நிதி மோசடிகளை விசாரிக்க புதிய விசேட மேல் நீதிமன்றம் ஶ்ரீலங்காவில் திறந்துவைப்பு

breaking
  ஶ்ரீலங்காவின்பாரிய நிதி மோசடி மற்றும் இலஞ்ச ஊழல் குறித்து விசாரிப்பதற்காக மற்றுமொரு விசேட மேல் நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) திறந்துவைக்கப்படவுள்ளது. கொழும்பு – புதுக்கடை மேல் நீதிமன்ற கட்டட தொகுதியில் அமையவுள்ள இந்த விசேட மேல் நீதிமன்றத்தை நீதி மன்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள திறந்துவைக்கவுள்ளார். இதற்கு மூன்று நீதிபதிகள் கொண்ட குழாம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பான வழக்குகள் கிடப்பில் போடப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு வந்த நிலையில், அவற்றை துரித கதியில் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கும் முனைப்பில் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி முதலாவது விசேட மேல் நீதிமன்றம் தாபிக்கப்பட்டது. கடந்த கால ஊழல் மோசடிகள் தொடர்பாக விசாரிப்பதற்காக மூன்று விசேட மேல் நீதிமன்றங்கள் தாபிக்கப்படுமென அரசாங்கம் வாக்குறுதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அந்தவகையில், இன்று இரண்டாவது விசேட மேல் நீதிமன்றம் திறந்துவைக்கப்படவுள்ளது. இலஞ்ச ஊழல், நம்பிக்கை மீறல், நிதி மோசடி, பயங்கரவாத செயற்பாடுகளுக்கு நிதிவழங்குதல், திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் பொதுச்சொத்துக்களை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதே விசேட மேல் நீதிமன்றத்தின் நோக்கமாக அமைந்துள்ளது.