இரவினில் பணப்பட்டுவாடா ,பகலினில் தூக்கம் இதுதான் அ.தி.மு.க.?

breaking
தேனி நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் நிறுத்தப்பட்டுள்ளார். அதே போல, காங்கிரஸ் கட்சி சார்பாக ஈ.வி.கே.எஸ் இளங்கோவனும், அ.ம.மு.க சார்பில் தங்கத்தமிழ்ச்செல்வனும் வேட்பாளராகக் களத்தில் உள்ளனர். எனவே, தேனி நாடாளுமன்றத் தொகுதி அதி முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக உருப்பெற்றுள்ளது. இந்நிலையில், வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம் சப்ளை செய்யப்பட்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக அ.தி.மு.க பெண் நிர்வாகி ஒருவர் ஓட்டிற்காக மக்களுக்குப் பணம் கொடுக்கும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடி அருகே உள்ளது மேலசொக்கநாதபுரம். அங்கு, அ.தி.மு.கவின் நிர்வாகியான சவிதா அருண்பிரசாத் என்பவர், இரவு நேரங்களில், கைகளில், வாக்காளர் பட்டியலை எடுத்துக்கொண்டு வீடு வீடாகச் சென்று மக்களுக்கு பணப்பட்டுவாடா செய்யும் காட்சி வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான பல்லவி பல்தேவிடம் கேட்ட போது, ``ஓட்டிற்குப் பணம் கொடுப்பது போன்று வெளியாகியுள்ள வீடியோ குறித்து முறையாக விசாரணை செய்யப்பட்டு, அந்தப் பெண் மீது வழக்கு பதிவு செய்யப்படும்” என்று உறுதியளித்தார். ஆளும் கட்சியினரின் இரவு நேரப் பணப்பட்டுவாடா தொடர்பாக தேர்தல் ஆணையம் விழிப்போடு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாக உள்ளது.