பத்திரிக்கை போட்டோகிராபரைத் தாக்கிய காங்கிரஸ் காலிகள்.!காணொளி இணைப்பு.!

breaking
விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி  காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடுகிறார் மாணிக்கம் தாகூர். அதனால், விருதுநகரில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்று சிறப்புரையாற்றினார்   தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி. நகராட்சி திடலில் நடந்த அந்தக் கூட்டத்தில் இருக்கைகள் பலவும் காலியாகக் கிடந்தன.  விகடன் குழும புகைப்படக்காரர் முத்துராஜ் அந்தக் காலி இருக்கைகளைப் படம் பிடித்தார். இதனைக் கண்ட காங்கிரஸ் கட்சியினர், அவர் மீது பாய்ந்தனர். ஒருவர் முத்துராஜை பின்புறமாக இறுகப்பிடித்துக்கொள்ள, வேறு இருவர் மாறிமாறித் தாக்கினர். உடனே, சக பத்திரிக்கை யாளர்கள் தாக்குதலில் ஈடுபட்ட காங்கிரஸ்காரர்களிடமிருந்து முத்துராஜை மீட்டனர். பத்திரிக்கையாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தவுடன், காங்கிரஸ் கட்சியினர் ஓட்டம் பிடித்தனர். விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார் முத்துராஜ். நடந்த காட்டுமிராண்டித்தனம் குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கதர்ச்சட்டையினர் பத்திரிக்கை புகைப்படக்காரர் மீது காட்டிய வேகத்தை, கட்சி நடவடிக்கைகளிலும்  கூட்ட ஏற்பாட்டிலும் காட்டியிருந்தால், இருக்கைகள் காலியாக இருந்திருக்காது அல்லவா! தமிழகத்தில் குறைவான வாக்கு வங்கி உள்ள காங்கிரஸ் கட்சிக்கு, தேர்தல் அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டத்தில் எத்தனைபேர் கலந்துகொள்வார்கள் என்பதுகூட தெரியவில்லை. வெறும் சேர்களைப் பரப்பி  கூட்டம் நடத்துவது காமெடி அல்லவா!  விசித்திரமாக இப்படி ஒரு கூட்டம் நடத்தும்போது,  பத்திரிக்கை புகைப்படக்காரர்கள் எப்படி படம் எடுக்காமல் இருப்பார்கள்? அரசியல் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை விருப்பு வெறுப்பின்றி மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பது பத்திரிக்கையாளர்களும் ஊடகவியலாளர்களும்தானே! பொது இடத்தில் காலி சேர்களுக்கு முன்னால் மைக் பிடித்து காரசாரமாகப் பேசும் உரிமை அரசியல்வாதிகளுக்கு இருக்கிறதென்றால்,  அதைப் படம் பிடிக்கும் உரிமையும் கடமையும் பத்திரிக்கையாளர்களுக்கு உண்டு.  நூற்றாண்டு கண்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் அங்கம் வகிக்கும் சிலர்,  இந்த அடிப்படை அறிவுகூட இல்லாதவர்கள் என்பது, இந்தத் தாக்குதல் சம்பவத்தின் மூலம் வெளிப்பட்டுள்ளது. கழுதை தேய்ந்து கட்டெறும்பானது போல, கோஷ்டி மோதலாலும் சுயநலத்தாலும், தமிழகத்தில் ஒருகாலத்தில் ஓகோ என்றிருந்த காங்கிரஸ், இன்று ‘அய்யகோ’ நிலைக்கு வந்துவிட்டது. காங்கிரஸ் வளர்ச்சியில் கவனம் செலுத்தாத  குறையைத் தங்களிடம் வைத்துக்கொண்டு, காலி சேர்களைப் படம்பிடித்ததை பெரும் குற்றமாகக் கருதி தாக்குதலில் ஈடுபட்டவர்களின் மடமை, நகைப்புக்குரியதாக இருக்கிறது.