ஆடியோகுறித்து சீமான் விளக்கம்.?

breaking
கடந்த தேர்தலில் இரட்டை மெழுகுவத்தி சின்னத்தில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சிக்கு தற்போது, 'விவசாயி சின்னம்' ஒதுக்கப்பட்டுள்ளது. சின்னத்தை இன்று அறிமுகப்படுத்திய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், `உயிருடன் இருப்பவைகளைச் சின்னமாக வழங்க முடியாது என்று மறுக்கும் தேர்தல் ஆணையம், விவசாயி சின்னத்தை எங்களுக்கு ஒதுக்கியதன் மூலம், விவசாயிகள் உயிருடன் இல்லை என்று கூறுகிறதா?' என்று கேள்வி எழுப்பியுள்ளார். விவசாயி சின்னத்தை அறிமுகப்படுத்திவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "இரட்டை மெழுகுவத்தி எங்களுக்கு இல்லைனு தெரிந்தவுடனே, தேசியப் பறவையான மயிலை சின்னமாகக் கேட்டேன். உயிரோடு இருக்கும் உயிரினத்தைத் தரமுடியாது, அதுவும் தேசியச் சின்னமாக இருப்பவற்றை ஒதுக்க முடியாது என்றார்கள். பிறகு எப்படி பா.ஜ.க-வுக்கு மட்டும் தேசிய மலரான தாமரையை ஒதுக்கினீர்கள்? என்றேன். அது அப்போது கொடுத்தது என்று மழுப்பினார்கள். காளை சின்னமாவது ஒதுக்குங்கள் என்றேன். மீண்டும் உயிரோடு இருப்பதைத் தர முடியாது என்றவர்கள், விவசாயி சின்னத்தை எங்களுக்கு ஒதுக்கியுள்ளார்கள். விவசாயிகள் உயிரோடு இல்லை என்று தேர்தல் ஆணையமே கூறுகிறதா?
நிறையப் பேர் 'தனித்துப் போட்டியிடுகிறீர்களே? கட்சி காணாமல் போய்விடுமே' என்று பதைக்கிறார்கள். அதுபற்றி யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. எனக்கு முன்னால் இருந்தவர்கள் செய்த தவறை நான் செய்யக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். நான் ஒருத்தன் தனித்து இருந்துவிட்டுப்போகிறேனே. மக்கள் என்னுடன் இருப்பது போதும். வரும் மார்ச் 25-ம் தேதி, புதுச்சேரியில் இருந்து கடலூர் வழியாகத் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறேன்" என்றவரிடம், சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலாகும் கட்சித் தொண்டருடன் அவர் பேசும் ஆடியோகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. "அது, உள்கட்சி பிரச்னை. நாட்டின் பிரச்னையல்ல. ஒரு தொகுதிக்கு 1000 பேர் விண்ணப்பிப்பார்கள், அவர்களில் இருந்து ஒருவரை கட்சித் தலைமைதான் தேர்வுசெய்யும். இதில் கட்டுப்பாட்டை மீறும் எவர் மீதும் கட்சி நடவடிக்கை எடுக்கும்'' என்றார். சின்னத்துக்கு மட்டும் இடம் ஒதுக்கிவிட்டு, நாம் தமிழர் கட்சியின் தேர்தல் விளம்பரங்கள் தமிழகம் முழுவதும் வரையப்பட்டுள்ளன. அவற்றில், இன்றுக்குள் விவசாயி சின்னத்தை வரையுமாறு தலைமை உத்தரவிட்டுள்ளதாம். தேர்தல் ஆணையம் தெரிந்து கொடுத்ததோ, தெரியாமல் வழங்கியதோ, கிராமப்புற வாக்காளர்களிடம் எளிதில் எடுத்துச்செல்லும் வண்ணம் விவசாயி சின்னம் அமைந்துவிட்டதாகக்  மகிழ்ச்சியுடன் இருக்கிறது நாம் தமிழர் தரப்பு.