விக்கியின் சித்திரை திருநாள் வாழ்த்து

breaking
  பிறந்திருக்கும் இப்புத்தாண்டு தமிழ் மக்களிடையே ஒற்றுமையையும் சிங்கள தலைவர்களிடத்தில் நல்ல மனமாற்றத்தையும் ஏற்படுத்த வழிசமைக்க வேண்டுமென வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் சிங்கள் மக்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடி வருகின்றனர். அதனை முன்னிட்டு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். பிறந்திருக்கும் இப்புத்தாண்டில் அல்லற்படும் மக்களின் பிரச்சினைகள் அகல வேண்டும். குறிப்பாக யுத்தத்தின் வடுக்களை சுமந்து நிற்கும் மக்களின் வாழ்வில் ஒளிபிறக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் காணாமல்போன தமது உறவுகளின் விபரங்களை தேடுவோரின் எதிர்பார்ப்புக்கள் நிறைவடையவேண்டும் என்றும் வேலையில்லாது தவிக்கும் இளம் உறவுகளுக்கு வாழும் வழியை இறைவன் வகுத்துக்கொடுக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அரச படைகள் இவ்வாண்டில் தாயக மண்ணிலிருந்து வெளியேற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கு கிழக்கு மாகாணங்களில் அரசாங்கம் நேரடியாகவோ மறைமுகமாகவோ காணிகளைக் சுவீகரிப்பதையும் குடியேற்றுவதையும் நிறுத்த வேண்டும் என்றும் இவ்வாறான பல எதிர்பார்ப்புக்களுடன் இப்புதிய ஆண்டை வரவேற்பதில் மக்களுடன் தானும் இணைந்து கொள்வதாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்து, பௌத்தம் ஆகிய இருபெரும் மதங்களும் அன்பு, கருணை, ஜீவகாருண்யம், மனிதநேயம் என்பவற்றை முதன்மைப்படுத்துகின்றதென்றும் இம்மதங்கள் காட்டும் மனிதத்துவத்தை அனைவரும் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.