சட்டீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் ; பாஜக எம்எல்ஏ படுகொலை.!

breaking
சட்டீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய பயங்கர தாக்குதலில் பாஜக எம்எல்ஏ மற்றும் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இன்னும் இரு தினங்களில் சட்டீஸ்கர் மாநிலத்தில் முதல்கட்ட லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, இன்று அனைத்து கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர். நக்சலைட்டுகள் அச்சுறுத்தல் அதிகம் உள்ள மாநிலம் என்பதால் சட்டீஸ்கரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், சட்டீஸ்கர் மாநிலத்தின் தண்டேவாடா பகுதியில் இன்று, பாஜக எம்எல்ஏ பீமா மாண்டவி இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். மாலை பிரச்சாரம் ஓய்வதற்கு சில மணி நேரங்களே இருந்தநிலையில், திடீரென பீமா மாண்டவி பயணித்த வாகனத்தை குறி வைத்து மாவோயிஸ்டுகள் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் பதிலுக்கு துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஆனால் வெடிகுண்டு, பாஜக எம்எல்ஏ பயணித்த வாகனத்தின் மீது வீசப்பட்டதால், அதன் தாக்கம் அதிமாக இருந்தது. எனவே, பீமா மாண்டவி மற்றும் அவரது பாதுகாவலர்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 5 போலீசார் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தால் சட்டீஸ்கர் மாநிலத்தில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கூடுதல் பாதுகாப்பு படையினர் அம்மாநிலத்திற்கு விரைந்துள்ளனர்.