ஶ்ரீலங்கா அரசியலில் குதிக்கவுள்ள ஜே.வி.பி ஸ்தாபக தலைவரின் மகன்

breaking
  ஜே.வி.பியின் ஸ்தாபகத் தலைவர் அமரர் ரோஹன விஜேவீரவின் புதல்வர் உவிந்து விஜேவீர விரைவில் கன்னி அரசியல் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளார். ரோஹன விஜேவீரவின் குடும்பத்துக்கும், ஜே.வி.பியின் தற்போதைய உறுப்பினர்களுக்குமிடையில் மோதல் வெடித்துள்ளதால், புதிய கட்சியொன்றை உவிந்து விஜேவீர ஆரம்பிக்கலாம். அவ்வாறு இல்லாவிட்டால், முன்னிலை சோஷலிஸக் கட்சியின் முக்கிய பதவியொன்றை ஏற்று அரசியல் பயணத்தை தொடரலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவில் உயர்கல்வியை முடித்துக்கொண்டு உவிந்து, அண்மையில் இலங்கை வந்திருந்தார். அப்போது தொலைக்காட்சியொன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியில், ” நாட்டின் சிஸ்டம் சரியில்லை . அதை மாற்ற வேண்டும். இப்போது புரட்சி செய்ய துப்பாக்கிகள் தேவையில்லை. வார்த்தைகளே போதும். புரட்சி என்பது மாற்றம். ஆயுதப் புரட்சி தேவையென நான் கூறவில்லை. தேவையாயின் ஒரு காலத்தில் மாற்றத்தை ஏற்படுத்த நான் பங்களிப்பு செய்வேன்” என்று கூறியிருந்தார். அதாவது, தான் விரைவில் அரசியல் களம் நுழையவுள்ளேன் என்பதை மறைமுகமாககூறிவிட்டு ரஷ்யா பறந்துள்ளார் அவர். ஒருகாலகட்டத்தில் ஆட்சியாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர்தான் ரோஹன விஜேவீர என்பது குறிப்பிடத்தக்கது.