ஈ.பி.ஆர்.எல்.எப் இன் பாலியல் வல்லுறவுப் படுகொலை!

breaking

இந்தியப் படையினருக்கு யார் அதிகம் உதவி செய்வது என்கின்ற விடயத்தில் மூன்று இயக்கங்ளுக்குள் போட்டி நிலவியது. ஈ.பி.ஆர்.எல்.எப், ஈஎன்.டீ.எல்.எப்., டெலோ போன்ற இயக்கங்கள் மத்தியில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் சந்தேகம் இல்லாமல் ஈ.பி.ஆர்.எல்.எப். முன்னணி வகித்தது.

குறிப்பாக யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இந்தியப் படையினரின் நடவடிக்கைகளுக்கு ஈ.பி.ஆர்.எல்.எப். இனரே அதிக ஒத்துழைப்பு வழங்கியிருந்தார்கள்.

யாழ்ப்பாணத்தை இந்தியப் படையினர் கைப்பற்றி, ஒவ்வொரு சந்தியிலும் முகாம் அமைத்து நிலைகொண்டதைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.ப். உறுப்பினர்கள் வடக்கு கிழக்கின் பல பகுதிகளிலும் குவிக்கப்பட்டார்கள். யாழ் நகரில் ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர்கள் அசோகா ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டார்கள். மட்டக்களப்பில் கொண்டிறக்கப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர்கள் சாம் தம்பிமுத்துவின் வீட்டிலும், அவருக்குச் சொந்தமான பல்பொடிக் கம்பெனியிலும் தங்கியிருந்தார்கள்.

ஆட்சேர்ப்பில் பத்மநாபா

யாழ்நகர் அசோகா ஹோட்டலில் தங்கிய ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர்களுடன் அந்த அமைப்பின் தலைவர் பத்மநாபாவும் தங்கியிருந்தார். ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர்கள் இந்தியப் படையினருடன் காட்டிக்கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அதேநேரம், பத்மநாபாவோ தமது அமைப்பிற்கு ஆட்சேர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தார். தாம் ஒரு பெரிய அமைப்பு என்பதை இந்தியப் படையினருக்கு நீரூபித்துக்காட்டி அதிக சலுகைகள் பெறுவது அவரது நோக்கமாக இருந்தது.

அக்காலகட்டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பு சற்றுப் பலவீனமடைந்திருந்தது என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். ஈ.பி.ஆர்.எல்.எப். இலிருந்து டக்ளஸ் தலைமையிலான ஒரு முக்கிய அணி பிரிந்து சென்றிருந்தது. ஈ.பி.ஆர்.எல்.எப். இனது இராணுவப் பொறுப்பாளராக டக்ளஸே இருந்த காரணத்தினால் அந்த அமைப்பின் இராணுவப் பயிற்சிபெற்ற பலரும் அந்த அமைப்பை விட்டு டக்ளஸ் உடன் வெளியேறியிருந்தார்கள். மற்றொரு தொகுதியினர் பிரிந்து சென்று ஈ.என்.டீ.எல்.எப். உடன் இனைந்திருந்தார்கள். விடுதலைப் புலிகள் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பைத் தடைசெய்த காரணத்தினாலும், புலிளுடன் சில இடங்களில் மோதவேண்டி இருந்ததாலும் மேலும் பல உறுப்பினர்கள் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பை விட்டு விலகியிருந்தார்கள். எனவே அமைப்பைப் பலப்படுத்த வேண்டுமானால் மீண்டும் ஆட்சேர்ப்பில் ஈடுபடவேண்டிய தேவை ஈ.பி.ஆர்.எல்.எப். இற்கு இருந்தது.

இந்தியா வடக்கு கிழக்கு மாகாண சபை ஒன்றை அமைத்து தமிழ் அமைப்புக்களிடம் ஒப்படைக்கப்போவதாக உறுதியளித்திருந்தது. எனவே அந்த மாகாண சபையில் ஆதிக்கம் செலுத்தவேண்டுமானால் இரண்டு விடயங்களில் கவனம் செலுத்தவேண்டும் என்று பத்மநாபா நினைத்தார். முதலாவது அதிக உறுப்பினர்களைச் சேர்த்து அமைப்பைப் பலப்படுத்துவது. இரண்டாவது இந்தியப் படையினருக்கு போதிய ஒத்துழைப்பை வழங்கி அவர்களின் நன்மதிப்பைப் பெறுவது.

இதற்கும் அவர்களுக்கு அதிகம் போராளிகள் தேவைப்பட்டார்கள். அதனால் ஈ.பி.ஆர்.எல்.எப். ஆட்சேர்ப்பில் தாராளமாக ஈடுபட்டது.

சமூகவிரோதிகளும்..

முன்னர் அமைப்பில் இருந்து விலகியவர்கள், அமைப்பின் ஆதரவாளர்களாக இருந்தவர்கள், என்று பலரையும் ஈ.பி.ஆர்.எல்.எப். தம்முடைன் இணைத்துக்கொள்வதில் பின்நிற்கவில்லை.

விளைவு- பல சமுக விரோதிகளும் அந்த அமைப்பினுள் தம்மை இணைத்துக்கொண்டு அட்டகாசங்களில் இறங்க ஆரம்பித்தார்கள்.

இவ்வாறு ஈ.பி.ஆர்.எல்.எப். இனுள் இணைத்துக்கொள்ளப்பட்டவர்தான் சுதாகர் என்கின்ற தங்கன். இவரது உண்மையான பெயர் பொண்ணுத்துரை கந்தையா. யாழ்ப்பாணம் சுதுமலையைச் சேர்ந்தவர். முன்னர் இவர் ஈ.பி.ஆர்.எல்.எப். இனது ஆதரவாளராக இருந்தவர். இந்தியப் படையினருடன் இணைந்து ஈ.பி.ஆர்.எல்.எப். யாழ்ப்பாணம் வந்தபோது இந்தச் சுதாகரும் அந்த அமைப்பின் ஒரு முக்கிய உறுப்பினராக பொறுப்பேற்றிருந்தார்.

இந்தியப் படையினரை விடவும் சுதாகர் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப். இனர் அதிக அட்டகாசங்களை யாழ்ப்பாணத்தில் நிகழ்த்தியிருந்தார்கள். கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு என்று இவர்கள் எந்தவிதத்திலும் இந்தியப் படையினருக்கு சளைக்காமல் கோரதாண்டவம் ரோ

 

ஆடியிருந்தார்கள். இவர்கள் நடத்திய அட்டூழியத்திற்கு உதாரணமாக பின்நாட்களில் ஊடகங்களில் வெளியான ஒரிரு சம்பவங்களைக் கூறமுடியும்.

புலிவேட்டை:

யாழ்பாணம் வட்டுக்கோட்டைக்கு விடுதலைப் புலிகளின் பொறுப்பாளராக இருந்தவர் பாரத். சுதாகர் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப். குழு ஒன்று பாரத்தைச் தேடி அவரது வீட்டிற்குச் சென்றது. வீட்டை உடைத்துச்கொண்டு உள்ளே புகுந்தார்கள். அங்கு பாரத் இல்லை. பாரத் இல்லாவிட்டால் என்ன? பாரத்தின் தங்கை ரஞ்சி அழகாக இருந்தாள்.

இந்த அப்பாவிப் பெண் மீது பாய்ந்தார் சுதாகர். அந்தப் பெண் அழுதாள். துடித்தாள். மன்றாடினாள். பாய்ந்தவர்கள் மனமிரங்கவில்லை. தமது வக்கிரத்தை கொடூரமாகத் தீர்த்துக்கொண்டார்கள். பின்னர் அந்தப் பெண்ணைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலைசெய்துவிட்டுச் சென்றார்கள்.

நண்பருக்காக

சுதாகரின் குழுவில் இருந்த ஒருவரின் பெயர் ராஜா. அவருக்கு ஒரு பெண் மீது காதல் ஏற்பட்டது. காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தார்கள். தனது சகாவின் காதலுக்காக, ஆயுதம் ஏந்திக் களம் புகுந்தார் சுதாகர். சாதாரண களம் அல்ல. ஒரு முகாமைத் தாக்கும் தீவிரத்துடன் குறிப்பிட்ட அந்தப் பெண்ணின் வீட்டை நோக்கி மோட்டார் ஷெல்கள் ஏவப்பட்டன.

துப்பாக்கி வேட்டுக்கள் பொழியப்பட்டன. கதவை உடைத்து வீட்டினுள் புகுந்து வெற்றிகரமாக அந்தப் பெண்ணை மீட்டு தனது சகாவிடம் ஒப்படைத்தார். இத்தனைக்கும் அந்தப் பெண்ணின் தந்தை ஒரு வயோதிபர். அந்தப் பெண்ணுக்கு சகோதரர்களும் கிடையாது.

விடுதலைப் புலிகளின் ஆதரவாளாகள் என்று சந்தேகிக்கப்படுவோர் மீதும், அவர்களின் வீடுகளின் மிதும் தாக்குதல் மேற்கொள்ளுவதும், கொள்ளை அடிப்பதும், பணம் கறப்பதும் இவரின் முக்கிய பணியாக இருந்தது.

இராணுவப் பொறுப்பாளர்:

ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் மாணிப்பாய் பகுதிக்கு இராணுவப் பொறுப்பாளராக நியமிக்ப்பட்டிருந்தவர் நிசாம். அவரின் சொந்தப் பெயர் பிரபா. இணுவிலைச் சேர்ந்தவர்.

சித்திரவதைக்கும், கொலைகளுக்கும் பேர்போனவர். விடுதலைப் புலிகளையும், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களையும், விடுதலைப் புலிகளின் குடும்ப உறுப்பினர்களையும் கொலைசெய்வதில் இவர் மக்கள் மத்தியில் மிகவும் அச்சத்துடன் நோக்கப்படும் ஒரு மனிதராகவே இருந்தார்.

அதுவும் கலை நயத்துடன் விதம் விதமாக மிகவும் கொரூரமாகக் கொலைகள் செய்வதில் மிகவும் வல்லவராக இவர் நோக்கப்பட்டு வந்தார்.

இந்தியப் படையினரின் காலத்தில் மட்டும் இவர் 87 விடுதலைப் புலி ஆதரவாளர்களைக் கொலை செய்ததாகப் பெருமைப்பட்டுக்கொள்வார். மண்வெட்டியால் தலையை வெட்டிக் கொலை செய்வதில் இவர் மிகவும் பிரபல்யமானவர். வெட்டப்பட்ட தலை தனியாகக் கிடந்து துடிப்பதையும் பார்த்து ரசிப்பாராம். வெட்டப்பட்ட தலை தனியாகக் கிடந்து துடிப்பதை இவரது கோஷ்டியில் இருப்பவர்கள் மற்றய ஈ.பி.ஆர்.எல்.எப். இனரிடம் விபரிப்பதில் அலாதி குஷி அடைவார்களாம்.

இவரது கொலைகள் பற்றிக் குறிப்பிடும் ஊடகச் செய்திகள், இவரால் கொலை செய்யப்பட்ட 87 நபர்களுள், சுன்னாகத்தைச் சேர்ந்த கஜன் என்பவர் மாத்திரமே விடுதலைப் புலி உறுப்பினர் என்றும், மற்றய 86 பேரும் அப்பாவிகள் என்றே குறிப்பிடுகின்றன.

தனது சகோதரியின் கணவனையும் புலிகள் இயக்க ஆதரவாளர் என்று குற்றம் சுமத்தி இவர் சுட்டுக்கொன்றது பற்றி இவரது தோழர்கள் பெருமைப் பட்டுக்கொள்வார்கள்.

இதுபோன்று இந்தியப் படை காலத்தில் இந்தியப் படையினர் திருப்திப்படும்படி நடந்து வடக்கு கிழக்கில் முடிசூடா மன்னர்களாக வலம்வந்தவர்கள் பலர் இருக்கின்றார்கள்.

ஈ.பி.ஆர் எல்.எப் அமைப்பின் திருகோணமலை மாவட்டப் பொறுப்பாளராக இருந்த ஜோர்ஜ், மட்டக்களப்பின் முக்கிய புள்ளியாக இருந்த கிருபா, ராசிக், மதன், நிவாஸ், 2005 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தெமட்டக்கொடவில் வைத்துக் கொல்லப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர் ரங்கப்பா, காளிதாஸ், கிருஷணமூர்த்தி, முறளி என்று இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.

இவர்களின் தாக்குதலுக்கு உள்ளாவதற்கு ஒருவர் விடுதலைப் புலி உறுப்பினராக இருக்கவேண்டும் என்ற அவசியம் ஒன்றும் கிடையாது. விடுதலைப் புலிகளின் ஒரு ஆதரவாளனாக, புலி உறுப்பினரொருவரின் தூரத்து உறவினனாக, அல்லது இந்த மாற்றுக்குழு உறுப்பினர்களுக்கு அறிமுகம் இல்லாத ஒருவராக இருந்தாலே போதும். அடித்துப் பிடித்துக்கொண்டு வந்து கட்டி இழுத்துச் சென்று சித்திரவதை செய்துவிடுவார்கள். அவர்களின் சித்திரவதை பெரும்பாலும் கொலையில்தான் முடியும். சிலவேளைகளில் அடித்து நொறுக்கிவிட்டு பரிதாபப் பட்டு விட்டுவிடவும் செய்துவிடுவார்கள்- உங்களிடம் ஓரளவு பணவசதி இருந்தால்.

ஒரு நபருக்கு வேறு சில தகுதிகள் இருந்தாலும், இந்த தேசத் துரோகிகளின் கொடும்பார்வையில் பட்டுவிடும் அபாயம்; இருந்தது. அதாவது ஒரு நபர் அழகான சகோதரியை அல்லது அழகான மனைவியை கொண்டிருந்தலும் அவர் இந்த நபர்களுக்கு ஒரு புலியாகத் தென்பட்டு விடுவார். அவரை பிடித்துச் சென்று நையப்புடைத்து அடைத்துவைத்துவிட்டு, அவரை மீட்க வரும் அவரது சகோதரியை அல்லது மனைவியை தமது கோராப் பசிக்கும் பலியாக்கிய பல சம்பவங்களும் இருக்கின்றன. இவற்றில் சில உலகின் பார்வைக்கு தெரியவந்திருந்தன. பல சம்பவங்கள் வெளித்தெரியவராமல் மறைக்கப்பட்டுவிட்டன.

மட்டக்களப்பு புது நகரைச் சேர்ந்த ஒருவர் பாலா. இவரது திருமணம் நடைபெற்ற விதம் பற்றி இப்பொழுதும் அந்தப் பிரதேசத்து மக்கள் பேசிக்கொள்வார்கள். அப்பிரதேசத்தில் உள்ள அனைவருக்கும் அழைப்பை வைத்திருந்தார். திருமண விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. அந்தப் பிரதேசத்தில் இதுவரை நடைபெறாத அளவிற்கு விமரிசையாக நடைபெற்றது. கட்டிட கொந்திராத்துக்காரர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பணி ஒப்படைக்கப்பட்டிருந்தது.

ஒருவர் உணவுப் பொறுப்பு, மற்றொருவர் தோரணப் பொறுப்பு என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு பொறுப்பை ஏற்றுக்கொண்டிருந்தார்கள். திருமணத்திற்கு வருகை தந்த பிரமுகர்கள் நகைகள்தாம் பரிசு தரவேண்டும் என்பது போன்று பாலாவின் கூட்டாளிமாரால் நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தார்கள். தமிழ் சினிமாவில் நடைபெறுவதைப் போன்று அந்த திருமணம் கெடுபிடியுடன் அட்டகாசமாக நடைபெற்றது. (1989இல் இந்தியப் படையினர் வெளியேறிய பின்னர் விடுதலைப் புலிகள் இவரைப் பிடித்து இவரிடமிருந்த நகைகளையெல்லாம் இவருக்கு அணிவித்து ஊர்வலம் கொண்டு சென்றது வேறு கதை..)

இந்தியப் படை காலத்தில் இந்தியப் படையினருடன் இணைந்து செயற்பட்ட தமிழ் குழு உறுப்பினர்கள் ஆடிய கோர தாண்டவங்கள் பற்றி எழுத முனைந்தால் அதற்கென்று பல அத்தியாயங்களை ஒதுக்கவேண்டி வரும்.

- நிராஜ் -