சட்ட பூர்வமாக மட்டுமே அமெரிக்காவில் குடியேறுங்கள்.!

breaking
‘‘அடிப்படை தகுதி உடையவர்கள் சட்ட ரீதியாக அமெரிக்காவில் குடியேறலாம். சட்டவிரோதமாக குடியேறுபவர்களுக்கு காட்டப்படும் சகிப்புத்தன்மை இரக்கம் அல்ல, அதைவிடக் கொடூரமானது’’ என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் நேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: அமெரிக்க மக்களின் வாழ்க்கை, வேலை ஆகியவற்றை பாதுகாக்கும் குடியேற்றக் கொள்கையை உருவாக்கும் தார்மீக பொறுப்பு உறுப்பினர்களாகிய நம்மிடம் உள்ளது. நமது நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து இங்கு குடியேறியுள்ள வெளிநாட்டினரின் உரிமைகளையும் நாம் பாதுகாக்க கடமைப்பட்டுள்ளோம்.  சட்டப்படி குடியேறியவர்கள் எண்ணற்ற வகைகளில் நாட்டிற்கு உதவி புரிகின்றனர். நம் நாட்டை வளப்படுத்துகிறார்கள்; நமது சமூகத்தை வலிமையுடையதாக மாற்றியுள்ளார்கள். நம் நாட்டிற்கு மக்கள் குடியேற வேண்டும். ஆனால் சட்ட ரீதியில் அவர்கள் புலம்பெயர வேண்டும். மெக்சிகோ எல்லைப் பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர, சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும். துறைமுகங்கள் மூலம் போதைப் பொருள் கடத்தல், குழந்தைகள் கடத்தல் ஆகியவற்றை தடுக்க பாதுகாப்பு வீரர்களைக் கொண்ட மனித வேலியோ அல்லது தடுப்பு சுவரோ எழுப்பப்பட வேண்டும். அமெரிக்கத் தொழிலாளர்கள், சட்டவிரோத குடியேற்றத்தால் வேலை வாய்ப்பை இழந்து, குறைந்த ஊதியத்தில், பள்ளிக்கட்டணம், மருத்துவ தேவைகளுக்கு கூட பணமில்லாமல் அதிக கடன் சுமைகளுடன் வாழ்ந்து வருகின்றனர். சட்டத்துக்கு புறம்பாக குடியேறுபவர்களுக்கு காட்டப்படும் சகிப்புத்தன்மை இரக்கமல்ல; மாறாக கொடூரமானது.
 
நாட்டின் வட பகுதியில் மூன்றில் ஒருபெண் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்படுகிறார். கடத்தி வரப்படும் மெத், ஹெராயின், கோகெய்ன் உள்ளிட்ட போதைப் பொருள்களால் ஆயிரக்கணக்கான அப்பாவி அமெரிக்கர்கள் சாகின்றனர். சட்டவிரோதமாக குடியேறுபவர்களின் குழந்தைகளை கடத்தல்காரர்கள் தங்களது துருப்பு சீட்டாக கொண்டு நமது சட்டங்களை தவறாக பயன்படுத்தி நாட்டுக்குள் நுழைந்து விடுகிறார்கள். நாட்டை பாதுகாக்கும் எல்லைச் சுவர் கட்ட நிதி அளிக்கும் மசோதா நிறைவேற இன்னும் 10 நாட்களே உள்ளன. சட்டவிரோத குடியேற்றதை முடிவுக்கு கொண்டு வருவதில் அமெரிக்கா அர்ப்பணிப்புடன் செயல்படும் என்பதை உலகிற்கு காட்ட வேண்டிய தருணம் இது”. இவ்வாறு டிரம்ப் கூறினார். 27, 28ல் டிரம்ப் - உன் சந்திப்பு டிரம்ப் தனது உரையில், “கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவ அமெரிக்க அரசு தொடர்ந்து முயன்று வருகிறது. நமது பணயக் கைதிகள் நாடு திரும்பியுள்ளனர். அணு ஆயுத சோதனைகள் நிறுத்தி  வைக்கப்பட்டுள்ளன. கடந்த 15 மாதங்களுக்கு மேலாக எவ்வித அணு ஆயுத சோதனையும்  நடத்தப்படவில்லை. வடகொரியா விவகாரத்தில் இன்னும் முடிக்க வேண்டிய பணிகள் நிறைய உள்ளன. அதிபர் கிம் உடனான நட்புறவு நீடிக்கிறது. வரும் 27, 28 தேதிகளில் வியட்நாமில் அவரை சந்திக்க இருக்கிறேன். ஒருவேளை நான் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படாமல் இருந்திருந்தால் இந்நேரம் வடகொரியாவுடன் போர் ஏற்பட்டிருக்கும்” என்று கூறினார்.