அரியாலையில் சிங்கள குடியேற்றத்திற்கான அத்திவாரத்தை போடும் ஶ்ரீலங்கா இராணுவம்

breaking
வடதமிழீழம், யாழ்ப்பாணம் மாவட்டத்தின் அதிகஷ்ட பிரதேசங்களில் ஒன்றான அரியாலை கிழக்கு பிரதேசத்தை அரசியல்வாதிகள் கைவிட்டதாக கூறி அனைத்து விடயங்களிலும் கை வைக்கும் இன அழிப்பு இராணுவம். கல்வி, சுகாதாரம், அபிவிருத்தி, ஒழுக்கம், போதை பொருள் , பல தார மணம், பாலியல் ஒழுக்க கேடுகள், வன்முறைகள், குற்ற செயல்கள் என பல தரப்பட்ட பிரச்சினைகளை இந்தப் பிரதேச மக்கள் எதிர்கொண்டு வருவதாக தெரிவித்து ஶ்ரீலங்கா இராணுவம் மக்களின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்போவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் மக்களை கைவிட்டுள்ளதால் இன அழிப்பு இராணுவத்தினர் மனித நேய வேலை திட்டங்களுக்காக இந்தப் பிரதேசத்தை தெரிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட இன அழிப்பு இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி இப்பிரதேசத்துக்கு நேரடியாகச் சென்று நிலமைகளை ஆராய்ந்தார். மக்களின் வறுமையை ஒழித்தல், வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புதல், கல்வி, சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றை மேம்படுத்துதல், இளையோர்களுக்கான வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துதல், வன்முறைகள், குற்ற செயல்கள் ஆகியவற்றைக் குறைத்தல், அறிவூட்டல்கள், விழிப்பூட்டல் ஆகிய செயல் திட்டங்கள் இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையகத்தால் முன்னெடுக்கப்படவுள்ளன. கண்துடைப்பு நடவடிக்கையாக 130 பேருக்கு உலர் உணவுப் பொதிகள், 50 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் நேற்று வழங்கப்பட்டன. வடதமிழீழத்தில் தேக்கி வைத்திருக்கும் இராணுவத்தினரை தொடர்ந்து வைத்திருப்பதற்கு உத்தியாக அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் குற்றம் சொல்லி ஶ்ரீலங்கா இராணுவம் மக்களின் மனங்களில் இடம் பிடிக்கவே இப்படியான பணிகளை முன்னெடுக்கிறது தவிரவும் தமிழீழம் எங்கும் ஶ்ரீலங்கா இராணுவத்தின் உதவியுடனேயே போதைப் பொருள் கடத்தலும் குற்றச்செயல்களும் நடந்து வருகின்றன. காலப் போக்கில் ஶ்ரீலங்கா இராணுவம் அரியாலைப் பகுதியில் சிங்கள குடியேற்றம் ஒன்றை ஆரம்பிப்பதற்கான ஆரம்ப நடவடிக்கையே இது.