அனுமதியற்ற விளம்பரங்களை அகற்ற நல்லூர் பிரதேச சபை நடவடிக்கை

breaking
  வடதமிழீழம்: நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் அனுமதி பெறாமல் பொருத்தப்பட்டுள்ள விளம்பர தட்டிகளை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அதனால் இதுவரை அனுமதி பெறாத விளம்பரதாரர்கள் எதிர்வரும் 14 நாட்களுக்குள் அனுமதிகளை பெற்றுக்கொள்ளுமாறு பிரதேச சபை தவிசாளர் தெரிவித்துள்ளார். சபையின் ஆளுகைக்கு உட்பட்ட , பொது இடங்கள், வீதியோரங்கள் என்பவற்றில் தனியார் பலர் தமது விளம்பரங்களை காட்சிப்படுத்தியுள்ளனர். அதில் பல விளம்பர தட்டிகள் சபையின் அனுமதி பெறப்படாமல் அமைக்கப்பட்டு உள்ளன. அதேவேளை சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களிலும் வர்த்தக நிலையத்தின் பெயர் தவிர்ந்த ஏனைய விளம்பர பலகைகள் போடப்பட்டால் அதற்கும் சபையின் அனுமதி பெறப்பட வேண்டும். இவ்வாறு சபையின் அனுமதி பெறப்படாமல் பொருத்தப்பட்டு உள்ள விளம்பர பலகைகள் , தட்டிகளை அகற்றுவதற்கான நடவடிக்கையை சபை முன்னெடுக்கவுள்ளது. அதனால் இதுவரை அனுமதி பெறாதவர்கள் எதிர்வரும் 14 நாட்களுக்குள் அதற்கான அனுமதிகளை பெற்றுகொள்வதற்கு கால அவகாசம் வழங்கியுள்ளோம் . அதன் பின்னர் அனுமதி பெறப்படாத விளம்பர தட்டிகள் அகற்றப்படும் என தெரிவித்தார்.