குண்டுத்தாக்குலில் கொல்லப்பட்டவர்களிற்கு அஞ்சலி செலுத்தும் கூகிள்

breaking
  ஶ்ரீலங்காவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மிலேச்சத்தனமான தீவிரவாத தொடர் தற்கொலைக்குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த அப்பாவிப் பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்துமுகமாக கூகுள் இன்றைய தினம் தனது ஶ்ரீலங்காவிற்குரிய முகப்புப் பக்கத்தில் கறுப்பு நிறத்திலான ரிபனை பிரசுரித்துள்ளது. இந்நிலையில் கடந்த உயிர்ப்பு ஞாயிறுதினத்தில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்ட மக்கள் மற்றும் தாக்குதலைக் கண்டித்து இன்றையதினம் 23 ஆம் திகதி தேசிய துக்கதினமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியிருந்தது. இதேவேளை, இன்றைய தினம் காலை 8.30 மணியிலிருந்து 8.33 மணிவரையான 3 நிமிட நேரங்களில் துக்கதினத்தை அனுஷ்டிக்குமுகமாக அனைவரையும் மௌன அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. எனவே உயிரிழந்த மக்களுக்கு மரியாதை செலுத்தும் முகமாகவும், துக்க தினத்தை அனுஷ்டிக்கும் முகமாகவும் கூகுள் தனது முகப்பு பக்கத்தில் கறுப்பு நிறத்திலான ரிபனை வெளியிட்டுள்ளது. மேலும் 8 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் தொகை 310 ஆக உயர்வடைந்துள்ளதுடன் 500 க்கும் அதிகமான மக்கள் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.