ஸ்ரீலங்காவில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் 4 இலட்சம் கடன்!

breaking
நாட்டிலுள்ள ஒவ்வொரு சிறு குழந்தையையும் 4 லட்சம் ரூபா கடனாளியாக காணப்படுவதாகவும், இதனால் மக்கள் இன்னும் முழுமையாக சுதந்திரம் அடையவில்லையெனவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அங்குனுகொலபலஸ்ஸ, அபேசேகரகமவில் இன்று (03) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறியுள்ளார். மக்கள் சுதந்திரமடையாத நிலையில் இருக்கும் போது, தான் நாளைய சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்ளாதிருக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நாட்டில் இருந்த எந்தவொரு அரசாங்கத்துக்கும் மக்களின் பிரச்சினைகளை சரியாக விளங்கிக் கொள்ள முடிந்திருக்கும் என நான் நினைக்கவில்லை. அவ்வாறு புரியப்பட்டிருந்தால் நாடு இவ்வாறு பாரிய வீழ்ச்சி நிலைக்குச் சென்றிருக்காது. சுதந்திரம் அடைந்து 71 ஆண்டுகள் ஆகின்றன. நாம் வெள்ளையர்களிடமிருந்து சுதந்திரம் அடைந்தோம். வெள்ளையர்களிடமிருந்து சுதந்திரம் பெற்ற சுதந்திரத்தை கறுப்பு வெள்ளைக்காரனிடம் அதிகாரத்தை கொடுத்து விட்டோம். வெள்ளையர்களின் காலத்தை விடவும் மக்கள் தற்பொழுது சில துறைகளில் வீழ்ச்சியடைந்துள்ளனர். நாட்டின் தேசிய வருமானம் கடனைச் செலுத்த போதாத நிலைக்கு மாறியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.