தோட்டங்களுக்குள் புகுந்து பெருந்தொகை மரக்கறிகள் திருட்டு. ஏழாலையில் சம்பவம்

breaking
குப்பிளான் தெற்கு - ஏழாலை கிழக்குப் பகுதிகளில் விவசாய நிலங்களுக்குள் நேற்று வியாழக்கிழமை அதிகாலை புகுந்த திருடர்கள் பல ஆயிரக்கணக்கான ரூபா பெறுமதியான உருளைக்கிழங்கு, கறிமிளகாய், வெங்காயம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றுள்ளனர். அத்துடன் பயிர்களையும் நாசமாக்கிவிட்டு திருடர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.
குப்பிளான் தெற்கு காடகடம்பை இந்து மயானத்திற்கு அண்மையிலுள்ள விவசாய நிலத்திற்குள் உட்சென்ற திருடர்கள், அங்கு விளைந்து அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த நிலையில் சுமார்- 250 கிலோ உருளைக்கிழங்கை திருடியுள்ளனர். தொடர்ந்து இப்பகுதியில் இருந்து சுமார் 200 மீற்றர் தூரத்தில் உள்ள விவசாய நிலத்திற்குள் சென்ற திருடர்கள் அங்கு பயிரிடப்பட்டிருந்த சுமார் 400 கிலோ கறி மிளகாயை பறித்து திருடிச் சென்றுள்ளனர். நூற்றுக்கணக்கான கறி மிளகாய்ச் செடிகளையும் முறித்து அவர்கள் நாசமாக்கிச் சென்றுள்ளனர். ஏழாலை கிழக்கைச் சேர்ந்த தவகுல சிங்கம் உதயகுமார் என்பவரின் விவசாய நிலத்திலேயே இவ்விரு திருட்டுச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. இவற்றைவிட இப்பகுதியில் உள்ள மற்றொரு விவசாய நிலத்திற்குள் சென்ற திருடர்கள் அங்கு அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்த வெங்காயத்தையும் திருடிச் சென்றுள்ளனர். ஏழாலை கிழக்கைச் சேர்ந்த இளம் விவசாயியான கணேசநாதன் பமிலன் என்பவரின் தோட்டத்தில் விளைந்த பல ஆயிரம் ரூபா பெறுமதியான வெங்காயமே இவ்வாறு திருட்டுப் போயுள்ளது. குறித்த விவசாய நிலத்திற்குள் திருடர்கள் கொண்டு வந்த உரப்பையொன்றும், நீர் இறைக்கும் இயந்திரத்தின் சிறிய நீர்க் குழாயொன்றும் மீட்கப்பட்டன. திருட்டுப் போன பகுதியில் திருடர்கள் மது அருந்தியதற்கான தடயங்களும் காணப்படுகின்றன. அத்துடன் இந்தத் தோட்டத்துக்கு அயலிலுள்ள புகையிலை தோட்டத்துக்குள்ளும் புகுந்த திருடர்கள் புகையிலைக் கன்றுகளையும் முறித்து சேதமாக்கியுள்ளனர். இந்தத் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக நேற்றுக் காலை சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்றபோதும் தமது முறைப்பாட்டை ஏற்க பொலிஸார் மறுத்துவிட்டதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்தனர். திருடர்களை அடையாளம் காட்டுமாறு பொலிஸார் சிரித்துக் கொண்டே கூறி தம்மை அவமதித்து திருப்பியனுப்பியதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டனர்.