ஈ.பி.ஆர்.எல்.எப் தொடர்ந்து ,ரெலோ, புளொட் அமைப்பினர் மேற்கொண்ட படுகொலைகள்.!

breaking
நான் என் வாழ்நாளில் அதாவது ஈழப்போராட்ட வரலாற்றில் பார்த்த முதல் கொலை எனக்கு இப்போதும் நன்றாக நினைவிருக்கிறது. எண்பதுகளின் நடுப்பகுதி அது.
நான் எனது ஊரான வல்வெட்டித்துறையிலிருந்து உடுப்பிட்டிக்கு ரியூசனுக்காக மலர் அக்காவீட்டிற்கு சென்றிருந்தபோது அவரின் வீட்டின் முன்னால் ஒரு வாகனம் ஒன்று வந்து கிறீச்சிட்டு நின்றது. அந்த வாகனத்திலிருந்து குதித்த பல பெடியங்கள் ஆயுதங்களுடன் மலர்அக்கா வீட்டிற்கு பக்கத்து வீட்டிற்குள் ஓடினார்கள். அப்போது ஒரு வயதான அம்மாவும் மூன்று அக்காக்களும் "அண்ணா ஓடு ஓடு" என்று கத்தியபடி அந்த பெடியங்களை தடுக்க முனைந்தார்கள். ஆனால் பெடியங்கள் அவர்களை துப்பாக்கியால் தாக்கி தூக்கி எறிந்துவிட்டு வீட்டுக்குள் ஓடினார்கள். சிறிது நேரத்தில் இரத்த வெள்ளத்தில் ஒரு அண்ணாவை வாகனத்தில் தூக்கி எறிந்தபடி அங்கிருந்து மிக வேகமாக மறைந்து போனார்கள். அப்போது ஒருவர் இன்னொருவருக்கு சொல்லிக்கொண்டிருந்தார்.. "பொபியின்ர பெடியள் வந்து தாஸின்ர பெடியளை சுட்டு இழுத்துகொண்டு போகிறாங்கள்" என்று. நான் என் வாழ்நாளில் அதாவது ஈழப்போராட்ட வரலாற்றில் பார்த்த முதல் கொலை அது. சிங்களவன் தமிழனை கொன்றதை நான் அப்போது பார்க்கவில்லை. ஒரு இயக்கத்தை சேர்ந்தவரை வேறு ஒரு இயக்கத்தை சேர்ந்தவர் அழித்ததையும் பார்க்கவில்லை. ஒரே இயக்கத்திற்குள் இருந்தவரை அதே இயக்கம் சுட்டுகொன்றதை பார்த்ததே எனது ஈழப்போராட்ட அரசியலின் முதல் மனப்பதிவு. ரெலோ இயக்கத்தின் ஒரு பிரிவைச் சேர்ந்தவர்களால் அதன் வேறு பிரிவை சேர்ந்தவர்கள் சுடப்பட்ட வரலாறு இது. பிற்பாடு அந்த இரு பிரிவினரும் யாழ் வைத்தியசாலைகளில் ஒன்றின் முன் மக்களையும் நோயாளிகளையும் பொருட்படுத்தாது மிக மூர்க்கமாக பொருதி ரெலோவின் பொபி பிரிவினரால் தாஸ் உட்பட பலர் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர். ரெலோ இயக்கத்தை புலிகள் அடக்குவதற்கு முன்னான ஒரு நிகழ்வு இது. இப்படி நிறைய நிகழ்வுகளை ஒவ்வொரு இயக்கம் தொடர்பாகவும் வரலாற்றிலிருந்து பட்டியலிட முடியும். இந்த சம்பவத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு சுழிபுரத்திற்கு மாமி வீட்டிற்கு சென்றிருந்தபோது 'ஆறு விடுதலைப்புலிகளை காணவில்லை' என்ற அறிவித்தலும் பிற்பாடு அவர்கள் புளொட் இயக்கத்தினரால் கடத்தப்பட்டு சித்தரவதை செய்யப்பட்டு இரகசியமாக படுகொலை செய்யப்பட்டார்கள் என்ற கண்ணீர் அஞ்சலி அறிவித்தல்களையும் காணநேரிட்டது. நிலைமை இப்படியிருக்க எல்லா மாற்று இயக்க அண்ணையும் சேர்ந்து புலிகள்தான் சகோதரப் படுகொலையை ஆரம்பித்தவை என்று சொல்லித் திரியினம். அதை ஏந்தி வாந்தியாக எடுக்க காலாகாலத்திற்கு ஒரு கூட்டமும் உருவாகியிருக்கிறது. -பரணி கிருஷ்ணரஜினி