சிங்கள படையினர் வெளியேறுவதை தமிழ்மக்கள் விரும்பவில்லையாம்-பீரிஸ்!

breaking
வடக்கில் இராணுவத்தினர் தமிழ் மக்களுடன் நல்லுறவுடன் செயற்படுவதால், இராணுவ முகாம்களை அகற்ற வேண்டாம் என தமிழ் மக்கள்  போராடுவதாக பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப இராணுவத்தினர் வழங்கிய பங்களிப்பினைக்கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கவில்லை.  சர்வதேசத்தில் இராணுவத்தை குற்றவாளிகளாக்கி மீண்டும் இனங்களுக்கிடையில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கவே முயற்சிகளை மேற்கொள்கின்றனர். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக தொடர்ந்தும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்கள் மற்றும் பல சர்வதேச அமைப்புக்களினால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. வடக்கில் இராணுவத்தினர் தமிழ் மக்களுடன் நல்லுறவுடனே செயற்படுகின்றனர். இராணுவ முகாம்களை அகற்ற வேண்டாம் என்று பாதிக்கப்பட்ட மக்கள் இன்று போராடுகின்றார்கள். தமிழர்களுக்கு இராணுவத்தினரை சர்வதேசத்தில் குற்றவாளிகளாக அடையாளப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் கிடையாது. இதனால் எவ்வித நன்மையும் எவருக்கும் ஏற்படாது. ஆனால் இவ்விடயத்தில் கூட்டமைப்பினரே தொடர்ந்து முறையற்ற விதத்தில் செயற்படுகின்றனர்” என ஜி.எல்.பீரிஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.