தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எழுச்சியே கூட்டமைப்புக்கு அரசாங்கம் பணத்தை வாரியிறைக்க காரணம் - செ.கஜேந்திரன்

breaking
தமிழ்
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எழுச்சியே கூட்டமைப்புக்கு அரசாங்கம் கம்பரலிய திட்டம் மூலம் பணத்தை வாரியிறைக்க காரணம்  என  தமிழ்தேசிய மக்கள் முண்ணனியின் செயலாளர்  செ.கஜேந்திரன்  தெரிவித்துள்ளார்.
வவுனியா புளியங்குளத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
மகிந்த ராஜபக்ஸவை பதவிக்கு வர விடக்கூடாது என்பதற்காகவே நாம் இந்த அரசிற்கு ஆதரவை வழங்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் அண்மையில் தெரிவித்துள்ளார்.
அவர் ஆட்சியில் இருக்கும் போது சர்வதேச விசாரணையை நடாத்தமுடியாது. அவரை அந்த பதவியில் இருந்து வீழ்த்தி சரியான ஒருவரை கொண்டு வந்தால் மாத்திரமே  சர்வதேச விசாரணை நடத்த முடியும் என்று மக்களிடம் சொன்னார்கள். அவரிடம் நான் கேக்கிறேன் தேர்தலிற்கு பின்னர் மக்களிற்கு கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக  ஜெனீவாவிற்கு சென்று உள்ளக விசாரணைக்கு சந்தர்ப்பம்  கொடுங்கள் என்றும், சர்வதேச விசாரணை வேண்டாம் என்றும்,  அது முடிந்துவிட்டது என்றும் கூறினீர்களே. எனவே மக்களின் விருப்பத்திற்கு மாறாக நடந்து கொண்டு அவர்களின் காதிலே தொடர்ந்தும் பூச்சுற்றிக் கொண்டு கிடைக்கும் சுகபோகங்களை பெற்று உங்களது குடும்பங்களை வாழவைக்கும் செயற்பாட்டையா மேற்கொண்டுவருகின்றீர்கள்.
மக்களின் உணர்வுகளை புறம் தள்ளிவிட்டு மக்களை முட்டாள் ஆக்கும் கதைகளை தொடர்ந்து பேசிக்கொண்டிருக்க வேண்டாம் என உங்களிடம் கேட்கின்றேன்.
சிங்களமேலாதிக்கத்தை ஏற்படுத்தும் ஒற்றையாட்சி அரசியலமைப்பிற்கு ஆதரவுகொடுத்துவிட்டு, இந்ததீவில் வேறு எதை நீங்கள் எதிர்பார்கின்றீர்கள். அப்படியான அரசியல்யாப்பிற்கு பாராளுமன்றத்தில் முன்மொழிவை வழங்கிவிட்டு தமிழ் மக்களிற்கு சமஸ்டியை வழங்கபோவதாக ஒரு போலி தோற்றபாட்டை காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
தமிழ் மக்கள் எதிர்பார்ப்பது தமிழ்தேசம் அங்கீகரிக்கப்படுகின்ற ஒரு அரசியல்தீர்வு. அதனை கைவிட்டு  சர்வதேசமட்டத்திலே அரசை  பிணை எடுக்கும் வேலையையே கூட்டமைப்பு செய்து வருகின்றது.
அது  தமிழ்மக்களின் 60 வருட கோரிக்கைகளை நீங்கள் கைவிட்டுவிட்டீர்கள் என்பதாகவே அமைகின்றது. தமிழ்மக்களிற்கு விடுதலையை பெற்றுதருவோம் என்ற பூச்சாண்டியை காட்டிகொண்டு இன்னும் எத்தனை காலம் இவர்கள்  கடத்தபோகின்றார்கள்.
தமிழ் தேசிய மக்கள் முண்ணணியின் பிரவேசம் அரசிற்கும் கூட்டமைப்பு மற்றும் மேற்குலக நாடுகளுக்கும் பேதியை கொடுத்திருக்கிறது.
தமிழ் மக்களின் பேரம்பேசும் பலத்தை விட்டுகொடுக்காத ஒரு சக்தி உருவாக போகின்றது.
எனவே, அதனை தடுத்து தமது எடுபிடிகளின் மூலம் மக்களிற்கு எதையாவது வழங்கவேண்டும் என்ற நோக்கிலேயே கம்பரலிய திட்டம்
உருவாக்கபட்டது. அதற்கு  கடந்த தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முண்ணணியின் எழுச்சியே காரணமாக அமைந்துள்ளது. கூட்டமைப்பின் செல்வாக்கை பலப்படுத்தவேண்டும். என்பதற்காகவே அரசாங்கத்தால் அவர்களிற்கு அள்ளி இறைக்கப்படுகின்றது. அது கூட நிலையான அபிவிருத்திக்காக கொடுக்கபடவில்லை. எடுபிடியாக நிற்பவர்களிற்கே கொடுக்கபடுகின்றது. கீரைக்கடைக்கும் எதிர்கடை வேண்டும். கூட்டமைப்புக்கு அடுத்த சக்தியாக முன்னனி எழுச்சி பெற்றமையால் கம்பரலிய கிடைத்திருக்கிறது. இது பற்றி மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
இவர்கள் சலுகை அரசியலை காட்டுவது தமிழ் இனத்திற்கு செய்யும் துரோகமாகவே அமையும். ஒற்றையாட்சி அரசியலைப்பிற்கு ஆதரவு வழங்குகின்றார்கள். ஜெனீவாவிற்கு சென்று அரசிற்கு கால அவகாசம் கொடுக்கிறார்கள். இவற்றை எல்லாம் செய்து விட்டு  சொந்த ஊருக்கு வரும்போது துரோகிகள் என்று மக்கள் தூற்றுகின்ற போதும் கூட தொடர்ந்தும் சம்பந்தனோடு அவரிற்கு பின்னால் நிற்பவர்கள் மூளையில்லா முட்டாள்களா? அவர்களுக்கும்
பொக்கற் நிறைகிறது. அதனால் தான் இப்படி செய்கிறார்கள். எனவே எமது மக்கள் நன்றாக சிந்திக்கவேண்டும். இனியும் சிந்திக்கதவறினால் இந்த தீவு சிங்களதீவாக வெகுவிரைவில் மாறும் எனத் தெரிவித்தார்.