வடக்கில் நிலைகொண்டுள்ள படையினரை விலக்கிகொள்ளமுடியாது -ஸ்ரீலங்கா!

breaking
வடக்கில் முழுமையான படைவிலக்கம் சாத்தியமில்லை என்று சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார். போர் முடிவுக்கு வந்து 10 ஆண்டுகளாகியுள்ள நிலையில்,வடக்கில் படை விலக்கம் தொடர்பாக, அரசியல் ரீதியான ஒரு முடிவு எடுக்கப்பட  வேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் கூறியிருந்தார். இதுதொடர்பாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தனவிடம் கருத்து கேட்ட போது, “தேசிய பாதுகாப்பு, எல்லை கட்டுப்பாட்டுக் காரணங்களால், முப்படைகள் மற்றும் காவல்துறையினரை தமது இடங்களில் இருந்து ஏனைய இடங்களுக்கு செல்லுமாறு கேட்க முடியாது. இராணுவத்தினர் நிலைகொண்டிருப்பதால் தமக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அந்தப் பிரதேச மக்கள் உணருவார்களேயானால்,சிறிலங்கா அரசாங்கம் சம்பந்தப்பட்ட நபர்களுடன் கலந்துரையாடி, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான ஒரு முடிவுக்கு வரும். அவ்வாறான நபர்கள் மற்றும் குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதே, இந்த பிரச்சினைக்கு ஒரு சாத்தியமான தீர்வாக இருக்கும். எவ்வாறாயினும், தேசிய பாதுகாப்பு நலன்களைக் கருத்தில் கொண்டு, இப்போது, குறிப்பிட்ட இராணுவத் தளங்களை வேறு இடத்துக்கு மாற்றவோ, வடக்கில் இருந்து படைகளை விலக்கவோ, முடியாது. இந்த நிலைமையில் பொருத்தமான சாத்தியமான கொள்கை குறித்து கலந்துரையாடி, அரசாங்கம் பரிந்துரை ஒன்றை முன்வைக்க வேண்டும். எதிர்காலத்தில் அந்தக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும்” என்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார் இதேவேளை  வடக்கில் இருந்து படைகளை முழுமையாக விலக்கும் கோரிக்கையை நடைமுறைப்படுத்த முடியாது என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார். “அரசாங்கம் எத்தகைய முடிவை எடுக்கிறதோ அதனை நாங்கள் நடைமுறைப்படுத்துவோம். வடக்கில் இருந்து படையினரை நடத்துவதாக இருந்தாலும், அந்த உத்தரவையும் நாங்கள் பின்பற்றுவோம். எவ்வாறாயினும், வடக்கு மாகாணத்தில் இருந்து படையினரை முழுமையாக விலக்கும் கோரிக்கையை செயற்படுத்த முடியாது” என்று தெரிவித்துள்ளார்.