Take a fresh look at your lifestyle.

திடீர்ப் புத்தர் சிலைகள்; சிங்களத்தின் உபாயம்?

தமிழர் தாயகப் பகுதிகளில் அண்மைக் காலங்களில் அச்சத்தை ஏற்படுத்தி வரும் புத்தர் சிலைகளில் ஒன்று நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளவில் சில வாரங்களுக்கு முன்னர் முளைத்திருந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தின் செம்மலை கிழக்கு கிராம சேவையாளர் பிரிவில் நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் திடீரென அமைக்கப்பட்ட புத்தர் சிலை அந்த பகுதியில் பெரும் பரபரப்பை – அச்சத்தை ஏற்படுத்தியது. முல்லைத்தீவை சிங்கள மயமாக்குவதும், அதன் மூலம் வடக்கு – கிழக்கு இணைப்பைப் பிளவு படுத்துவதும்தான் இந்த திடீர் புத்தர் சிலையின் பின்னணி.

இதற்கான தந்திரோபாயத்துடன்தான் சிங்கள அரசாங்கம் இப்போது செயற்பட்டு வருகிறது. அதற்கான நீண்டகால மூலோபாயத்தின் ஒரு கட்டம்தான் புத்தர் சிலைகளை அமைக்கும் தந்திரோபாயம். நீராவியடிப் பிள்ளையார் வளவில் அமைக்கப்பட்ட புத்தர் சிலை முதலாவது அல்ல. அது இறுதியானதாகவும் இருக்கப்போவதில்லை.

தமிழர் தாயகப் பகுதிகளைக் கபளீகரம் செய்வதற்கான நீண்டகாலச் செயற்திட்டம் 1948 இல் ஆரம்பமாகிவிட்டது. பிரித்தானிய ஆட்சியாளர்களிடமிருந்து இலங்கைத் தீவின் ஆட்சி அதிகாரத்தை சிங்களவர்கள் பெற்றுக்கொண்ட போதே இதற்கான திடடம் சிங்களத் தலைமையால் தீட்டப்பட்டது. “சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம்.” தமிழர்களுக்கு என ஒரு தாயகம் இருந்தால்தான் அதற்கான போராட்டத்தை முன்னெடுக்கலாம். தாயகத்தையே இல்லாமல் செய்துவிட்டால் தாயகக் கோட்பாடே இல்லாமல் போய்விடும். இந்தக் கணிப்பில்தான் சிங்கள அரசாங்கம் செயற்படுகின்றது. 1948 ஆம் ஆண்டிலேயே அல்லை – கந்தளாய் குடியேற்றத் திட்டத்துடன் ஆரம்பமாகிய இந்த உபாயம் இப்போது வெவ்வேறு வடிவங்களில் தமிழர் தாயகத்தை சிதைக்கத் துடிக்கின்றது.  இப்போது தொல்பொருள் பகுதி என்ற அடையாளத்துடன் வந்துநிற்கின்றது.

தமிழ் பகுதிகளில் தொல்பொருள் ஆய்வு என்ற பெயரில் இப்போது சிங்கள அரச நிர்வாகத்தினால் முன்னெடுக்கப்படுவது மிகவும் ஆபத்தான ஒரு திட்டம். சிங்களக் குடியேற்றங்களை தீவிரப்படுத்துவதை இலக்காகக் கொண்ட ஒரு செயற்பாடுதான் இது. நேரடியாகவே சிங்களக் குடியேற்றங்களை முன்னெடுப்பதிலுள்ள அரசியல் சிக்கல்கள் காரணமாக இதற்காக சிங்களத் தலைமை கண்டறிந்துள்ள புதிய உபாயம்தான் இது. நீர்பாசனத் திட்டத்தையோ அல்லது மீன்பிடித் திட்டத்தையோ காரணமாகச் சொல்லாமல், தமக்குத் தேவையான ஒரு இடத்தில் சிங்களக் குடியேற்றத்தை முன்னெடுக்க தொல்பொருள் திணைக்களத்தின் பிரகடனங்கள் உதவும். செம்மலையில் இரவோடிரவாக அமைக்கப்பட்ட பௌத்த சிலையும் இதன் ஒரு பகுதிதான். வடக்கில் இதுவரையில் ஆறு இடங்கள் தொல்பொருள் பகுதிகள் எனப் பெயரிடப்பட்டிருப்பட்டு, புத்தர் சிலையும்அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஆறாவது இடம்தான் செம்மலை!

செம்மலையை சிங்கள அரச இயந்திரம் அடையாளம் கண்டமைக்குப் பல காரணங்கள் உள்ளன. முதலாவது, முல்லைத்தீவை சிங்கள மயமாக்கும் திட்டத்துக்கு அது அவசியம். இரண்டாவது, வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கு இடையில் இணைப்புப் பாலமாக அந்தப் பகுதி உள்ளது. அதனைக் கபளீகரம் செய்வதன் மூலம் இணைப்பை இல்லாமல் செய்வதற்கான அடுத்த கட்டத்துக்கு நகர முடியும். எந்தவொரு காலப் பகுதியிலும் இணைப்புக்கு வாய்ப்பே இல்லாமல் செய்துவிடுவதற்கான கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இது அடையாளம் காணப்படுகின்றது. நன்கு துல்லியமாகத் திட்டமிட்ட முறையில்தான் சிங்கள அரச இயந்திரம் செயற்படுகின்றது என்பதற்கு இது மற்றொரு உதாரணம்.

சிங்களக் குடியேற்றங்களை முன்னெடுப்பதில் முன்னர் கைக்கொண்ட உபாயங்களை சிங்கள அரசாங்கம் இப்போது மாற்றிக்கொண்டிருக்கின்றது. 1948 இலிருந்து நீர்ப்பானத் திட்டங்களை அடிப்படையாகக் கொண்டதாகவே சிங்களக் குடியேற்றங்கள் முன்னெடுக்கப்பட்டன. டி.எஸ்.சேனாநாயக்க அல்லை – கந்தளாய் குடியேற்றத்தை ஆரம்பித்தார். பின்னர் மகாவலி திட்டத்தின் மூலமாக குடியேற்றங்கள் முன்னெடுக்கப்பட்டன. 1980 களின் பின்னர் திருமலை, முல்லைத்தீவை அபகரிப்பதற்கான மீன்பிடித் திட்டங்களின் மூலம் குடியேற்றங்கள் முன்னெடுக்கப்பட்டன. இப்போது வனவளத் திணைக்களம். தொல்பொருள் திணைக்களம் என்பன இதற்கு உதவுகளின்றன. மற்றொரு வடிவத்தில் சிங்கள மயமாக்கலை முன்னெடுப்பதற்கு அரசுக்கு இந்தத் திணைக்களங்கள் உதவுகின்றன.

தொல்பொருள் திணைக்களத்தைப் பயன்படுத்தி சிங்கள மயமாக்கலை முன்னெடுக்க முடியும் என சிங்கள அரச இயந்திரம் அடையாளம் கண்டிருப்பது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். தொல்பொருள் திணைக்களம் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றது. அதனால், மாகாண அரசு அதில் தலையிட முடியாது. காணி அதிகாரமும் மத்திய அரசிடமே உள்ளது சிங்கள அதிகார வர்க்கத்துக்கு மேலும் பலத்தைக் கொடுக்கும். மாகாண சபைகள் இவ்விடயத்தில் கைகள் கட்டப்பட்ட நிலையிலேயே உள்ளன. குறிப்பிட்ட ஒரு பகுதியில் பௌத்த அடையாளங்கள் காணப்படுவதாகச் சொல்லப்பட்டால், அந்தப் பகுதியைப் பாதுகாப்பதற்கும், மேலதிக ஆய்வுகளை முன்னெடுப்பதற்குமான அதிகாரம் மட்டுமே தொல்பொருள் திணைக்களத்துக்கு உள்ளது.

ஆனால், அந்த அதிகாரத்தையும்  மீறி புத்தர் சிலைகளையும், விகாரைகளையும் அமைப்பதற்கு அதிகாரத் தரப்பு முற்படுவதைத் தட்டிக்கேட்க யாரும் இல்லை. முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் புத்தர் சிலையானது ஜனவரி 27 ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டிருந்தது. ஆனால். திடீரென்று 23 ஆம் தேதி அது திறந்துவைக்கப்பட்டது. குறிப்பிட்ட அந்த இடத்தில் 1964 க்கு முன்னர் சீனர்கள் வாழ்ந்ததாகவும் பௌத்த வழிபாடு இடம்பெற்றதாகவும் பிக்குமார் கூறியிருக்கின்றார்கள். இதன் மூலம் இது ஒரு பௌத்தர்கள் வாழ்ந்த இடம் எனக் காட்டிக் கொள்வதற்கும், தங்களுடைய குடியேற்றத்தை நியாயப்படுத்துவதற்கும் பௌத்த மதத் தலைவர்கள் முற்படுகின்றார்கள் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.

அதற்கும் மேலாகச் சென்று அங்குள்ள பிள்ளையார் ஆலயத்தை அப்புறப்படுத்துவதற்கான திட்டம் ஒன்றும்அவர்களிடம் இருந்துள்ளது.

இது தொடர்பாக குறிப்பிட்ட பகுதியில் நீண்ட காலமாக வசிக்கும் மக்கள் மற்றும் ஆய்வாளர்கள், “இந்தப் பிரதேசத்தில் எந்த காலத்திலும் சீனர்களோ, சிங்களவர்களோ வாழவில்லை” என்கின்றார்கள். ஆக, இதை ஒரு தொல்பொருள் பகுதியாக காட்டி அதன் மூலம் புத்தர் சிலை, விகாரை என்பவற்றை அமைத்து சிங்கள குடியேற்றங்களை தீவிரப்படுத்துவது இதன் பின்னணியில் செயற்படும் சிங்கள அதிகார வர்க்கத்தினரும் அரசாங்கத்தினதும் உள்நோக்கமாக இருந்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது.

தமிழ் தரப்பைப் பொறுத்தவரையில் இந்த விவகாரத்தில் சிக்கலான சில பிரச்சனைகள் இருக்கின்றன.  தொல்பொருள் திணைக்களம் மாகாணசபையின் கட்டுப்பாட்டில் இல்லை. அது மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதனால் அந்த திணைக்களத்தினூடாக முன்னெடுக்கப்படும் பணிகள் எதனையுமே மாகாணசபை மூலமாகவோ அல்லது எந்த ஒரு உள்ளூராட்சி மன்றங்களின் மூலமாகவோ தடுத்து நிறுத்திவிட முடியாது. இது சட்டத்தின் மூலம் அவர்களுக்குள்ள பாதுகாப்பு. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுதான் தொல்பொருள் திணைக்களத்தின் ஆதரவுடன் திட்டமிட்ட முறையிலான சிங்கள மயமாக்கல் அதிகார வர்க்கத்தினரால் முன்னெடுக்கப்படுகின்றது.

வடக்கில் மாகாண சபை இல்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் ஒத்துழைக்கும் நிலைமை தொடர்கின்றது. அரசாங்கத்துக்குச் சங்கடத்தைக் கொடுக்கும் வகையில் செயற்படக் கூடாது என்பதில் கூட்டமைப்பின் தலைமை கவனமாக இருக்கின்றது. இந்த பின்னணியில் திட்டமிட்ட முறையிலான தங்களுடைய செயற்பாடுகளை எந்தவித தடங்கலுமின்றி முன்னெடுக்கலாம் என்ற துணிச்சல் சிங்கள அதிகார வர்க்கத்துக்கு ஏற்பட்டிருப்பதையே தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிகழ்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் குடியேற்றப்பட்ட சிங்களவர்களுக்கு 1984 ஆம் ஆண்டிலிருந்து மகாவலி அபிவிருத்தி சபை மட்டும் விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் அனுசரணை வழங்கி வருகின்றது. இந்த செயற்பாடுகள் எல்லை மாவட்டங்களில் சனத்தொகைப் பரம்பல் திட்டமிட்ட முறையில் மாற்றி அமைக்கப்படும் நோக்கத்தைக் கொண்டவை. தொல்பொருள் திணைக்களத்தின் ஆதரவுடன் தமிழர் பிரதேசங்களில் முன்னெடுக்கப்படும் தற்போதைய செயற்பாடுகள் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களுக்கு ஒரு சட்டபூர்வமான அங்கீகாரத்தைக் கொடுக்கின்றது. அதனை நியாயப்படுத்துவதற்கும் தொல்பொருள் திணைக்களம் உதவுகின்றது.

2013 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஓர் வர்த்தமானி அறிவித்தலின் மூலம் இலங்கைத் தீவில் 177 இடங்கள் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்கள் வடமாகாணத்தை சேர்ந்தவை. பெரும்பாலான இடங்கள் பௌத்த வழிபாட்டு இடம்பெற்ற பிரதேசங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. இதனை தற்செயலான ஒன்றாகப் பார்க்க முடியாது. தமிழர்களின் தாயகக் கோட்பாட்டை முற்றாக அழிக்கும் ஒரு திட்டமிட்ட செயல் இது. எம்முன்பாகவுள்ள ஆபத்தை இது காட்டுகின்றது.

சிங்கள அரசாங்கம் அரசியல் தீர்வைத் தரும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை கற்பனையில் இருக்கும் போது தீர்வுக்கான அடிப்படையையே இல்லாமல் செய்யும் திட்டம் இது!

சிங்கள அரச இயந்திரம், இராணுவம் மற்றும் பௌத்த அமைப்புக்களின் ஆதரவுடன் துல்லியமாகத் திட்டமிட்டு இந்தச் செயற்பாடுகளைத் தீவிரப்படுத்தும் போது, தமிழர் தரப்பு அதனை எதிர்கொள்ள – தாயகத்தைப் பாதுகாக்க என்ன செய்யப்போகின்றது? அதற்கான உபாயம் ஏதாவது எம்மிடம் உள்ளதா?