தூக்கு மேடை தயாராகிறது!

breaking
தூக்கு கயிறு மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கான தரத்தில் காணப்படுகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்கு அதனை இலங்கை தரச்சான்றிதல் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த கயிறானது, கடந்த 2015 ஆம் ஆண்டு பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்த தூக்கு கயிற்றின் தரம் தொடர்பில் ஏதேனும் சிக்கல் காணப்படும் பட்சத்தில் , தரமான புதிய தூக்கு கயிறை வௌிநாட்டிலிருந்து விரைவில் இறக்குமதி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, அலுகோசு பதவிக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் கோரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் கூறியுள்ளது. எதிர்வரும் 25 ஆம் திகது வரை விண்ணப்பங்களை அனுப்பிவைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தூக்கு மேடைக்கு தேவையான ஏனைய உபகரணங்களை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளின் பட்டியில் கடந்த 25 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சட்ட மாஅதிபரின் பிரிந்துரைகளுடன் குறித்த பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அந்த பட்டியலில் 17 குற்றவாளிகளின் பெயர்கள் அடங்கியுள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது