பரியோவான் பொழுதுகள்: பரியோவானில் ஈ.பி காரன்கள் செய்த அட்டூழியம்

breaking
1989 ஆண்டு நவம்பர் மாதத்தின் ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று, Yarl Hallல் ஒகஸ்ரின் மாஸ்டரின் Tution வகுப்பு முடிந்து, பிரதான வீதி வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தோம்.
 
நல்லூர் பக்கம் போகும் நண்பர்கள் கோயில் வீதியடியில் விடைபெற, பரி யோவான் கல்லூரி தாண்டிப் போக வேண்டிய நாங்கள் நால்வரும் சைக்கிளை வீடு நோக்கி உழக்கி கொண்டிருந்தோம்.  பிரபுவும் திருமாறனும் முன்னால் போக இளங்கோவோடு நானும் அவர்களிற்கு பின்னால் வந்து கொண்டிருந்தோம்.
 
யாழ்ப்பாணத்தை இந்திய இராணுவம் ஆக்கிரமித்திருந்த கொடிய காலமது. இந்திய இராணுவத்தோடு இணைந்து செயற்பட்ட ஈபிக்காரன்கள், பிள்ளை பிடிகாரன்களாக உலாவந்த பயங்கர காலங்கள் அவை.  ஈபிக்காரன்களின் கட்டாய ஆட்சேர்ப்பிற்கு பயந்து பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டும் டியூடரிகள் பெடியள் இல்லாமல் வெறிச் சோடியும் போயிருந்த இருண்ட நாட்களில் இருந்து அப்போது தான் மெல்ல மெல்ல யாழ் நகரம் விடுபட்டுக் கொண்டிருந்தது.
 
நேரம் பின்னேரம் ஆறு மணியைத் தாண்டியிருக்கும், யாழ் நகரில் இருள் மெல்ல மெல்ல கவியத் தொடங்கியிருக்க, நாங்கள் பரி யோவானின் பிரதான வாயிலை தாண்டிக் கொண்டிருந்தோம். பரி யோவான் வளாகத்தினுள் studiesற்கு போக விடுதி நண்பர்கள் Robert Williams மண்டபத்திற்கு வெளியே குழுமி நின்றதும் தெரிந்தது. ஞாயிற்றுக்கிழமைகளில் பரி யோவான் வளாகத்தினுள் எக் காரணம் கொண்டும் day scholars போக முடியாது என்பது கல்லூரி காலங்காலமாக கடைபிடித்து வந்த கட்டுப்பாடுகளில் ஒன்று.
 
பரி யோவான் தேவாலயம் தாண்டி, Figg hallஐ நெருங்கும் போது, திருமாறனின் அம்மா எங்களிற்கு எதிர்பக்கமாக பதைபதைப்புடன் நடந்து வந்து கொண்டிருந்தா. எங்களை வீதியோரமாக நிற்பாட்டி “சந்தியில காரொன்றில ஈபிகாரன்கள் நிற்கிறாங்கள்..நானும் உங்களோட வாறன்” என்று எச்சரித்து விட்டு, திருமாறனின் சைக்கிளில் அவ ஏறிக் கொண்டா. அம்மாமாரோடு போனா ஈபிக்காரன்கள் ஒன்றும் செய்ய மாட்டாங்கள் என்று திருமாறனின் அம்மா நினைத்திருக்கலாம்.
 
சைக்கிளை ஒரு பத்து உழக்கு உழக்கி அருளாந்தம் block அடி தாண்டியிருக்க மாட்டோம், Old Park சந்தி தாண்டி, சுண்டுக்குளி பக்கம் பார்த்துக் கொண்டு நின்ற கார், படாரென uturn அடித்து நாங்கள் வந்து கொண்டிருந்த பக்கமாக  திரும்பியதும், கார் நின்ற கடையடியிலிருந்து ரெண்டோ மூன்று பேர் துவக்கோடு வெளிப்பட்டதும் ஒரு சில கணங்களில் நடந்தேறி விட்டது.
 
கார் சடாரென திரும்பிய சத்தத்திலும் கடையடியிலிருந்து ஓடி வந்த துப்பாக்கிதாரிகள் போட்ட கூச்சலிலும், பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த சனத்திற்கு கிலி பிடித்துக் கொண்டது. பிரதான வீதியைக் கடந்து பழைய பூங்கா வீதியால் போன ஒரு புலியைக் கண்டதால் அந்த அறுவான்களுக்கு கிலி வந்து வெருண்டடித்ததால் நடந்ததேறிய நாடகத்தின் ஆரம்பக் காட்சி தான் இவையென பின்னர் அறிந்து கொண்டோம்.
 
எங்களிற்கு முன்னால் போய் கொண்டிருந்த பிரபுவும் திருமாறனும் முன்னால் இருந்த வீட்டுக்குள் ஓட, தெருவில் இருந்த சனமும் அதே வீட்டுக்குள் ஓட, என்னோடு நின்ற இளங்கோ சொன்னான் “மச்சான், வீட்டுக்க கன சனம்.. நாங்க schoolற்குள்ள போவமடா”. சரியென்று சொல்ல முதல் அவனோடு சேர்ந்து என்னுடைய சைக்கிளும் uturn அடித்து, கல்லூரியின் பிரதான வாயிலை நோக்கி பறக்கத் தொடங்கியது.
 
டப்...டப்...டப்... துப்பாக்கி முழங்கும் ஓசையும், ஸ்....ஸ்...ஸ் என்று அதன் சன்னங்கள் தலைக்கு மேலால் பறந்த சத்தமும், “மச்சான் தலையை குனியடா” என்று இளங்கோ கத்தியதும் இன்றும் காதிற்குள் எதிரொலிக்கிறது.
 
காற்றில் பறந்த சைக்கிள், பிரதான வாயிலின் சிறிய கேட்டை இடித்துக் கொண்டு, போய் நின்றதோ, விடுதி மாணவர்கள் குழுமி நின்ற Robert Williams மண்டபத்தடியில் தான். மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க நின்ற எங்களை, விடுதி மாணவர்கள் அக்கறையோடு விசாரிக்க தொடங்கவும், பிரதான வாயிலின் சிறிய கேட்டை தள்ளிக் கொண்டு உள்ளே வந்த ஈபிக்காரன்கள், Principalன் office பக்கமிருந்த Tin shed வகுப்பறைகளை நோக்கி தங்களது தானியங்கி துப்பாக்கிகளிலிருந்து வேட்டுக்களைத் தீர்க்கவும் சரியாக இருந்தது.
 
சைக்கிளை போட்டு விட்டு, புத்தகங்களையும் எறிந்து விட்டு, விடுதி நண்பர்களோடு சேர்ந்து நாங்களிருவரும் Hostel பக்கம் ஓடத் தொடங்கினோம். Memorial Hostelலடிக்கு வர, வழமையாக தங்களது விடுதிக்குள் எங்களை அனுமதியாத விடுதி நண்பர்கள், “மச்சான் வாடா.. கெதியா வாடா” என்று கையை பிடித்து இழுத்துக் கொண்டு போனார்கள். “எல்லோரும் கட்டிலுக்கு கீழே படுங்கோ” என்று யாரோ ஒரு Prefect சத்தமாக கத்த, நாங்கள் எல்லோரும் நெஞ்சம் பதைபதைக்க கட்டிலுக்கு அடியில் படுத்திக்கிடந்தோம்.
 
சிறிது நேரத்தில், “டேய்.. xxxxxx.. வெளில வாங்கடா...உங்களை round up பண்ணியிருக்கிறம்” என்று வெளியே அவங்களில் ஒருத்தன் கத்துவது கேட்டது. எங்களிற்கு முன்னால் இருந்த அறையிலிருந்து அண்ணாமார் கையை தலைக்கு மேலே தூக்கிக் கொண்டு வெளியே போக, நாங்களும் அவர்களை பின் தொடர்ந்தோம்.
 
Canteenற்கு முன்னால் இருந்த Tennis Court அடியில் குழுமியிருந்த எங்களை சுற்றி நாலோ ஐந்து ஈபிகாரன்கள் துப்பாக்கிகளோடு நின்றார்கள். “டேய் .. எங்களைக் கண்டு ஆரடா ஓடினது” ஈபிகரான்களின் பொறுப்பாளரைப் போன்றவன் கத்தினான்.
 
மோட்டு மூதேசிகள் பள்ளிக்கூடத்திற்குள் வந்து அறம்புறமாக சுட, வளாகத்திற்குள் இருந்த ஐம்பது மாணவர்களும் தான் ஓடினார்கள், இதில் யார் ஓடினது என்று  மொக்குக் கேள்வி கேட்டால்,  என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அனைவரும் அமைதியாக இருந்தார்கள்.
 
“எனக்கு தெரியும்.. யார் ஓடினது என்று.. இப்ப பிடிக்கிறன் பார்” என்று பொறுப்பாளர் தன்னைத் தானே James Bond ஆக்கினார். “டேய்.. நீ போய்.. அந்தா அதில விழுந்து கிடக்கிற புத்தகத்தை எடுத்திட்டு வாடா” தன்னுடைய அல்லக்கை ஒன்றிற்கு பொறுப்பாளர் கட்டளைப் பிறப்பித்தார்.
 
ஈபிக்காரன் சுட்ட பயத்தில் எல்லோரும் தான் புத்தகத்தை வீசி விட்டு ஓடினாங்கள், இதுக்க யாருடைய புத்தகம் மாட்டுப்படப் போகுதோ என்று நாங்க பதற, ஈபி அல்லக்கை ஒரு CR கொப்பியோடு திரும்பியது. “ம..யூ..மயூரன்” ஈபியின் பொறுப்பாளர் எழுத்துக் கூட்டாத குறையாக புத்தகத்தில் எழுதியிருந்த பெயரை வாசித்தான்.
 
“மயூரன் யாரிங்கே.. வெளில வாடா” என்று அவன் கத்த, நாங்களும் மயூரனை தேடத் தொடங்கினோம். மயூரன் என்ற பெயரில் எங்களது கும்பலில் யாரும் இருப்பதாக தெரியவில்லை. எங்களது பரி யோவான் கும்பலில் பரி யோவான் ஆலய போதகர் சர்வானந்தன், சில ஆசிரியர்கள், Prefects, மாணவர்கள் என்று எல்லோரும் இருக்க, யாரும் எதுவும் பேசத் துணியாத அந்தக் கணத்தில் தான் முன் வரிசையில் நின்ற சரவணபவன் அண்ணா ஈபிக்காரனிற்கு விளக்கம் கொடுக்க முன்வந்தார்.
 
“என்னென்டா அண்ணே.. மயூரன் ஒரு day scholar.. அவர் தன்ட கொப்பியை அவர்ட hostel friendற்கு குடுத்திட்டு வீட்ட போட்டார்.. அவர் இப்ப..” சரவணபவன் அண்ணா சொல்லி முடிக்கவில்லை கன்னத்தை பொத்தி ஈபிக்காரன் பளாரென்று அறைந்தான். “டேய்.. எங்களுக்கு நீ சுத்துறியா.. பேய்ப்.. xxxx” பிஸ்டலை எடுத்து சரவணபவன் அண்ணாவின் மண்டையில் வைக்க எங்களுக்கு குலை நடுங்கியது.
 
“தம்பி.. இவர் ஒரு borderer.. இவருக்கு ஒன்றும் தெரியாது.. அவரை ஒன்றும் செய்யாதீங்கோ” சர்வானந்தன் போதகர் சரவணபவன் அண்ணாவின் உதவிக்கு வர “shut up.. you bastard” வெள்ளையங்கி போதகரிற்கு ஆங்கிலத்தில் அர்ச்சனை கிடைத்தது.
 
“கொண்டு வாங்கடா இவனை” ஈபிக்கார பொறுப்பாளன் உத்தரவிட, அல்லக்கைகள் சரவணபவன் அண்ணாவின் கைகளை பின்புறமாக கட்டிக் கொண்டு, “நடவடா..” என்று தள்ளிக் கொண்டு, இருட்டில் கரைந்தார்கள்.
 
சில மாதங்களிற்கு முன்னர் தான் பரி யோவானின் மிகச் சிறந்த ஆளுமை நிறைந்த கிரிக்கெட் வீரனும், மாணவர்களால் பெரிதும் விரும்பபட்டவருமான அகிலனை, மண்டையன் குழுவின் கொலை வெறிக்கு பலிகொடுத்திருந்த பரி யோவான் சமூகம், இன்னுமொரு மாணவனையும் இழப்பதை தடுக்க அந்த இரவே உடனடியாக களத்தில் இறங்கியது.
 
பரி யோவானின் அதிபர் Dr. தேவசகாயம், போதகர் சர்வானத்தன், மற்றும் ஆசிரியர்கள், இந்திய இராணுவத்தின் யாழ்ப்பாண தளபதியை சந்திக்க பழைய பூங்காவில் அமைந்திருந்த அவரது முகாமிற்கு உடனடியாக நேரடியாகவே சென்று கொடுத்த முறைபாட்டால், சரவணபவன் அண்ணாவின் உயிர் ஈபிகாரன்களினமிருந்து காப்பாற்றப்பட்டது.
 
ஆனால்.. A/L பரீட்சை எழுதிவிட்டு பெறுபேறுகளை எதிர்பார்த்து காத்திருந்த அறிவாளி என்று அறியப்பட்ட தேவகுமாரின் உயிரை ஈபிகாரன்கள் காவுகொண்டதை அந்த ஆண்டவனால் கூட தடுக்க முடியவில்லை. A/L சோதனையில் 3AC எடுத்த அறிவாளியையும் பலியெடுத்து விட்டுத் தான்
ஈபிக்காரன்கள் யாழ்ப்பாண மண்ணை விட்டு இந்திய இராணுவத்தோடு கப்பலேறினார்கள்.
 
யாழ்ப்பாணத்தில் எண்பதுகளின் இறுதிக் காலங்களில் கோரத்தாண்டவமாடிய ஈபிக்காரன்களிற்கும் படுகொலைகள் பல புரிந்த மண்டையன் குழுவிற்கும் தலைமை தாங்கிய சுரேஷ் பிரேமச்சந்திரன் போனமுறை நடந்த  தேர்தலில்களில் தோற்று போனது மகிழ்ச்சியை தந்தது.
 
விடுதலைப் புலிகளால் ஞானஸ்னானம் கொடுக்கப்பட்டு மீண்டும் தமிழ் தேசிய அரசியலில் இணைந்திருந்து, மிகக் தீவிரமான தமிழ் தேசிய நிலைப்பாடு எடுத்திருந்த அவரை, இருபத்தைந்து ஆண்டுகள் கடந்த பிற்பாடும் தமிழ் மக்கள் தண்டிக்க தயாராகவே  இருந்திருக்கிறார்கள் என்பது அவரோடு இணைந்து அரசியல் பயணம் மேற்கொள்ள நினைத்த நினைக்கும் தரப்புக்களிற்கு எச்சரிக்கையாக இருக்கட்டும்.
- jude prakash-