திராவிட கட்சி ஆட்சியில் மக்களுக்கு மட்டுமில்லை சிலைகளுக்கும் பாதுகாப்பில்லை.!

breaking
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகில், திராவிடர் கழகத்தால் அமைக்கப்பட்டிருந்த தந்தை பெரியாரின் முழு உருவச் சிலையின் தலை மர்மநபர்களால் உடைக்கப்பட்டு தலை தனியாக கீழே கிடந்தது.

இதை பார்த்த தி.க., தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சியினர் திரண்டு சாலை மறியல், காத்திருப்பு போராட்டம், ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த போராட்டத்தில் கவிதைப்பித்தன், மெய்யநாதன் எம்.எல்.ஏ, உதயம் சண்முகம், சி.பிஎம். மா.செ கவிவர்மன், சிபிஐ. மா.செ மாதவன், தி.க. மண்டலத் தலைவர் ராவணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அனைத்துக் கட்சினரும் திரண்டதால் போலீஸார் குவிக்கப்பட்டனர். அதனால் அந்த இடத்தில் பரபரப்பு எற்பட்டது. அதன் பிறகு சிலையை உடனடியாக சீரமைத்துக் கொடுப்பதுடன் சிலையை உடைத்தவர்களை உடனடியாக கைது செய்வது என்று தாசில்தார் மெய்யநாதன் எம்.எல்.ஏ. வுக்கு எழுதிக் கொடுத்தால் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. அதன் பிறகு சிலையை சீரமைக்க சுவாமிமலையில் இருந்து சிற்பிகள் வரவழைக்கப்பட்டு உடைக்கப்பட்ட பெரியாரின் சிலையை ஒட்டும் பணியில் சிற்பிகள் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து அந்தப் பகுதியில் பல்வேறு கட்சியினரும் நின்று கொண்டிருப்பதால் போலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் தி.மு.க தெற்கு மா.செ (பொ), ரகுபதி எம்.எல்.ஏ பெரியார் சிலையை பார்த்தவர்.. சிலையை உடைத்தவர்களை உடனடியாக கைது செய்யவில்லை என்றால் அனைத்துக் கட்சிகளையும் இணைந்து பிரமாண்டமான பேரணி மற்றும் போராட்டங்களை நடத்துவோம் என்றார். அதேபோல அ.ம.மு.க.வைச் சேர்ந்த அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ரெத்தினசபாபதி வந்து பெரியார் சிலையை பார்வையிட்டார்.

ஆனால் ஆளும் அ.தி.மு.க தரப்பில் இருந்து யாரும் சிலையை வந்து பார்க்கவில்லை என்றும், கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. என்றும் கூறும் இளைஞர்கள் பா.ஜ.க வுடன் கூட்டணி வைத்துவிட்டதால் தங்களை வளர்த்தெடுத்த பெரியாரையும், அண்ணாவையும் மறந்துவிட்டார்கள். என்பதைவிட அவர்களை பா.ஜ.க விடம் அடகு வைத்துவிட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது என்றனர்.

இந்த நிலையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிலை உடைத்தவர்களை தேடும் பணியில் அறந்தாங்கி போலிசார் ஈடுபட்டுள்ள நிலையில் சந்தேகத்தின் பேரில் சிலரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். நாடாளுமன்றத் தேர்தல் என்பதால் பெரியார் சிலை உடைக்கப்பட்ட பிரச்சனை வேகமாக பரவி வருகிறது.