ஸ்ரீலங்காவின் தூக்குத்தண்டனை – ஐரோப்பிய ஒன்றியம் எதிர்ப்பு!

breaking
போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு, இரண்டு மாதங்களுக்குள் மரணதண்டனையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு, இரண்டு மாதங்களுக்குள் மரணதண்டனையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அண்மையில் பிலிப்பைன்ஸ் சென்றிருந்த சிறிலங்கா அதிபர், அங்கு போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு எதிராக எடுக்கப்படும் கடும் நடவடிக்கைகளை பாராட்டியிருந்ததுடன், அந்த வழியை தாமும் பின்பற்றப் போவதாக கூறியிருந்தார். இந்த நிலையிலேயே, 1976ஆம் ஆண்டுக்குப் பின்னர், சிறிலங்காவில் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள மரணதண்டனை நிறைவேற்றப்படும் நடைமுறையை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வரவுள்ளதாக சிறிலங்கா அதிபர் அறிவித்துள்ளார். இந்தநிலையில் கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதரகத்தின் பேச்சாளரிடம்,  இந்த விவகாரம் குறித்து, சிறிலங்கா அரசாங்கத்துடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சு நடத்தியுள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “ எல்லா மனித உரிமை மீறல் விவகாரங்களையும் உள்ளடக்கிய கொள்கை ரீதியான கலந்துரையாடல்கள்,  சிறிலங்கா அரசாங்கத்துடன் கிரமமாக நடத்தப்படுகிறது, எந்தச் சூழ்நிலையிலும், மரணதண்டனை நிறைவேற்றப்படக் கூடாது என்ற உறுதியான நிலைப்பாட்டில் ஐரோப்பிய ஒன்றியம் இருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.