Take a fresh look at your lifestyle.

ஏ.ரி.எம். திருட்டுக் கும்பலில் 3 பேர் சிக்கினர்; இருவர் சீனர், ஒருவர் ரோமேனியா

சிறிலங்காவில் அரச மற்றும் தனியார் வங்கிகளில் தன்னியக்கப் பணப்பரிமாற்றல் இயந்திரம் (ஏ.ரி.எம் ) ஊடாக முன்னெடுக்கப்பட்ட நிதி மோசடி தொடர்பில், வெளிநாட்டவர்கள் மூவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்றுக் கைது செய்யப்பட்டனர்.

சீனாவைச் சேர்ந்த இருவரும் ரோமானியாவைச் சேர்ந்த ஒருவரும் என மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து போலி ஏ.ரி.எம் அட்டைகள் 200, தன்னியக்கப் பணப்பரிமாற்றல் இயந்திரங்கள் ஊடாகத் திருடப்பட்ட 12 லட்சம் ரூபா பணம் மற்றும் உயர் தொழில்நுட்பத்தைக் கொண்ட தகவல் திருட்டுச் சாதனங்கள் 2 என்பன கைப்பற்றப்பட்டன.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப் படுகின்றன என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர். இலங்கையிலுள்ள வங்கிகளின் தன்னியக்கப் பணப்பரிமாற்றல் இயந்திரங்களில் ஹக்செய்யும் வசதியைக் கொண்ட கருவியயான்றைப் பொருத்தி அதனூடாக வாடிக்கையாளர்களின் தரவுகள் மோசடிக் கும்பல் ஒன்றால் சேகரிக்கப்பட்டு வந்தன.

அந்தத் தரவுகளைப் பயன்படுத்தி -போலியான அட்டை களைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் கணக்குகளிலிருந்து பணம் பெறப்படுவதாக பொலிஸில் முறைப்பாடுகள் வழங்கப்பட்டிருந்தன.

அந்தக் கும்பலால் பல கோடி ரூபா மோசடி இடம்பெற்றதால் விசாரணை நடத்தும் பணி குற்றத்தடுப்புத் திணைக்களத்தினரிடம் வழங்கப்பட்டது. அது தொடர்பில் அவர்கள் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.