தேசியத் தலைவரின் படத்தை ஏன் நாம் வைத்திருக்க முடியாது : உங்களிற்கும் எங்களிற்கும் சட்டம் வேறா?

breaking
  ரோஹண விஜேவீரவின் படத்தை ஜே.வி.பியினர் வைத்திருக்கலாம் என்றால், எமது தலைவரின் படத்தை என் நாம் வைத்திருக்க முடியாது என கேள்வியெழுப்பியுள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன். யாழ் பல்கலைகழக மாணவர்கள், சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் கைதை கண்டித்து, இன்று (4) யாழில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இப்படி கேள்வியெழுப்பினார். ரணில் விக்கிரமசிங்கவிற்காக ஜனநாயகத்தை காப்பாற்ற வழக்கு தொடர்ந்த கூட்டமைப்பினர், இலட்சக்கணக்கான தமிழர்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்படும்போதும், ஏன் மௌனமாக இருக்கிறார்கள் என்றும் கேள்வியெழுப்பினார். அவர் மேலும் தெரிவிக்கையில்- மாணவர்களை பழிவாங்கும் நொக்கத்துடன், பொய்க்குற்றச்சாட்டக்களை சுமத்தி கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளிற்காகவும், கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு போன்ற விடயங்களிற்காகவும் தொடர்ந்து போராடி வருகிறார்கள். 2009 மே மாதத்தின் பின்னரும் தமது சமூக கடமைகளை உணர்ந்து போராடி வருகிறார்கள். அந்த செயற்பாட்டை பொறுக்க முடியாமல், மாணவர்களின் செயற்பாட்டை முடக்க வேண்டுமென்ற நோக்கத்துடனே இந்த கைதுகள் நடந்துள்ளன. இராணுவத்தின் கைதுகளை மிக வன்மையாக கண்டிக்கிறோம். கைதான மாணவர்களும், பல்கலைகழக சிற்றுண்டிச்சாலை உரிமையாளரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். இந்த கைதுகளின் மூலம் மாணவர்களின் கல்வியும், சிற்றுண்டிச்சாலை உரிமையாளரின் பொருளாதாரமும் அழிக்கப்படுகிறது. முன்னாள் போராளிகள் தமது தொழில் நடவடிக்கைகளை தொடர முடியாமலே திடீர் திடீர் என கொழும்பு, வவுனியாவிற்கு விசாரணைக்கு அழைக்கப்படுகிறார்கள். அடிக்கடி விசாரணைக்கு அழைக்கப்படுவதால் அவர்களின் பொருளாதாரம் அழிக்கப்படுகிறது. இந்த அரசிடமும், அரசுக்கு முண்டு கொடுக்கும் கூட்டமைப்பினரிடமும் நான் கேட்பது, உரிமைக் கோரிக்கைகளையும், அடையாளங்களையும் அழித்து வாழ்வதுதான் நல்லிணக்கமா? தமிழ் மக்கள் போராடியிருக்கிறார்கள். அந்த போராட்டத்தை நினைவுகூர விரும்பகிறார்கள். போரில் இறந்தவர்களை, மக்களை, போராளிகளை நினைவுகூர அனுமதித்துள்ளதாக உலகத்திற்கு கூறுகிறீர்கள். 2016ஆம் ஆண்டு மாவீரர்தின நிகழ்வுகளை கூட்டமைப்பு எம்.பிக்கள், மாவீரர் துயிலுமில்லங்களில் சுடரேற்றி ஆரம்பித்தார்கள். இதன்மூலம், 2017 மார்ச்சில் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான விவகாரம் ஆராயப்பட்டபோது, போரில் இறந்த அனைவரையும் நினைவுகூர அனுமதிக்கப்பட்டதாக சொன்னார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பும், அரசும் சேர்ந்து நாடகமாடி சர்வதேச விசாரணையிலிருந்து தப்பித்து, உள்ளக விசாரணைக்கான வாய்ப்பை பெற்றுக்கொள்ள இந்த நாடகத்தை ஆடியுள்ளீர்கள். ஆனால் இங்கே நடப்பதென்ன? இராணுவத்தின் முகாம்களை தாக்கியழித்து, மிகப்பெரிய அழிவுகளை ஏற்படுத்தி, சாதனை படைத்த மாவீரர்களிற்கு துயிலுமில்லத்தில் கொடியேற்றிய எம்.பிக்களை இடுப்பிலே வைத்துள்ளது இந்த அரசாங்கம். இவர்கள் அப்படி செய்கிறார்கள் என நம்பி, படங்களை தங்களுடைய அலுவலகத்தில் வைத்திருந்த – மாணவர்கள் படத்தை மாட்டியிருக்கலாம்- மாணவர்கள் கைது செய்யப்பட்டு, பலியாக்கப்பட்டுள்ளனர். அதுவும், கைது செய்யப்பட்ட இந்த மாணவர்களிற்கும், அந்த படங்களிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பல்கலைகழக சிற்றுண்டிச்சாலையில், திலீபனின் படம் வைத்திருந்தவர் கைது என செய்தி வந்திருந்தது. ஊடகங்களில் அப்படி வந்தது கவலையானது. ஏனெனில், திலீபனின் படம் இருந்த இடத்திற்கு அவர் செல்லவே முடியாது. பல்கலைகழகத்தில் அவருக்கு சிற்றுண்டிச்சாலை ஒப்பந்தத்தின்படி, சிற்றுண்டிச்சாலை காசு பெறுமிடத்திற்கும், சமையலறைக்கும் மட்டும்தான் அவர் செல்லலாம். மாணவர் சாப்பிடுமிடத்திற்கு கூட செல்ல முடியாது. இதெல்லாம் எத்தனையோ வருடங்களின் முன் அங்கு மாட்டப்பட்ட படங்கள். நல்லூரில் திலீபனின் நினைவிடத்தில் நினைவஞ்சலி நடத்த முடியாதென தடை விதிக்கப்பட்டபோது, கூட்டமைப்பினர்தானே பறந்து வந்து, நாங்கள் அனுமதியெடுத்திருப்பதாக சொன்னார்கள். அப்படி சொன்ன கூட்டமைப்பினரால், இந்த விடயத்தை என் தட்டிக் கேட்க முடியாமல் போனது? பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், சந்தேகமென்றால் கைது செய்யப்படுவார்கள் என கூற இங்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேவையில்லை. 2015ஆம் ஆண்டிலிருந்து இந்த அரசாங்கத்திற்கு ஒத்துழைத்து, சர்வதேச விசாரணையிலிருந்து மீட்டெடுத்து, உள்ளக விசாரணைக்கு வாய்ப்பேற்படுத்திக் கொடுத்ததன் மூலம், இந்த மக்களிற்கு நீங்கள் பெற்றுக்கொடுத்தது என்ன? தீர்வை பெற்றுக்கொடுத்தீர்களா? இல்லை. கைது செய்யப்பட்டவர்களை விடுவித்துள்ளீர்களா? இல்லை. கைதுகளை நிறுத்தியிருக்கிறீர்களா? இல்லை. சுமந்திரனின் பெயராலேயே 2015ஆம் ஆண்டின் பின் பெருமளவான இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில் உள்ளனர். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டுமென ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்திருக்கிறார். இந்த சட்டம் நீக்கப்படாமலேயே 2015ஆம் ஆண்டில் நீங்கள் அரசுக்கு காலஅவகாசத்தை பெற்றுக்கொடுத்திருக்கிறீர்கள். உள்ளக விசாரணைக்கு சந்தர்ப்பத்தை கொடுத்தீர்கள். 2017ஆம் ஆண்டில் இரண்டு வருட காலஅவகாசத்தை கொடுத்திருக்கிறீர்கள். இந்த வருடம் மீண்டும் போய் இரண்டு வருட காலஅவகாசத்தை கொடுத்துள்ளீர்கள். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கியிருந்தால், இன்று எமது மாணவர்களிற்கு இந்த நிலைமை வந்திருக்காது. 30 வருட யுத்த காலத்தில், அரசாங்கத்துடன் இருந்தவர்களை தவிர, வெளியிருந்த தமிழ் தரப்புக்கள் அவசரகால சட்டத்தை ஆதரிக்கவில்லை. காரணம் பயம். என்றாலும், அரசாங்கம் தான் விரும்பிய சட்டங்களை உருவாக்கிக் கொண்டிருந்தது. இப்போது நீங்கள் என் அவசரப்பட்டு, அவசரகால சட்டத்தை ஆதரிக்கிறீர்கள்? 3 முஸ்லிம் தலைவர்கள் கைது செய்யப்பட வேண்டுமென தென்னிலங்கையில் பலம்மிக்க அரசியல் தலைவர்களால் சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் அவர்களில் கைவைக்க அரசாங்கம் பயப்பிடுகிறது. கைவைத்தால் அரசாங்கம் கவிழ்ந்து விடும். ஆனால் இலட்சக்கணக்கான மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கும்போது, கண்ணைமூடிக்கொண்டு ஆதரிக்கிறீர்கள். எந்த அடிப்படையில் ஆதரித்தீர்கள்? ரணிலை நீக்கி, மஹிந்த பிரதமராக்கப்பட்டபோது, ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கென ஓடினீர்கள். இன்று ஒட்டுமொத்த தமிழர்களின் ஜனநாயகமும் கேள்விக்குள்ளாகியுள்ளது. ஏன் இதற்கு உங்களால் வழக்குப்போட முடியவில்லை? சமூக விஞ்ஞான மருத்துவ பிரிவில், விழிப்புணர்விற்காக செயலிழந்த கிளைமோரின் வெடிபொருட்கள் அகற்றப்பட்ட பிளாஸ்டிக் பாகங்கள் வைக்கப்பட்டிருந்தது. அதை பல்கலைகழக நிர்வாகம்தான் செய்தது. அதையெடுத்து வந்து வந்து, மாணவர்களின் தலையில் கட்ட முயற்சித்தது. பொலிசும் அதற்கு ஒற்றைக்காலில் நின்றது. எமது சட்டத்தரணிகள் அதற்கு எதிராக வாதிட்டார்கள். அப்படியென்றால் பொலிசின் நோக்கமென்ன? ஒட்டுமொத்தமாக தமிழர்களிற்கு எதிரான மனநிலையுடன்தான் செயற்பட்டு கொண்டிருக்கிறார்கள். நாங்கள் காலை 10.30 மணியிலிருந்து இரவு 9 மணிவரை பொலிஸ் நிலையப்பகுதியில்தான் நின்றோம். ஆனால் எமது நியாயத்தை கேட்கவில்லை. நாடாளுமன்றத்தில் அவசரகால சட்டத்தை ஆதரித்து விட்டு, திடீரென பொலிஸ் நிலையத்திற்கு வருகிறார்கள், மாணவர்களை மீட்கப் போகிறோம் என. நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் இந்த சட்டங்களை தமிழர்கள் மீது பிரயோகிக்க ஒருநாளும் அனுமதிக்க முடியாது. இராணுவம் வெளியேற்றப்பட வேண்டுமென்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. எதிர்வரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை மிகப்பெருமளவில் ஒழுங்குபடுத்தியுள்ளது. நினைவேந்தலை தடுத்து நிறுத்தும் நோக்கமும் இந்த கைதின் பின்னால் உள்ளது. தென்பகுதியில் குண்டுவெடிக்க, இங்கு இராணுவம் தேடுதல் நடத்த ஓடிப்போய் சோடா கொடுத்தவர்கள் யோசிக்க வேண்டும். இந்த இராணுவத்திற்கு பொட்டு வைப்பவர்கள் யோசிக்க வேண்டும். இராணுவத்திற்கு ஆலாத்தி எடுப்பவர்கள் யோசிக்க வேண்டும். உங்கள் பிள்ளைகளிற்கும் நாளை இந்த கதி வருமென்பதை மறக்ககூடாது. ஜேவிபி ரோஹண விஜேவீரவின் படத்தை வைத்திருக்கலாமென்றால், ஏன் நாம் எமது தலைவரின் படத்தை வைத்திருக்க முடியாது. இந்த பத்து வருடத்தில் நல்லிணக்கம், கப்பலை ஆட்டக் கூடாது, படகை ஆட்டக்கூடாது என சொன்னவர்கள், ஆகக்குறைந்தது இதையாவது பெற்றுத்தர முடிந்துள்ளதா? இதுவரை தீர்வை பெறுவதற்காக அரசாங்கத்துடன் ஒத்துழைத்தீர்கள். இனி பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த அரசாங்கத்துடன் ஒத்துழைக்கப் போகிறீர்கள், எமது மக்களை பலிகொடுத்து. மாணவர்கள், சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். அல்லது, பொதுஅமைப்புக்களுடன் இணைந்து போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றார்.