கூட்டமைப்புத் தலைமையை மாற்றும் திட்டம்!

breaking
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்வது குறித்து கட்சியின் அடுத்த உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாக, வெளியாகிய செய்திகளை, தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவும், கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் நிராகரித்துள்ளனர். முதுமை மற்றும் உடல்நல குறைவு காரணமாக, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு ஓய்வு கொடுத்து விட்டு, தலைமைப் பொறுப்புக்கு சுமந்திரனை நியமிப்பது குறித்து, கட்சியின் அடுத்த உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் ஆராயப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனை மேற்கோள்காட்டி, கொழும்பு ஆங்கில நாளிதழ்கள் நேற்று செய்தி வெளியிட்டிருந்தன. இதுகுறித்து, தொலைக்காட்சி ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த  தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றம் செய்வது பற்றிச் சிந்திக்கவேயில்லை என்று கூறியுள்ளார். அத்துடன், கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் இந்தக் கருத்தை நிராகரித்தார். “கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் இல்லை. எனவே அவர் இத்தகைய கருத்தை உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் பேசப்பட்டதாக கூறியிருப்பார் என்று எனக்குத் தோன்றவில்லை. இந்த விடயம் பற்றி உயர்மட்டக் குழு கூட்டத்தில் பேசப்படவும் இல்லை” என்றும் சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனை மேற்கோள்காட்டி, கொழும்பு ஆங்கில நாளிதழ்களான ஐலன்ட் மற்றும் சிலோன் ருடே ஆகியன நேற்று இந்தச் செய்திகளை வெளியிட்டிருந்த போதும், நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் அதுகுறித்து எந்த மறுப்பு அறிக்கையையும் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.