017 ஆம் ஆண்டு மாத்திரம் 393 பேர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் வவுனியா பொது வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது. அதேபோல் 2018 ஆம் ஆண்டு தொடக்கம் மார்ச் 01 ஆம் திகதிவரை 35 பேர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர். இவ்வாறாக தற்கொலைகள் அதிகரித்து செல்லுமானால் எமது சமூகம் வினைத்திறனில்லாத சமூகமாக நாளடைவில் மாறிவிடும் என வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் குலலிங்கம் அகிலேந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் கடந்த வாரத்தில் அடுத்தடுத்து நடைபெற்றிருந்த தற்கொலைகள் தொடர்பாகவும் தற்கொலைகளை தடுப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விசேடமாக எமது செய்திச்சேவைக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் குலலிங்கம் அகிலேந்திரன்.

கடந்த 2017 ஆம் ஆண்டு வவுனியாவில் மாத்திரம் 393 பேர் தற்கொலைக்கு முயற்சி செய்து கொண்டுள்ளதாக வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது. அதேபோல் 2018 ஆம் ஆண்டு தொடக்கம் மார்ச் 01 ஆம் திகதிவரை 35 பேர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர்.

எமது சமூகத்தில் 12 வயது மற்றும் 45 வயதிற்கு இடைப்பட்ட நபர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த தற்கொலைகள் நாளாந்தம் அதிகரித்து செல்வதை காணக்கூடியதாக இருக்கிறது. தற்கொலைகள் குறித்து பொது மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். சமூதாயத்தின் கட்டுக்கோப்புக்கள் எவ்வளவு சீரழிந்துள்ளது என்பதை இந்த தற்கொலை முயற்சிகள் எடுத்துக் காட்டுகிறது.

தொலைக்காட்சி பெட்டிகள் ஆடம்பரப்பொருட்கள் வருவதற்கு முன்னைய காலப்பகுதியில் தற்கொலை என்பது அரிதாகவே காணப்பட்டது. இந்த விகிதாசாரத்தில் எப்பொழுதும் தற்கொலைகள் அதிகரித்து காணப்படவில்லை.

போருக்கு பின்னரான காலப்பகுதியில் வடக்கு மக்கள் அதிகமாக மன அழுத்தத்திற்கு முகம் கொடுப்பது காரணமாகவும் இந்த தற்கொலைகள் அதிகரித்திருக்கலாம் என நாங்கள் கருதுகிறோம். அதே போல் இந்த சமூகத்தில் உள்ளவர்கள் எந்த அளவிற்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்பதும் தங்கள் சுக துக்கங்களை குடும்பத்தினருக்கு சொல்ல முடியாத நிலையிலும் அதே போல் நண்பர்கள் உறவினருக்கு சொல்ல முடியாத நிலையில் இருக்கிறார்கள் என்பதை இந்த தற்கொலைகள் எடுத்துக்காட்டுகிறது எனவே சமூகத்திலிருக்கிறவர்கள் தனித்தீவுகளாக இருப்பதை இந்த தற்கொலையின் வீதம் எடுத்துக்காட்டுகிறது.

பல்வேறுபட்ட அணியினரும் தற்கொலைக்கு எதிராக செயற்பட முன்வரவேண்டும். முக்கியமாக இளம் பராயத்தினர் சரியாக நல்வழிப்படுத்தப்பட வேண்டும். சினிமாக்களில் மற்றும் தொலைக்காட்சி நாடகங்களில் காட்டப்படும் தற்கொலைக்காட்சிகளும் ஒரு காரணமாக இருக்கிறது. அவ்வாறான காட்சிகள் மனதில் ஆளமாக பதிந்துவிடும். ஒரு நபருக்கு தன்னால் பிரச்சனைகளை கையாள முடியாத சந்தர்ப்பம் ஏற்படும் போது அவர் இலகுவாக இவ்வாறான முடிவுகளை எடுக்க தூண்டப்படுகிறார். எனவே ஒவ்வொருத்தரும் தங்களுக்கு பக்கத்திலுள்ளவர்களின் பிரச்சனைகளை கருத்தில் எடுத்து அவர்களுக்கு எந்தவிதத்தில் உதவலாம் என பழகினீர்கள் என்றால் இந்த தற்கொலைகளை குறைத்துக்கொள்ளலாம்.

பெற்றோர்கள் உங்கள் பிள்ளைகளுடன் மனம் விட்டு கதையுங்கள், அவர்களுடன் நெருங்கி பழகுங்கள் சிலபிரச்சனைகளை உங்களிடம் பிள்ளைகள் சொல்ல முடியாமல் இருப்பார்கள். நண்பர்களாக நீங்கள் பழகினால் மாத்திரமே தங்கள் பிரச்சனைகளை அவர்கள் உங்களுக்கு முழுவதுமாக சொல்ல முன்வருவார்கள். பிள்ளைகளின் கருத்துக்களை கேட்காவிட்டால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு ஒதுக்கப்பட்ட ஒரு சமுதாயமாக மாறும் நிலையில் அவர்கள் தற்கொலைகளை நாட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

அதேபோல் அதிகளவான மதுப்பாவனை, அதிகளவான போதைவஸ்து பாவனை எமது சமூகத்தில் அதிகமாக காணப்படுகின்றது. அதுவும் தற்கொலைகளை கூட்டுவதற்கு ஒரு காரணியாக கண்டறியப்பட்டுள்ளது. மது மற்றும் போதை வஸ்துக்களை பயன்படுத்தும் இளம் பராயத்தினர் அவைகளை தவிர்க்க முயல வேண்டும்.

வவுனியா பொது வைத்தியசாலையில் தற்கொலைகளுக்கு எதிராக இரண்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது ஒன்று வைத்தியசாலையின் உளவள வைத்திய நிபுணரின் கீழ் ஒரு குழு அமைக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகிறது. மன அழுத்தத்தின் காரணமாக வவுனியா வைத்தியசாலைக்கு வந்து மருந்து எடுத்துச் சென்றவர்களின் வீடுகளிற்கு சென்று அவர்களின் பிரச்சனைகளை கண்டறிந்து தீர்வுகளை வழங்கி வருகிறார்கள்.

அதே போல் வைத்தியசாலையில் பாடசாலை மாணவர்களுக்காக தற்கொலைக்கு எதிரான கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளோம். அதில் போதை வஸ்து பாவனை மற்றும் மது பாவனையை எவ்வாறு குறைக்க முடியும். சமூகச் சீரழிவுகளிலிருந்து பாடசாலை சமூகத்தை எப்படி பாதுகாக்க முடியும் என்றவகையில் ஒவ்வொரு வாரமும் கருத்தரங்குகளை நடத்தி வருகிறோம். அதேபோல் சமூக சேவைகள் திணைக்களம், பிரதேச செயகம், மாவட்ட செயலகம் மற்றும் வலயக்கல்வி பனிமனை ஊடாக பல மட்டங்களில் தற்கொலைகளை தடுப்பதற்குரிய நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தியுள்ளனர்

அத்துடன் ஆசிரியர் சமூகமானது பாடசாலை மாணவர்களின் பிரச்சனைகளை கருத்தில் எடுக்க வேண்டும். மாணவர்களை அழுத்தத்திற்கு உட்படுத்தாமல் அவர்களை நல்ல விதமாக கையாள வேண்டியது ஆசிரியர்களின் பொறுப்பாக இருக்கிறது. பாடசாலை மாணவர்களை உங்கள் சொந்தப் பிள்ளைகள் போல் கவனித்து அவர்களை வழிநடத்த வேண்டும். ஏனென்றால் இவ்வாறாக தற்கொலைகள் அதிகரித்து செல்லுமானால் எமது சமூகம் வினைத்திறனில்லாத சமூகமாக நாளடைவில் மாறிவிடும் எனவே அனைத்து சமூகத்தினரும் இணைந்து தற்கொலைகளை தடுப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.