நிவாரணம் மூலம் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும்: ஶ்ரீலங்கா அமைச்சர் நவீன்

breaking
  பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கி அதன் மூலம் அவர்களின் சம்பளத்தை அதிகரிக்க முயற்சி எடுக்கப்படும் என, ஶ்ரீலங்கா பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக முதலாளிமார் சம்மேளனத்துடன் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ள நிலையில், அது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நாம் எங்கள் கருத்துக்களைத் தெரிவித்தோம். அவர்கள் அதனை முற்றாக நிராகரிக்கவில்லை. தோட்ட மக்களின் பிரச்சினைகளைப்போன்று, தோட்ட நிறுவனங்களுக்கும் பிரச்சினை இருக்கின்றது. இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வகையிலான ஒரு திட்டத்தை தயாரிக்க வேண்டும். ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில், அதற்கு மேலதிகமான பணம் வழங்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்தது. ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ளாமல் நாம் முன்னேறிச்செல்ல வேண்டியுள்ளது. ஒப்பந்தத்தை 60 வீதமான தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. எனினும், தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையில் நல்ல தீர்வினைக் காணலாம் என நம்புகிறோம். நிறுவனங்களின் பிரச்சினையை நாம் உணர்கின்றோம். இந்த இடத்தில் கொள்கை ரீதியாக அரசாங்கத்தினால் தொழிலாளர்களுக்கு பணம் வழங்க நாம் தயார் என்ற நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தியுள்ளோம்” என மேலும் தெரிவித்துள்ளார்.