எவனுக்கு இறக்கை முளைக்கிறதோ அவனுக்கே விடுதலை எட்டும் .!

breaking
நெஞ்சுக்குள் அலையெற்றிய மாயக்கனவுகள் வெளியேற நிஜமனிதர்களாக நிற்கிறோம் இப்போது. மினுங்கிய மின்சாரமற்று, தொடர்புக்கிருந்த தொலைபேசியற்று, செப்பனிடப்பட்ட தெருவற்று, மாவற்று - சீனியற்று - மருந்தற்று ஏனென்று கேட்க எவருமற்று கற்காலத்துக்குத் திரும்புகிறோம் மீண்டும். கணினிகளையும், காஸ்சிலிண்டர்களையும் வீட்டு மூலையில் வீசிவிட்டு மெருகு குலையா மதில்களின் மின்குமிழ்களையும், விறாந்தையின் தரைவிரிப்புகளையும், மாடியிற் பூட்டிய அன்ரனாக்களையும் அசுமாத்தமின்றி அகற்றிவிட்டு பதுங்கு குழிக்குப் பால்காச்சிவிட்டோம். விடுவிக்கப்பட்ட ஊர்களை விடுதலைபெற்ற தேசமென வெளிச்சம் செய்து ஆடியகூத்துக்கள் ஒவ்வொன்றாய்அகல மீண்டும் நிஜத்துக்குத் திரும்பியது அரங்கு. இப்போ மயக்கம் கலைந்த மனிதர்களைச் சுமந்து மாரீசப் போர்வை கலைத்துக் கிடக்கிறது மண். இன்றைய விடிகாலையிற் துயில்நீங்கி தாய்நிலம் வாய்திறந்து பாடும் விடுதலைப்பாடல் பரவுகிறது வெளியெங்கும். மனச்சாட்சியின் கதவுகள் திறந்தபடி எல்லோர் முகங்களிலும் அறைந்தபடி கேட்கும் பாடலை உணரமுடிகிறதா உன்னால்? வார்த்தைகளிலும், வரிகளிலும் தேக்கியுள்ள சோகத்தையும், கோபத்தையும் புரியமுடிகிறதா ஆழமாய்? அகாலத்திலும் ஊரெழுப்பும் அந்தக் குரலை அறிய முதலில் நீ நெருப்பணிய வேண்டும் நெஞ்சில். அது விடுதலை நெருப்பு அவியாது மேற்கிளம்பிச் சுடரவல்ல தீ. அனல் சூடவில்லையெனில்அறியமுடியாமலும் போகலாம் தாய் நிலத்தின் பாடலை நீ. போராட்டமாகத் தொடங்கிப் போராக வேகமெடுத்து தொடர்ந்தோடும் அஞ்சலோட்டமிது இரண்டு தலைமுறையிடம் கைமாறிவிட்டது கம்பு எனினும் ஓடிக்கொண்டிருக்கிறோம் இலக்கடையாமல். தொடர்ந்தோடியும் வெற்றிக்கம்பத்தை எம்மாலேன் தொடமுடியவில்லை? இது எனது இது எனக்கானதுமென்று ஊர்திரண்டு இன்னும் சுமைதூக்கவில்லையே. தூக்கிய தோள்களே தொடர்ந்தும் சுமக்கின்றன புதிய தோள்கள்அதிகமாகவில்லையே. பாரம் சுமக்காது எந்தப் பயணமும் முடிவதில்லை ஒருதலைமுறை தன்னைஅர்ப்பணிக்கும்போதுதான் விடுதலையின் வரவு வேகமெடுக்கும் கனவு பலிதமாகும் நமக்கானது நமக்காகும். இன்றைய வியட்னாமை உழுதுபார்த்தால் தெரியும் விடுதலைக்காய் அவர்கள் சிந்திய வியர்வையும், குருதியும். பூக்கள் ஒவ்வொன்றிலும் போராளிகளின் குருதி புல்வெளியெங்கணும் பொதுமக்கள் வியர்வை வயலில் உரமாக எதிராளிகள் சடலங்கள். பள்ளிப்பிள்ளைகளும் பாரம் சுமந்தனர் விலைமாதர்கள்கூடஅதிக விலைகொடுத்தனர் ஊர்கூடியிழுத்த ரதபவனியே வியட்னாம் விடுதலை. அமெரிக்கன் வீசிய குண்டுகளின் கீழே வியட்னாமியர் அழவில்லை. அமெரிக்கன் விசிறிய நச்சுக் காற்றினால் அவர்கள் நடுக்கமுறவில்லை. கூடி எழுந்தனர் குலையுறாது நிமிர்ந்தனர் விழுந்தவர் போக எஞ்சியோர் விடுதலையைத் தொட்டனர். தாயினும் பெரியது தாயகம் வாழ்வதிலும் பெரியது வரலாற்றுக்கடன். தலைமுறைக்கான பணிதாங்கி நடப்பதே மனுக்குலத்துக்குரிய மணிமகுடம். ஈழத்தமிழர் எவராயினும் எங்கிருப்பவராயினும் காலக்கடமையைக் கையிலெடுப்போமெனில் நாளை நமக்காகும் இல்லையெனில் இழிவற்றுச் சாவோம். ஆட்டக்களத்தை வெல்வதற்கு வீட்டுக்கொருவரைக் கேட்கிறது விடுதலைச்சேனை. எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு வருக இனிவரும் காலம் நமதென்ற நம்பிக்கையுடன். எதிரி வேர்களுக்கு எவரெவரோ நீர்வார்க்கின்றனர் எங்களுக்கு நாங்கள் மட்டுமே. பகைவாய்க்கு யார் யாரோ பால்வார்க்கின்றனர் எங்களுக்கு எங்கள் முலைகள் மட்டுமே. எவனுக்கு முதுகில் இறக்கை முளைக்கிறதோ அவனுக்கே பலமதிகம் எந்த நெருப்புள்ளும் அவன் நீந்திவருவான் எந்தப் புயலையும் அவன் எதிர்கொண்டு வீழ்த்துவான் எந்த எரிமலையையும் அவன் ஊதி அணைத்துவிடுவான். இறக்கை முளைத்த சாதியடா நாங்கள் எம்மை வீழ்த்த முடியும் தற்காலிகமாக ஆனால் எவரும் வெல்லமுடியாது. எம்மைக் கொஞ்சநாள்அடக்கமுடியும் எனினும் எவராலும் அழிக்கமுடியாது. முகில் கலைய உரத்துச் சொல்லுவோம் நாங்கள் நஞ்சுதின்னும் கூட்டம் எவனும் எமக்குச் சாவுவிதிக்க முடியாது என்று. உயிர்கொண்ட பிணங்களாக உலவுவதிலும் உணர்வழியாச் சடமாக வீழ்வதே பெருமை. வாழ்வை மாற்றியெழுதுவோமெனில் நாளை காற்றில் நிமிரலாம். கரையொதுங்கிய சருகுகளாக, காற்றிற் சரிந்த வாழைமரங்களாக, சின்னப் பூச்சிகளாக, விரட்டியடிக்க ஓடும் தெருநாய்களாக, எல்லாத்திசைகளிலும் ஏதிலிகளாக, எத்தனை காலத்துக்கென்றுதான் இழிநிலை? முடிதரித்த வம்சம் கொடிதரித்த கொற்றமென்று பழைய புழுதிகள் சுவாசித்தல் விடுத்து புதிய மனிதர்களாகப் பிறப்பெடுப்போம். உயிரோடு இருத்தல் மட்டுமல்ல வாழ்வு அது திமிரோடிருத்தலும் கூட. சங்கை பெறும் சாவும் வாழ்வாகலாம் கல்லறையிருத்தல் காவியமாகலாம். பிரபாகரன் காலமென்பது நாங்கள் தீர்மானித்ததல்ல இது காலம் தீர்மானித்த காலம். இந்தக் காலமே இனி வரலாறாகப் போகிறது இந்தக் காலமே வாசல் திறக்கப்போகிறது காற்றின் வேகத்தைக் கணக்கிலெடுத்து ஏற்றும் பட்டமே விண்கூவும். பிரபாகரன் காலமுணர்ந்தவன் காற்றறிந்தவன் திசைகள் பற்றிய தெளிவுள்ளவன் வருக விடுதலைக்கொடி ஏற்றுவோம். வீட்டுக்கொருவர் நாட்டுக்குரியவரானால் எம் பலத்தின் முன்னே எவன் நிற்பான்? எம் நிலத்தில் வந்து எவன் வெல்வான்? கூட்டாகச் சேர்ந்து குதிப்போமெனில் பூட்டுக்கள் யாவும் பொடிப்பொடியாகும். கவியாக்கம் -வியாசன் வெளியீடு:விடுதலை புலிகள் இதழ்