வணிக நிலையங்களை மூடி பலம் சேர்க்குமாறு வேண்டுகோள் விடுக்கும் விக்கி

breaking
வடகிழக்கில் வசிக்கும் உங்களில் பலர் எமது “எழுக தமிழ்” நிகழ்வுகளின் போது உங்கள் கடைகள், வியாபார நிலையங்கள் போன்றவற்றை மூடி எம்முடன் ஒருங்கிணைந்து எமது குறிக்கோள்களுக்காக உங்கள் ஆதரவைக் காட்டி வந்துள்ளீர்கள். உங்கள் நிறுவனங்களை மூடுவதால் உங்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பு, வணிகத் தளர்ச்சி போன்றவற்றையும் பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களையும் நாம் அறியாதவர்கள் அல்ல. எனினும் எம் தமிழர்களின் விடிவை நோக்கிய எமது பயணத்தில் இந்தக் காலமானது மிக முக்கியமானதொன்று. இலங்கை சம்பந்தமாக 2015ம் ஆண்டில் ஐக்கிய நாடுகளால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்பட வேண்டியதொன்று. குறித்த தீர்மானம் அப்போது நிறைவேற்றப்படாது மேலும் 2017ம் ஆண்டில் கால நீடிப்பு வழங்கப்பட்டு குறித்த கால அவகாசம் இவ்வருடம் மார்ச் மாதத்தில் முடிவடைகின்றது. இது சம்பந்தமாக இலங்கைக்கு ஐ.நா சபை மேலும் கால அவகாசம் கொடுக்கக் கூடாது என்ற எமது அரசியல் ரீதியான ஒத்திசைவான ஒருங்கிணைந்த சிந்தனையை மத்திய அரசாங்கத்திற்கும் சர்வதேச நாடுகளுக்கும் தெரியப்படுத்த வேண்டிய ஒரு கடப்பாடு எமக்குண்டு. மேலும் கால அவகாசம் வழங்குவதானது எமது மக்களின் அவலங்களை தொடர்ந்து கிடப்பு நிலையில் விடுவதற்கு ஒப்பானதாகும். இலங்கையில் காணப்படும் ஒரு சில அரசியல் சக்திகளின் வெளிப்படையான எதிர்ப்பைக் கருத்தில்க் கொண்டும் இலங்கை அரசாங்கத்தின் இதுவரையிலான கவனமின்மையையும் கருத்தில்க் கொண்டும் இது சம்பந்தமான வலுவான எமது சிந்தனைகளை உலக நாடுகளுக்கு வெளிப்படுத்த வேண்டிய தந்திரோபாயத் தருணமானது தற்போது உதித்துள்ளது. அன்பார்ந்த வணிகப் பெருமக்களே, வணிகத் தொழிலாளர்களே! 2019ம் ஆண்டு மார்ச் 25ம் திகதியன்று திங்கட்கிழமை கிளிநொச்சியில் எமது மக்கள் தமது ஒருங்கிணைந்த கருத்துக்களை வெளிக்காட்டும் போது மேற்கண்ட காரணங்களின் நிமிர்த்தம் உங்களுடைய கடைகளையும் வியாபார நிலையங்களையும் மூடி வைத்து உங்கள் அக்கறையையும் எங்களோடு இணைந்த உங்கள் ஒருங்கிணைந்த சிந்தனையையும் வெளிக்காட்டுமாறு உங்களிடம் அன்புடன் வேண்டிக் கொள்கின்றேன் - என்றுள்ளது.