சொல்லிவிட்டு வாருங்கள் வரவேற்க காத்திருக்கிறோம்: மனோவிடம் யோகேஸ்வரன் வேண்டுகோள்

breaking
ஶ்ரீலங்கா அமைச்சர் மனோ கணேசன் மட்டக்களப்பிற்கு அடிக்கடி வர வேண்டும். ஆனால், எங்களிற்கும் சொல்லிவிட்டு வர வேண்டும். அவரது விஜயம் எங்களிற்கு தெரிவதில்லை. ஆனால் பெரும்பான்மை இன அமைச்சர்கள் வரும்போது எங்களிற்கு தகவல் தருகிறார்கள். நாங்களும் அவர்களை வரவேற்கிறோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார். சந்திவெளி சித்தி விநாயகர் வித்தியாலத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் இந்த அரசாங்கத்திற்குக் கொடுத்த ஆதரவின் நிமித்தம் தான் இவ்வாறான பல அபிவிருத்திகள் எங்கள் மக்களை நோக்கி வந்திருக்கின்றன. ஒக்டோபர் 26ம் திகதி ஜனாதிபதி அவர்களினால் ஏற்படுத்தப்பட்ட சதிப் புரட்சியின் காரணமாக பல பின்னடைவுகள் திடீரென ஏற்பட்டது. இருப்பினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போதைய ஆட்சிக்குப் பொருத்தமாக இருக்கக்கூடியது ஐக்கிய தேசியக் கட்சியே என்பதை உணர்ந்து அதற்கான ஆதரவை வழங்கி இன்று அமைச்சர் அவர்கள் இந்த மண்ணிற்கு வருவதற்கு வழியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது என்பதில் நாங்கள் பெருமை கொள்கின்றோம். இன்று எமது மக்களுக்குப் பல அபிவிருத்தி வேலைகள் இந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆனால் எமது பகுதிகளில் இன்னும் பல தேவைகள் இருக்கின்றன. அமைச்சர் மனோகணேசனுக்கான அன்பான வேண்டுகோளாக நான் விடுப்பது, அமைச்சர் அவர்கள் அடிக்கடி எமது மட்டக்களப்புக்கு வரவேண்டும். எமது மக்களுக்கான அபிவிருத்திப் பணிகளில் தொடர்ந்தும் ஈடுபட வேண்டும். ஆனால் வரும் போது எங்களுக்கும் தெரியப்படுத்தி வரவேண்டும் என்பதையும் இந்த இடத்தில் தெரிவிக்கின்றேன். ஏனெனில் அமைச்சர் வருவது எங்களுக்குத் தெரிவதில்லை. இங்கு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் வரும்போது எங்களுக்கு அறிவித்தல் வருகின்றது. அவர்களை வரவேற்பதற்கு நாங்களும் செல்லுகின்றோம். ஆனால் எங்களது தமிழ் அமைச்சர் இங்கு வரும்போது நாங்கள் வரவேண்டிய கடமை இருக்கின்றது. எனவே எங்களுக்குத் தெரியப்படுத்தி வரவேண்டும் என்பதைக் கேட்டுக் கொள்கின்றேன். ஏனெனில் இந்த அரசாங்கத்தைக் கொண்டு வந்ததில் எங்களுக்கும் பெரும்பங்கு இருக்கின்றது. உங்களோடு சேர்ந்து சேவையாற்ற வேண்டிய பங்கும் எங்களில் தங்கியிருக்கின்றது என்பதை இவ்விடத்தில் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். எமது இந்தப் பிரதேசத்தில் முக்கிய தேவையாக இருப்பது சந்திவெளியையும், திகிலிவெட்டையையும் இணைக்கும் பாலமாகும். முன்பு நல்லிணக்க அமைச்சராக ஜனாதிபதி அவர்கள் இருந்த போது ஆறு பாலங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலே ஒழுங்கு செய்யப்பட்டது. அதிலே சந்திவெளிப்பாலத்திற்காக நல்லிணக்க அமைச்சின் விசேட திட்டத்தின் கீழ் 1200 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அந்தப் பாலம் அமைக்கப்படவில்லை. தற்போது நல்லிணக்க அமைச்சைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நீங்கள் இந்தப் பாலத்தை அமைத்துத் தர முன்வர வேண்டும். அதே போன்று கிண்ணையடி முருங்கன்தீவுப் பாலத்திற்கு 850 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அடுத்து நரிப்புல்தோட்டம் பங்குடாவெளிப் பாலம் இதற்காக 650 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதேபோன்று குருமண்வெளி மண்டூர் பாலம், ராணமடு மண்டூர் பாலம் என பல்வேறு பாலங்கள் நல்லிணக்க அமைச்சினால் முன்பு முன்மொழியப்பட்டது. இதுவரை அமைக்கப்படவில்லை எனவே இந்தப் பாலங்களை அமைப்பதற்குரிய வேலைகள் எமது தற்போதை நல்லிணக்க அமைச்சின் மூலம் பூர்த்தி செய்து தர வேண்டும் என்று தெரிவித்தார். Loading...