ஹெச்.ராஜாவால் நந்தினி உயிருக்கு ஆபத்து.?

breaking
தொடர்ச்சியாக கூலிப்படையினரால் தாக்கப்பட்டு வருகின்றோம். இதற்கெல்லாம் காரணம் இவரே.!! எனக் கூறி சிவகங்கை மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளரும், பாஜகவின் தேசிய செயலாளர்களில் ஒருவரான ஹெச்.ராஜாவின் வீட்டின் முன் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்த வந்த நந்தினியையும், அவரது தந்தை ஆனந்தனையும் கைது செய்துள்ளது காவல்துறை.

சட்டக்கல்லூரி மாணவியாக இருந்த பொழுதே, மதுக்கடைக்களுக்கு எதிராகவும், பல்வேறு சமூக அரசியல் பிரச்சனைகளுக்கு எதிராகவும் போராட்டம் நடத்தி வரும் மதுரையை சேர்ந்த நந்தினி, சமீபகாலமாக ஈவிஎம் எனப்படும் எலெக்ட்ரானிக் வோட்டர் மிஷினிற்கு எதிராகவும், மீண்டும் வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் தனது தந்தை ஆனந்துடன் சேர்ந்து போராடி வருகின்றார்.

இந்நிலையில், "ஈவிஎம்-மிற்கு எதிரான பரப்புரையை ராமநாதபுரத்தில் மேற்கொண்டு மதுரைக்கு திரும்பும் பொழுது மானாமதுரை அருகே தாக்கப்பட்டதாகவும், தொடர்ச்சியாக எங்கள் மீதான தாக்குதல் சிவகங்கை மாவட்டத்தில்  மட்டும் 4 தடவை நடந்துள்ளதாகவும், கூலிப்படையினரைக் கொண்டு இத்தாக்குதலை நடத்தி வருவது பாஜகவின் ஹெச்.ராஜாவே.! இதனைக் கண்டித்து ஹெச்.ராஜா-வின் வீட்டின் முன் முற்றுகை ஆர்ப்பாட்டத்தினை நடத்தவுள்ளோம்." என நந்தினி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதன்படி திங்களன்று ஹெச்.ராஜா- வீட்டு முன் ஆர்ப்பாட்டம் நடத்த வந்த நந்தினியும், அவரது தந்தையுமான ஆனந்தனும் 30அடி தூரத்திற்கு முன்பாகவே காவல்துறையினரால் தடுக்கப்பட்டனர். எனினும் ஹெச்.ராஜாவிற்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு இருந்த நந்தினியும் அவரது தந்தையும் கைது செய்யப்பட்டு, காரைக்குடி வடக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். இதனால் இப்பகுதியில் பரப்பரப்பு நிலவி வருகின்றது.