மோடிக்கு கருப்புக்கொடி காட்டியே தீருவோம்- வைகோ.!

breaking
தமிழகம் வரும் பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டவேண்டாம் என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் வைக்க, தனது அன்பு நண்பர் கேட்டுக்கொண்டாலும் முடிவில் மாற்றமில்லை என வைகோ நிராகரித்துள்ளார். பிரதமர் மோடிக்கு தமிழகம் வரும்போதெல்லாம் எதிர்ப்புத்தெரிவித்து மதிமுக கருப்புக்கொடிக் காட்டி வருகிறது. சமீபத்தில் பிரதமர் மதுரை மற்றும் திருப்பூருக்கு வந்தபோதும் கருப்புக்கொடி காட்டினர். மதுரையில் வைகோ தலைமையில் கருப்புக்கொடி போராட்டம் நடந்தது, அதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்நிலையில் வரும் மார்ச்-1 அன்று கன்னியாகுமரி அகத்தீஸ்வரத்தில் பிரதமர் மோடி பிரச்சாரத்திற்காக வர உள்ளார். அவருக்கு கருப்புக்கொடி காட்ட மதிமுக தயாராகி வருகிறது. இந்நிலையில் கூட்ட ஏற்பாடுகளை கவனித்து வரும் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசும்போது “மார்ச்-1 தமிழகம் வரும் பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டவேண்டாம் என அண்ணன் வைகோவிடம் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன், மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன் தயவு செய்து மீண்டும் மீண்டும் இந்தச் செயலில் ஈடுபட வேண்டாம்.” என வேண்டுகோள் வைத்தார். இதுகுறித்து திருச்சி விமான நிலையத்தில் வைகோவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது அவர் பொன் ராதாகிருஷ்ணன் கோரிக்கையை நிராகரித்தார். அவர் கூறும்போது, “மோடி 1-ம் தேதி வருவது பற்றி செய்திகள் வரவில்லை, ஆனால் அறிவித்தப்படி என்னுடைய இனிய நண்பர், பல ஆண்டுகால நண்பர் அவர் வேண்டுகோள் விடுப்பது அவருடைய கடமை. எங்கள் எதிர்ப்பை அறவழியில் காண்பிப்போம் என்பதனால் கருப்புக்கொடி போராட்டம் என்னுடைய தலைமையில் அவர் மார்ச் 1 வந்தால் நிச்சயம் குமரி மாவட்டத்தில் நடக்கும்.” இவ்வாறு வைகோ தெரிவித்தார்.