கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள் படை

breaking
  தென்தமிழீழம்: மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இயங்கி வந்த மூன்று கசிப்பு உற்பத்தி நிலையங்கள் பொதுமக்களால் இன்று (16) முற்றுகையிடப்பட்டது. இதன்போது பெருமளவான கசிப்பு பரல்கள் கைப்பற்றப்பட்டன. மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பன்சேனை கிராம சேவையாளர் பகுதியில் உள்ள கண்டியன்குளம், அடைச்சகல், நல்லதண்ணி ஓடைக்குளம் ஆகிய குளக்கரைகளை அண்டிய பகுதியில் உள்ள காட்டுப்பகுதிகளில் இயங்கிய கசிப்பு உற்பத்தி நிலையங்களே பொதுமக்களால் முற்றுகையிடப்பட்டது. மூன்று இடங்களில் மேற்கொள்ளப்பட்ட முற்றுகையில் 19 கசிப்பு பரல்கள் கைப்பற்றப்பட்டன. கைப்பற்றப்பட்ட பரல்களை மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்கு கொண்டுவந்த மக்கள் அவற்றினை பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரனிடம் ஒப்படைத்தனர்.   கைப்பற்றப்பட்ட கசிப்பு பரல்களை கொக்கட்டிச்சோலை காவல்துறையிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முற்றுகையிடப்பட்ட இடங்களில் நடந்த கசிப்பு உற்பத்தி, வேறு பிரதேசங்களில் இருந்து வந்தவர்களாலேயே மேற்கொள்ளப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.