தீர்வுக்குப் பதிலாகக் கம்பெரலிய?

breaking
வடமாகாண சபையின் அவைத்தலைவரான சிவஞானம் அண்மையில் ஒருவிடயத்தைச் சுட்டிக்காட்டியிருந்தார். கம்பெரலியத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும். அபிவிருத்தி நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்ட பின் அங்கே ஒரு விளம்பரத்தட்டி நடப்படுகிறது. அதில் அத்திட்டத்தைப் பற்றிய விபரங்களோடு பிரதமர், குறிப்பிட்ட அமைச்சர் என்பவர்களின் ஒளிப்படங்களோடு அத்திட்டதை முன்னெடுத்த கூட்டமைப்பு பிரமுகரின் ஒளிப்படமும் பதிக்கப்படுகின்றன. இவ்வாறு தயாரிக்கப்படும் விளம்பரத்தட்டிக்காக சுமாராக ஏழாயிரம் ரூபாய்க்குக் குறையாமல் செலவாகின்றது என்றும் அந்தப்பணத்தையும் அபிவிருத்தி வேலைகளுக்கு செலவழிக்கலாம் என்றும் சிவஞானம் கூறியிருந்தார். பல கோடி ரூபாய்கள் செலவில் முன்னெடுக்கப்படும் பெருந்திட்டங்களைப் பொறுத்தவரை சில ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஒரு விளம்பரத்தட்டி ஒரு பிரச்சனையல்ல. ஆனால் ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவாக சிறிய அபிவிருத்தித் திட்டங்களைப் பொறுத்தவரை அது பெரிய காசுதான். இவ்வாறு விளம்பரத்தட்டிகள் பலவற்றை ஏற்கனவே மகிந்தவும் நாட்டியிருக்கிறார். அவர்களுடைய காலத்தில் மேற்கொள்ளப்பட்ட எல்லாத் திட்டங்களிலும் இப்படிப்பட்ட விளம்பரத் தட்டிகளைக் காண முடியும். தமிழ்ப் பகுதிகளில் மூலைமுடுக்குகள் எங்கும் இவ்வாறான விளம்பரத் தட்டிகள் மகிந்த, பஸில், மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர் ஆகியோரின் முகப்படங்கள் பதிக்கப்பட்டு நடப்பட்டிருக்கின்றன. ராஜபக்சக்களுக்கு அதற்கொரு தேவை இருந்தது. ஒரே நாடு, ஒரே தேசம் என்ற கோசத்தின் கீழ் யுத்த வெற்றி வாதத்தை அவர்கள் முன்னெடுத்த போது தமிழ்ப் பகுதிகள் மூலை முடுக்குகளில் எல்லாம் தங்களின் முகங்களைப் பதிக்க வேண்டிய தேவை அவர்களுக்கு இருந்தது. முல்லைத்தீவில், கொக்காவிலில் ஆணையிறவு, கிளிநொச்சியில் அவர்கள் கட்டியெழுப்பிய யுத்த வெற்றிச் சின்னங்களின் தொடர்ச்சியே அது. குறிப்பாக பசில் ராஜபக்சவின் பொறுப்பிலிருந்த பொருளாதாரத் திட்டமிடல் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட எல்லாத் திட்டங்களுமே ராஜபக்ஸ குடும்பத்தை நாடு முழுவதும் ஸ்தாபிக்கும் நோக்கத்தைக் கொண்டிருந்தன. அந்த அமைச்சின் கீழ் வந்த அரச ஊழியர்களான சமுர்த்தி உத்தியோகத்தர்கள் உள்ளடங்களாக ஏழு பதவிப் பொறுப்புக்கள் கிரதாமங்கள் தோறும் கிட்டத்தட்ட கட்சி வேலைகளையே செய்து வந்தார்கள் என குற்றம் சாட்டப்படுகிறது. அரச ஊழியர்களைக் கட்சித் தொண்டர்களாக பயன்படுத்திய ஒர் அதிகாரக் கட்டமைப்பு அது என்று பார்க்கப்படுகிறது. எனவே தமிழ்ப்பகுதி எங்கும் எதைச் செய்தாலும் அங்கே தமது முகப்படத்தைப் பதித்து ஒரு விளம்பரத் தட்டியை அவர்கள் நட்டு விட்டுச் சென்றிருக்கிறார்கள். அந்த நடைமுறையை ரணில் – மைத்திரி அரசாங்கமும் பின் தொடர்கிறது. குறிப்பாக கம்பெரலிய திட்டத்தின் கீழ் கூட்டமைப்பு அரசாங்கத்தின் பங்காளியாக மாறிய பின் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் முகங்களும் விளம்பரத் தட்டிகளில் பதிக்கப்பட்டு வருகின்றன. முன்னமிருந்த ஒரு வழமையைத்தான் தொடர்ந்து பின்பற்றுகின்றோம் என்று கூட்டமைப்பினர் கூறக்கூடும். ஆனால் அவ்வாறு தமது முகங்களைப் பதிப்பதன் மூலம் அக்கட்சியானது அபிவிருத்தி மைய அரசியல் ஒன்றை முழு ஈடுபாட்டோடும், முழு நம்பிக்கையோடும் முன்னெடுக்கின்றதா? அண்மை மாதங்களாக கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் உதவியாளர்கள் அல்லது தொண்டர்கள் ஆகியோரின் முகநூல்ப் பக்கங்களைத் தொடர்ச்சியாக அவதானித்து வரும் எவரும் ஒரு தொகுக்கப்பட்ட சித்திரத்தைப் பெறலாம். அதன்படி தமது தேர்தல் தொகுதிகளில் அந்நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களுடைய நிதி ஒதுக்கீட்டின் கீழ் முன்னெடுத்துவரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான ஒளிப்படங்களையும், புள்ளி விபரங்களையும் தொடர்ச்சியாகப் பார்க்க முடியும். அபிவிருத்தித் திட்டங்களைத் தொடங்கும் போது தேங்காய் உடைத்து கற்பூரம் கொழுத்தும் காட்சிகளும் திட்டங்களைப் பூர்த்தி செய்யும் போது திரை நீக்கும் காட்சிகளையும், நாடாக்களை வெட்டும் காட்சிகளையும் செறிவாகக் காண முடியும். குறிப்பாக யாழ் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான சரவணபவன் தனது பத்திரிகையில் இப்படிப்பட்ட செய்திகளைத் தொடர்ச்சியாகப் பிரசுரித்து வருகிறார். சில நாட்களுக்கு முன் யாழ்ப்பாண கே.கே.எஸ் வீதியில் அமைந்திருக்கும் நாச்சிமார் கோயிலில் தேரிழுக்கும் சுற்று வீதியைக் கூட்டமைப்பு புனரமைத்துக் கொடுத்திருக்கிறது. வீதியைக் கையளிக்கும் நிகழ்ச்சியின் போது சரவணபவான், மாவை, ஆர்னோல்ட், இவர்களோடு ஒரு பிரதேச சபை உறுப்பினருமாக மொத்தம் நான்கு பேர்; நாடாவை வெட்டும் காட்சி பரவலாகப் பரிகசிக்கப்பட்டது. ஆனால் இப்பரிகசிப்பைக் கூட்டமைப்பு பொருட்படுத்தாது என்றே தெரிகிறது. ஏனெனில் கம்பெரலியவை விட்டால் அவர்களுடைய வாக்காளர்களைக் கவர்வதற்கு வேறு மார்க்கம் இல்லை. கடந்த ஒக்டோபர் மாத ஆட்சிக் குழப்பத்தில் மகிந்த மட்டும் தோற்கவில்லை. கூட்டமைப்பும் ஒரு விதத்தில் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. எப்படியெனில் ஒரு புதிய யாப்பை உருவாக்கத் தேவையான 3/2 பெரும்பான்மையை மகிந்த அகற்றிவிட்டார். கூட்டமைப்பைப் பொறுத்தவரை ஒரு புதிய யாப்பை நோக்கித்தான் அவர்கள் தமது தொண்டர்களின் நம்பிக்;கையை கட்டியெழுப்பி வந்தார்கள். அப்புதிய யாப்பில் இனப்பிரச்சனைக்கான தீர்வு கிடைத்து விடும் என்று ஒர் ஆவிக்குரிய சபையை சேர்ந்த போதகரைப் போல சம்பந்தர் நல்ல நாள் பெருநாட்களின் போது தீர்க்க தரிசனம் உரைத்து வந்தார். அவரது பட்டத்து இளவரசனும் கூட்டமைப்புக்குள் உள்ள ‘யாப்பு மனிதனுமாகிய’ சுமந்திரன் இப்பொழுதும் 2/3 பங்கு பெரும்பான்மை; கிடைக்கக் கூடும் என்று ஆரூடம் கூறி வருகிறார். ஆனால் அதற்கான வாய்ப்புக்கள் அருகிக் கொண்டே போகின்றன. ஐ.நாத்தீர்மானம், அரசியல் தீர்விற்கான யாப்பு மாற்றம் ஆகிய இரண்டுக்கும் எதிரான ஓர் இனவாத அலையை தோற்றுவித்து அதன் மூலம் தேர்தல் வெற்றிகளை உறுதிப்படுத்துவது என்ற வியூகத்தோடு ராஜபக்ச அணி செயற்பட்டு வருகின்றது. இன்னும் எட்டு மாதங்களுக்குள் புதிய யாப்பைக் கொண்டு வருவதென்றால் ஏதும் அதிசயங்கள் அல்லது அற்புதங்கள் நடக்க வேண்டும். அப்படி ஏதும் அதிசயங்கள், அற்புதங்கள் நடக்கும் என்று சம்பந்தரும், சுமந்திரனும் நம்புகின்றார்களோ இல்லையோ அடுத்தடுத்தமட்டக் கூட்டமைப்புப் பிரமுகர்கள் நம்பவில்லை என்று தெரிகிறது. தமது வாக்காளர்களுக்கு தாம் வழங்கிய வாக்குறுதிகள் யாவும் வெளிறிப் போய்விட்டதும் அவர்களுக்குத் தெரிகிறது. அரசாங்கத்தைப் பாதுகாத்துக் கொண்டு எதிர்ப்பு அரசியல் கோசங்களை எழுப்பும் போது அதிலுள்ள இரட்டை வேடத்தை அம்பலப்படுத்த இப்போது கNஐந்திரக்குமாரோடு விக்னேஸ்வரனும் உண்டு. எனவே அபிவிருத்தி அரசியலின் மூலமாகவேனும் வாக்காளர்களை கவர்ந்து வைத்திருக்க வேண்டிய தேவைஅவர்களுக்குஏற்பட்டுவிட்டது. கம்பெரலிய எனப்படுவது அரசியல் தீர்வுக்குப் பதிலாக முன்வைக்கப்பட்ட ஒரு நிவாரணத் திட்டம்தான். இதில் திட்டங்களைப் பூர்த்தி செய்த பின் நாட்டப்படும் விளம்பரத் தட்டியில் முகங்களைப் பதிப்பது வீண் செலவு என்று சிவஞானம் கூறலாம். ஆனால் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அந்த விளம்பரத்தட்டி அவசியம். விளம்பரத்தட்டியை விமர்சித்து எழுதிய அதே காலைக்கதிர் கம்பெரலிய திட்டத்தின் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தனிப்பட்ட இலாபம் உண்டு. என்ற தொனிப்பட ஒரு பத்தியை எழுதியிருந்தது. சிவசக்தி ஆனந்தனும் அப்படிப்பட்ட ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். ஒக்டோபர் ஆட்சிக் குழப்பத்தால் சம்பந்தன் இழந்த எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு நிவாரணமாக ஒர் எதிர்க்கட்சித் தலைவர் அனுபவிக்கும் அனேகமாக எல்லா வளங்களையும் கொண்ட ஒரு சொகுசு வீடு ஆளணியோடு அவருக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறு தலைவருக்கு நிவாரணம் வழங்கியது போல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட்டிருக்கிறதா? ஏன்ற கேள்வியை சிவசக்தி ஆனந்தனின் கூற்று பலப்படுத்துகின்றது. சில நாட்களுக்கு முன் ரணில் விக்கிரமசிங்கவோடு கூட்டமைப்பினர் நடத்திய சந்திப்பும் அபிவிருத்தி மைய அரசியலை முன்னெடுக்கும் நோக்கிலானதே. இதில் சிறிதரன் முரண்பட்டிருக்கின்றார். ஆனால் அரசியல் தீர்வுக்காக முரண்படவில்லை. மாறாக அந்த சந்திப்பில் தன்னுடைய அபிவிருத்தி திட்ட கோரிக்கைகளுக்கு போதிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்று கூறித்தான் அவர் கூட்டத்திலிருந்து இடையில் கிளம்பிச் சென்றிருக்கிறார். எனவே இங்கு பிரச்சினை தனது வாக்கு வங்கியை எப்படி அபிவிருத்தித் திட்டங்களின் மூலம் தக்க வைப்பது என்பது தான். மாறாக அபிவிருத்திக்கும் அரசியல் உரிமைகளுக்குமிடையிலான பிரிக்கப்பட முடியாத பிணைப்பைச் சுட்டிக்காட்டி யாரும் அங்கே முரண்படவில்லை. இதுதான் நிலைமையென்றால் வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பை கூட்டமைப்பு பேரம் பேசுவதற்கு பயன்படுத்தப் போவதில்லை. எல்லா வீர வசனங்களையும் பேசி விட்டு இறுதியிலும் இறுதியாக அவர்கள் ரணில் விக்கிரமசிங்கவைப் பாதுகாப்பார்கள். 2015ம் ஆண்டு ஜெனிவாவில் வைத்து 30ஃ1 தீர்மானத்தில் கலப்பு விசாரணைக்கு ஒப்புக் கொண்ட ரணில் மூன்றரை ஆண்டுகளின் பின் அப்படி எந்த விசாரணைக்கும் இடமில்லை என்று கூறுகிறார். அதற்கெதிராக சுமத்திரன் வீரவசனம் பேசினார். ஆனால் எல்லாருமாகச் சேர்ந்து வரவு செலவுத்திட்டத்தை ஆதரிக்கத்தான் போகிறார்கள். அந்தத் துணிச்சலில் தான் யு.என்.பி மகிந்தவை நோக்கிச் சவால் விடுகிறது. ஏற்கனவே நடந்த இரண்டு குழு நிலை விவாத வாக்கெடுப்புக்களில் மகிந்த அணி இரண்டு அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டை தோற்கடித்திருக்கிறது. வரவு செலவுத் திட்டத்தின் வாசிப்பின் மீதான இறுதி வாக்கெடுப்பின் போது கூட்டமைப்பு ரணிலைத் தோற்க விடாது என்ற நம்பிக்கை யு.என்.பி க்கு உண்டு. அந்த நம்பிக்கையில் தான் அவர்கள் மகிந்தவை நோக்கி சவால் விடுகின்றனர். கூட்டமைப்பு இப்பொழுது முன்னெடுத்து வரும் அபிவிருத்தி மைய அரசியலைப் பொறுத்தவரை வரவு – செலவுத் திட்டத்தை ஆதரிப்பதை விட அவர்களுக்கு வேறு வழியில்லை. அதாவது சுகாதார அமைச்சுக்கு 185 பில்லியன்களையும் கல்வி அமைச்சுக்கு 105 பில்லியன்களையும், பாதுகாப்புச் செலவீனங்களுக்கு 306 பில்லியன்களையும் ஒதுக்கியிருக்கும் ஒரு வரவு செலவுத்திட்டத்திற்கு அவர்கள் ஆதரவளிக்கப் போகிறார்கள். இதை இன்னும் கூராகச் சொன்னால் கல்விக்கும் சுகாதாரத்திற்குமான ஒதுக்கீடுகளின் மொத்தக் கூட்டுத்தொகையை விடவும் 16 பில்லியன் ரூபாய்களை கூடுதலாகப் படைத்தரப்பிற்கு ஒதுக்கும் ஒரு வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக கூட்டமைப்பு வாக்களிக்கிறது. நன்றி ஆதவன் செய்திகள்