பிரச்சினையை ஒரே நாளில் தீர்க்க முடியும் – சுரேஸ்

breaking

கல்முனை தமிழ் பிரதேச செயலகப் பிரச்சினையை ஒரே நாளில் தீர்க்க முடியுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப். இன் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கல்முனை தமிழ் பிரதேச செயலகப் பிரச்சினை ஒரே நாளில் ஒரு வர்த்தமானி அறிவித்தலில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை என்றும் அதற்காக மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லையென அவர் தெரிவித்துள்ளார்.

அக்கரைப்பற்று பிரதேச சபையை ஒரே இரவில் மாநகர சபையாக மாற்றியபோது 30 வருடங்களாக இயங்கிய பிரதேச சபையை நிரந்தரமாக வர்த்தமானி அறிவித்தலினூடாக மாற்ற கூட்டமைப்பால் ஏன் முடியாதென அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டுமென்றால் கல்முனை பிரதேச சபை போன்று தமிழர்களின் பல விடயங்களுக்கு தீர்வை வழங்குமாறு அரசிடம் கூட்டமைப்பினால் கோரியிருக்க முடியுமென்றும் ஆனால், அவர்கள் அதனை செய்யவில்லையென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை நிரந்தரமான பிரதேச செயலகமாக வர்த்தமானி அறிவித்தலினூடாக மாற்ற வேண்டுமென தொடர்ந்தும் வலியுறுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.